திங்கள், 15 பிப்ரவரி, 2016

அதிமுகவில் சீட்டுக்காக பால்காவடி பன்னீர் காவடி புஷ்பக்காவடி யோய்...அலகு..மண்சோறு...தீமிதிப்பு...

சீட்' எங்களுக்கே: ஐவர் அணி ஆதரவாளர்கள் அலம்பல் வேட்பாளர்களை முதல்வரே தேர்வு செய்ய வேண்டுகோள்
'நாங்கள் எல்லாம் ஐவர் அணி ஆதரவாளர்கள்; இந்த தேர்தலில் எங்களுக்கே, 'சீட்' கிடைக்கும்' என, அ.தி.மு.க.,வில் பலர் அலம்பலை ஆரம்பித்துள்ளதால், கட்சியின் உண்மையான விசுவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'அலம்பலில் ஈடுபடுவோரின் கொட்டத்தை ஒடுக்க, முதல்வரே வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்; நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


26 ஆயிரம் மனுக்கள்:
தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அ.தி.மு.க.,வில் மொத்தம், 26 ஆயிரத்து, 174 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இவற்றில், 7,936 மனுக்கள், 'ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும்' எனக்கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை தவிர்த்தால், தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும் போட்டியிட, 17 ஆயிரத்து, 698 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த விருப்ப மனுக்களை பரிசீலனை செய்யும், மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற ஐவர் அணியினர், தொகுதிக்கு மூன்று பேர் என்ற அடிப்படையில், பட்டியல் ஒன்றை தயாரித்து, அதை முதல்வரிடம் வழங்க உள்ளனர். அதன்பின், மூன்று பேரில் ஒருவர் என்ற அடிப்படையில், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெ., வெளியிடுவார்.கடந்த லோக்சபா தேர்தலின் போது, ஐவர் அணியினர் தயாரித்துக் கொடுத்த பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்களையே, முதல்வர் அறிவித்ததால், இம்முறையும் அதேபோல் தான் நிகழும் என, ஐவர் அணியின் எடுபிடிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் நம்புகின்றனர்.

தேர்தல் பணி துவக்கம்:
அதனால், ஐவர் அணிக்கு வேண்டியவர்களைச் சந்தித்து, கவனிக்க வேண்டியதை கவனித்து,
வேட்பாளர்கள் பட்டியலில், தங்களின் பெயர் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளைபலர் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி செய்தவர்கள் எல்லாம், இப்போது தொகுதிகளில், தாங்களே வேட்பாளர் என்றும், தங்களுக்கே, 'சீட்' என்றும் கூறி, அலம்பலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், மேலோட்டமாக தேர்தல் பணிகளையும் துவக்கி விட்டனர். இது, அ.தி.மு.க.,வின் உண்மையான விசுவாசிகளையும், முதல்வர் எப்போதும் நல்லது செய்வார் என, நம்பியிருப்பவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எனவே, 'இந்த விஷயத்தில், முதல்வர் தலையிட்டு, வேட்பாளர்களை அவரே தேர்வு செய்ய வேண்டும்; அலம்பலில் ஈடுபட்டுள்ளோருக்கு, வேட்டு வைக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டமிட்டு தயாரிக்கப்படும் பட்டியல்:
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், அ.தி.மு.க.,வின் செல்வாக்கு ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், ஜாதி, மத வேறுபாடின்றி, கட்சியின் எந்த ஒரு தொண்டனும் எந்தப் பதவிக்கும் வர முடியும் என்பதை, முதல்வர் ஜெ., பல முறை செய்து காட்டியதே; அது இனியும் தொடர வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், முதல்வரின் விசுவாசிகளும் விரும்புகின்றனர்.அ.தி.மு.க.,வில் முக்கிய பணிகளை கவனிக்கும் ஐவர்அணியினரின் ஆதரவாளர்கள் பலரே, தற்போது மாவட்ட செயலர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் தரும் பட்டியல் அடிப்படையிலும், தங்களுக்கு வேண்டியவர்கள், துதிபாடுவோர் என்ற அடிப்படையிலுமே, ஐவர் அணியினர், தொகுதிக்கு
Advertisement
மூன்று பேர் என்ற பட்டியல் தயாரித்து, முதல்வரிடம் கொடுக்க உள்ளனர்.இவர்கள் தயாரிக்கும் பட்டியலில், மக்கள் மத்தியில் அறிமுகமாகி, கட்சிக்கு விசுவாசியாக களப்பணியாற்றக் கூடியவர்கள் புறக்கணிக்கப்படுவர் என்பது நிச்சயம். அதற்கேற்ற வகையில், ஐவர் அணியின் ஆதரவாளர்களாக உள்ள பலர், இப்போதே, தங்களுக்குத் தான் இம்முறை, தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்கும் என, தொகுதிகளில் அலம்பலை ஆரம்பித்து விட்டனர். தங்களுக்கு வேண்டியவர்கள் ஆலோசனைப்படி, தேர்தல் பணிகளையும் துவக்கி விட்டனர்.தங்களது விசுவாசிகள் வேட்பாளர்களானால், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து செயல்படுவர் என திட்டமிட்டு, மாவட்ட செயலர்களுடன் இணைந்து, ஐவர் அணியினர் தங்களுக்கு சாதகமான பட்டியலை தயாரித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த, லோக்சபா தேர்தலில், தேர்வான எம்.பி.,க்களில் பெரும்பாலானோர், ஐவர் அணி ஆதரவாளர்கள் என்பதால், தற்போது அவர்கள் எல்லாம், இந்த அணியினரை அதிகம் சுற்றி வருகின்றனர்; மற்றவர்களை கண்டு கொள்வதில்லை.எனவே, அ.தி.மு.க.,வின் உண்மையான விசுவாசிகளை மட்டுமே, வேட்பாளர்களாக முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்ய வேண்டும். ஐவர் அணியினர் தரும் பட்டியலை, நன்கு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்குகளில், லஞ்ச புகார்களில் சிக்காத நல்லவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும் என, தொண்டர்கள் பலரும் விரும்புகின்றனர். இப்படி செய்வதன் மூலம், கட்சி மேலும் செல்வாக்கு அடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: