சனி, 20 பிப்ரவரி, 2016

கருப்பாக இருப்பவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல!

உலகமயமாக்கலின் மூலம் இங்கு நுழைந்த கார்ப்பரேட் பேய்கள்,  கருப்பினை நமக்கு அசிங்கமானதாக மூளைச் சலவை செய்து வெள்ளை நிறத்தைப் பெற களிம்புகளை நோக்கி ஓட வைத்தன. கருப்பாக இருக்கும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வினை ஏற்படுத்தி இருப்பவை இந்த காஸ்மெடிக்ஸ். ஏழு நாட்களில் சிகப்பழகு என்ற விளம்பரம் பொய் என்று தெரிந்தும் அதனை வாங்க வைத்திருப்பதன் மூலம் நம்மை ஏமாளிகளாக்கி கொழுத்து பெருத்திருக்கின்றன இந்தப் பெருநிறுவனங்கள்.
என்னதான் நாம் நவநாகரீக மனிதர்களாக மாறி இருந்தாலும், நமது உடையும் பேச்சும் மாறி இருக்கும் அளவுக்கு நமது மனநிலை மாறவில்லை என்பதே உண்மை. அதில் முக்கியமானது இந்த நிறம். 'சிவிலைஸ்டு சொசைட்டி' ( Civilized Society )  என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம், உண்மையில் நிறம் என்ற ஒன்றை காட்டுமிராண்டி தனமாக தூக்கிப் பிடித்துக்கொண்டுதான் நிற்கிறோம். அதுவும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிற வேறுபாடு குறித்த எண்ணம் ஆழமாக வேறூன்றி கிடக்கிறது.
சிறிது நிறம் குறைவான பெண் என்றால் அதிகமான வரதட்சணை கேட்பது தொடங்கி, நிறம் குறைவானவர்களின் மீதான நம்பகத்தன்மை வரை நிறம் தொடர்பான நமது பிற்போக்கான  எண்ணம் விரவிக்கிடக்கிறது.
இன்னொருபுறம்  நிறத்தின் பின்னே நம்மை ஓட வைக்கின்றன சில பெரு நிறுவனங்கள். உண்மையில் இன்றைய மாணவர்கள் நிறத்தினால் பல இடங்களில் உளவியல் ரீதியாக பலத்த மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இதில் பெண்களின் நிலைதான் மிகவும் மோசம். இந்த நவீன உலகத்தின் நிற வேறுபாட்டைப் பற்றிதான்,  விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர் சென்னை கிறித்துவக் கல்லூரி இதழியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள்.

“எனக்கு 'ரேம்ப்வாக்' ( Ramp walk) ரொம்ப பிடிக்கும். நான் கல்லூரி அளவுல முதல் ஆண்டு சிறந்த மாடலா செலக்ட் ஆனாலும், அடுத்த நிலைக்குப் போக என்னுடைய நிறம் எனக்கான மிகப் பெரிய சவாலா இருந்தது. ஒரு மெட்ரோபாலிட்டன் சிட்டில, நான் என் நிறத்துக்காக ஒதுக்கப்படுறத என்னால ஏத்துக்க முடியல. இது எவ்வளவோ மக்கள் மனசுல பொதஞ்சி இருக்கு. இத எப்படியாவது மாத்தணும்” என்கிறார் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான தலைமைக்குழுவைச் சேர்ந்த ஸ்ரீவர்த்தினி.

பிறந்தது முதலே தொடங்கும் இந்த நிறம் சார்ந்த பிரச்னை  பிள்ளை களின் மனதில் முழுமையாக பதிவது பள்ளி நாட்களில்தான். எப்படி மதத்தையோ, ஜாதியையோ நாம் தீர்மானிக்காமலேயே நம் மீது முத்திரை குத்தப்படுகிறதோ அது போன்றதுதான் இந்த நிறமும், நாம் பிறக்கும் முன்னே நம்மில் ஏறிக்கொள்கிறது.  தான் தீர்மானிக்காது தன் மீது குத்தப்பட்ட முத்திரைக்கு பிள்ளைகள் கொடுக்கும் விலை மிகப்பெரியது. தொடர்ந்து பெண்கள் என்னதான் அதிகமாக பாதிக்கப்பட்டாலும்,  ஆண்களும் இந்த நிற வேறுபாட்டால் போராட்டங்களை சந்திக்கவேண்டி உள்ளது.

 “என்னை முத்தல்ல எல்லாரும் ஒரு வேற்றுக் கிரக மனுஷன் மாறிதான் பாக்குறாங்க. அதுக்கு என் நிறமும் ஒரு காரணம்னு எனக்கு புரியுது. இந்த கலரால நிறைய இடங்கள்ல அவமானங்கள சந்திச்சி இருக்கேன். ஆனா, அது என் தப்பில்லையே?” என்று கேட்கிறார் அஸ்வந்த்.

‘தன்னை ஏற்றுக் கொள்ளுதல்’ என்ற முதிர்ச்சி பெரியவர்களுக்கே இல்லை என்னும்போது சிறு பிள்ளைகளின் நிலை எண்ணிப்பார்க்க முடியாததாகவே உள்ளது. சிறுவயதில் இருந்தே மிகப் பெரும் மன உளைச்சலை சுமந்து வருவது மிகவும் வலியைத் தரக்கூடிய ஒன்று.

“நான் ஸ்கூல் படிக்கும் போது இன்னும் குண்டா இருந்தேன். அப்போ ரெண்டுத்துக்கும் சேத்து வச்சி மோசமா கமென்ட் பண்ணுவாங்க. இப்போவும் என் கலர் பத்தி ‘அட்டு ஃபிகரு’ மாறி நெறையா கமெண்ட்ஸ் வரும். சில நேரங்கள்ல பெருசா தெரியாது. சில நேரங்கள்ல ரொம்ப கஷ்டமா இருக்கும். அவங்களுக்கு அவ்ளோதான் அறிவு இருக்குனு விட்டுடுவேன்” என்கிறார் ரக்ஷானா.

" வெப்ப மண்டல பகுதியைச் சேர்ந்தவன் கருப்பாகத்தான் இருப்பான். இருப்பினும் கருப்பின் மீதான இந்த ஒவ்வாமை என்பது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், உண்மையில் அது தொடங்கியது தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகுதான். அவர்களுக்கு பின்னர் வந்த  அனைத்து ஆட்சியாளர்களுமே தமிழர்களை விட சற்று அதிகமான வெள்ளை நிறத்தைக் கொண்டவர்கள்; அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. வெள்ளை நிறம் அதிகாரமும் ஆன்மீகமும் நிறைந்ததாகக் காட்டப்பட்டது; கருப்பு நிறமுடையவர்கள் ஆளப்படுபவர்களாகவும், அழகற்றவர்களாகவும், அதிகாரத்திற்கு தகுதி அற்றவர்களாகவும் கருதப்பட்டனர்" என்கிறார் பேராசிரியர் தொ.ப.

உலகமயமாக்கலின் மூலம் இங்கு நுழைந்த கார்ப்பரேட் பேய்கள்,  கருப்பினை நமக்கு அசிங்கமானதாக மூளைச் சலவை செய்து வெள்ளை நிறத்தைப் பெற களிம்புகளை நோக்கி ஓட வைத்தன. கருப்பாக இருக்கும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வினை ஏற்படுத்தி இருப்பவை இந்த காஸ்மெடிக்ஸ். ஏழு நாட்களில் சிகப்பழகு என்ற விளம்பரம் பொய் என்று தெரிந்தும் அதனை வாங்க வைத்திருப்பதன் மூலம் நம்மை ஏமாளிகளாக்கி கொழுத்து பெருத்திருக்கின்றன இந்தப் பெருநிறுவனங்கள்.

இந்த நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இருக்கும் ஒரு நோய். அந்நோய் இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் மூலம் இளைஞர்கள் இடத்தில் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். இதற்கு எங்கள் துறையில் இருந்தும் முழு ஆதரவு கிடைக்கிறது” என்கிறார்கள் இந்த மாணவர்கள்.
பிறந்ததில் இருந்து நமது குணத்தை தீர்மானிப்பதில் இருந்து (வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டன் டா), நமது இடத்தை அல்லது நிலையை தீர்மானிப்பது வரை இந்த நிறம் அதனது ஆதிக்கக்கரங்களை செலுத்துகிறது. இன்றைக்கும் நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இயங்கிக் கொண்டு இருப்பது அதன் உண்மை நிலையை விளக்குகிறது.


திற அல்லது திரை நீக்கு என்று பொருள்பட அன்வெய்ல் (Unveil) என்று இந்த நிகழ்விற்கு பெயர் வைத்துள்ளனர். 'கான்ஃபிடன்ஸ் இன் அப்பியரன்ஸ்' ( Happiness in appearance)  என்ற டேக் லைனுடன்,  டார்க் அண்ட் லவ்லி ( என்ற ஹாஷ் டேக்கையும் தீர்மானித்துள்ளனராம். இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வில் பெசன்ட் நகர் கடற்கரையில் பேரணி, வீதி நாடகம் மற்றும் பிரபலங்களுடன் விவாதித்தல் என்று பல்வேறு நிகழ்வுகளை செய்ய உள்ளனராம். இதற்கான முன்னோட்டமாக ஒரு வீடியோ ஒன்றையும் இவர்கள் யூ டியூபில் வெளியிட்டுள்ளனர்.
- ரமணி மோகனகிருஷ்ணன்
படங்கள் : ஜக்கோப் பரத்
(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

கருத்துகள் இல்லை: