அங்கோர்வாட்டுக்கு வடக்கே 20 கிலோமீற்றருக்கு அப்பால் குலன் மலையின்
(Kulen Mountain) காலடியில் ராஜேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட
அழகான முக்கியமான ஆலயமாகும்.
இதன் இன்றைய பெயர்
Banteay Srei
என்றாலும் அதன் உண்மையான பெயர் சமஸ்கிருதத்தில் திரிபுவனேஸ்வரா
ஆலயம் (மூவுலகக் கடவுள் ஆலயம்). ஆனால், இப்பொழுது வழங்கப்படும் Bantay
Srei என்பதற்கு ‘பெண்களின் கோட்டை’ என்று சொல்லப்படுகிறது. இது
மன்னரின் கோயிலன்று. மன்னர் ராஜேந்திரவர்மனின் ஆலோசகர் யஜ்நவராஷா
என்பவர் கட்டியது. இவர் ஐந்தாவது ஜெயவர்மனுக்கும் குருவாக
இருந்தவர்.
கெமர் கலையின் இரத்தினம் என புகழப்பட்ட இந்த அழகான கோயில் 1912இல்தான்
வெளி உலகிற்கு தெரியவந்தது. இது மற்ைறய கோயில்களைவிட சற்று
வித்தியாசமாகத் தெரிவதற்கு முக்கிய காரணம் இளஞ்சிவப்பு நிறத்து
மண்ணாலான கற்களால் கட்டப்பட்டுள்ளமையேயாகும். இந்த
நிறத்தினால் கோயிலில் ஆங்காங்கே செதுக்கப்பட்டுள்ள சிலைகள்
பளிச்சிடுகின்றன.
இராமாயணக் காட்சிகள், மகாபாரதக்காட்சிகள், இராவணன் கைலாச மலையை
அசைப்பது, காமன் சிவன் மீது மன்மதப்பாணம் விடுவது, துர்க்கையின்
வடிவம், நரசிம்ம அவதாரம், சிவ, பார்வதி என பல சிற்பங்களாக
செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் பார்க்கும்போது சிற்பிகளின்
கைவண்ணமும் அவை செதுக்கப்பட்ட நேர்த்தியும் பளிச்சிட்டன. ஏனைய
கோயில்களைவிட இந்திய பாணியிலான கோயில் கட்டட அமைப்பு அதிகமாக
இதில் இருந்தது.
அங்கோர்வாட்டின் அருகருகே திரும்பிய பக்கமெல்லாம் அங்கோர் பேரரச
மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் 50இற்கும் மேலே இருந்தன. ஆலயம் கட்டுவதில்
போட்டி இருந்ததால் ஒவ்வொரு மன்னர்களும் வெவ்வேறு ஆலயங்களை,
அரண்மனைகளை கட்டிவைத்தனர்.
அங்கோர் பேரரசின் அடுத்தடுத்து தொடர்ந்து ஆட்சியைத் தொடர்ந்த 25இற்கும்
மேற்பட்ட மன்னர்களில் 6 மன்னர்களைத் தவிர ஏனைய மன்னர்கள் தங்களது
ஆட்சிக் காலத்தில் ஏதோ ஒரு கட்டடங்களை கட்டி அரசுக்கு வரும் நிதியை
பெருமளவு செலவு செய்திருக்கிறார்கள். அவ்வாறு செலவு செய்தது
வீணாகவில்லை. அவை இன்று கம்போடியாவிற்கும் கெமர் பேரரசின்
புகழுக்குமே காரணமாயிருக்கின்றன.
அடுத்து பார்க்கச் சென்றது பிரஸாத் க்ராவன்
(PRASAT KRAVEN)
என்ற ஆலயம். அது முதலாம் ஹர்ஷவர்மன் மன்னனால் மகாலஷ்மிக்காக
கட்டப்பட்டது. 5 கோபுரங்கள் வரிசையாக அமைந்து ஒரு தாமரைப்போல்
காணப்படும் ஆலயத்தில் உள்ள பழைய ஓவியங்கள் அழியாமல் இன்னமும் காட்சி
தருகின்றன. விஷ்ணுவின் வாமன அவதாரமும் 4 மற்றும் 8 கைகளோடு லக்
ஷ்மியும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
அவற்றையெல்லாம் நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு பெருமைமிக்க
அங்கோர் நகரத்தின் முதற் கோயிலுக்கு போனேன். சியாமரீப்பிலிருந்து தென்
கிழக்காக 13 கிலோ மீற்றர் தூரத்திற்கு தனது தலைநகரைக் கொண்டு போனான்
யசோவர்மன். அந்த தலைநகரிற்கு அவன் வைத்த பெயர் ‘யசோதரபுர’ ஆகும்.
4கிலோ மீற்றர் சதுர அளவைக் கொண்ட இந்தத் தலைநகரம் ‘அங்கோர் தொம்’மை விடப்
பெரியது.
இந்தத் தலைநகரிலுள்ள மலைக்குன்றில் ஒரு அழகான சிவன் கோயில்
கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் நடுநாயகமூர்த்தி லிங்கமாகும்.
ஆகவே, இக்கோயிலை யசோவர்மன் கட்டியதால் யசோதரேஸ்வராக் கோயில் என
அழைத்தனர். இக்கோயில் 65 மீற்றர் உயரமுள்ள 5 நிலை கோபுரத்துடன்
அமைந்துள்ளது.
இந்து எண்கணித அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோயிலான நொம் பெகங்க்
(PHNOM BAKHENG) 108 சிறிய கோபுரங்கள் வளர்பிறை, தேய்பிறை நாட்களைக்
குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள்
இந்த மலைக் கோயிலுக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தை கண்டு
மகிழ்கின்றனர். இந்த சூரிய ஒளியில் அங்கிருந்து அற்புதமாக காட்சி
தரும் அங்கோர்வாட்டையும் காண்கிறார்கள். மலை மீது நடந்து ஏற
முடியாதவர்களுக்கு யானை மீது ஏறிப் போகிற சவாரியும் உண்டு.
கெமர் பேரரசு மன்னர்கள் பல அற்புதமான கட்டடக்கலை அழகுடன் கூடிய
ஆலயங்களை கட்டியபோதும் அவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது
அங்கோர்வாட் என்ற பெருங்கோயில். ஆகவே, சியாமரீப்பைச் சுற்றியுள்ள
இந்த ஆலயங்கள் அனைத்தையும் மொத்தமாக அங்கோர்வாட் எனப் பெயரிட்டு
அழைக்கின்றனர். இந்த ஆலயங்களின் அழகையும், கட்டடக்கலையின்
நுணுக்கங்களையும் நின்று நிதானமாகப் பார்க்க வேண்டுமானால்
முழுமையாக 5 நாட்கள் வேண்டும். ஆயிரக்கணக்கான சிற்பிகள்
ஆயிரக்கணக்கான நாட்களில் செதுக்கிய சிற்பங்களைப் பார்க்க செலவிட
முடியாதா என்ன?
அன்று மாலை மலேஷியா திரும்ப வேண்டும். காலைப் பொழுதை வெறுமனே கழிப்பதா என
யோசித்தபோது ஆட்டோ ஓட்டியான் சொன்னான் தென்கிழக்கு ஆசியாவிலேயே
மிகப் பெரிய குளம் இருக்கிறது. போய்ப் பார்க்கலாமே என்றான்.
அவனிடம் ஆட்டோவுக்கான கட்டணத்தைக் கேட்டேன் யு.எஸ்.டொலரில் கட்டணம்
சொன்னான். பேரம் பேச அவசியம் இல்லாததால் ஒப்புக்கொண்டேன்.
கம்போடியாவுக்கென ரீல் என நாணயம் இருந்தபோதும் யு.எஸ். டொலரில்தான்
பெரும்பாலான வர்த்தகம் நடக்கிறது. கடைகளில் பொருள் வாங்கும்போது
யு.எஸ். டொலரைக் கொடுத்தால் கம்போடியா நாணயத்தில் மீதி கிடைக்கும்.
50 நிமிட ஓட்டத்தில் அந்த குளத்திற்கு வந்தது ஆட்டோ. குளத்தைப்
பார்த்தேன் கண்ணுக்கு எட்டிய தூரம் செம்மண் நிற நீர் கடல் போன்று
நிறைந்திருந்தது. குளத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏராளமான
படகுகள் கிழித்துக் கொண்டு ஓடின. ஒரு படகில் நானும் போனேன். ‘யான்’
சொன்னான். இது பெருங்குளம் மழை காலத்தில் 16,000 சதுர கிலோமீற்றரில்
தண்ணீர் நிற்கும்.
மற்றைய காலத்தில் 3000 சதுரகிலோமீற்றரில் தண்ணீர் இருக்கும். இந்தக்
குளத்தில் படகு வீடுகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மிதந்து கொண்டே
வாழ்கிறார்கள். இவர்களுக்கான கூடைப்பந்தாட்ட அரங்கு, மருத்துவ
நிலையம், பள்ளிக்கூடம், தேவலாலயம், கடைகள் என்பன தண்ணீரில்
மிதக்கின்றன.
இங்கு வாழும் மக்களுக்கு மீன்பிடித்தலே முக்கிய தொழில். உப தொழிலாக
பயணிகளிடம் நினைவுப்பொருள் விற்கிற தொழில் உண்டு. சிறுவர்கள் இதில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அது இங்கு மட்டுமல்ல அங்கோர்வாட்டைச்
சுற்றியிருக்கின்ற கோயில்களில் பயணிகளைக் கண்டால் புத்தகம்,
நினைவுச்சின்னங்கள் என்பவற்றை விடாப்பிடியாக விற்கின்றார்கள்.
இந்தச் சிறுவர்கள் எவரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் பிச்சை
கேட்பதில்லை. எதையாவது விற்கிற ஆர்வத்தில் துரத்துவார்கள். அவர்கள்
சொல்லும் விலைக்கு வாங்காமல் பேரம் பேசலாம். உதாரணமாக 15 யு.எஸ்.
டொலர் என்றால் உங்கள் பேரம் 3இலிருந்து 5 வரை போகலாம்.
படகைவிட்டு இறங்கி வெளியே வந்தபோது ஒரு கம்போடியப் பெண் ஒரு நினைவுக்
கோப்பையை என்னிடம் கொடுத்தாள். அதில் என்னுடைய படம்
அச்சிடப்பட்டிருந்தது. என்னைக் கேட்காமலே என்னைப் படம் பிடித்து
கோப்பையில் அச்சிட்டிருக்கிறார்கள்.
கோப்பையை வேண்டாம் என்றால் என்மீது கோபமும் நட்டமும் வரலாம். ஆகவே,
அந்தக் கோப்பையை நினைவுப் பொருளாக வாங்கினேன். விடுதிக்கு திரும்பும்
வழியில் சியாம்ரீப் நகரைப் பார்த்தேன். சிறிய நகரம். ஆனால்
அங்கோர்வாட்டால் உலகப் புகழ் பெற்றுள்ளது.
நகரில் பெரிய, சிறிய தங்கும் விடுதிகள் நிறைய இருந்தன. அந்த தங்கும்
விடுதிகளில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அங்கோர்வாட்டின் நினைவு
தெரிவதுபோல் ஏதோ ஒன்று இருந்தது. ஒன்று பெயரில் அங்கோர்வாட் இருக்கும்.
அல்லது அங்கோர் வாட்டில் உள்ள சின்னங்களில் ஏதோவொன்று இருக்கும். ஒரு
மிகப் பெரிய விடுதியின் முகப்பில் பிள்ளையார் சிலை இருந்தது. இன்னொரு
விடுதியில் வாசுகி பாம்பை இழுக்கும் தேவர்களின் சிலைகள் இருந்தன.
கம்போடியாவைப் பொறுத்தவரை யில் அங்கோர்வாட் என்ற வார்த்தை
உலகத்தைக் கவரும் வார்த்தை. ஆகவே, அதனை மக்கள் வர்த்தக த்திற்கும்
பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அங்கோர் (Anghkor) என்ற பெயரில்
மதுபானம் (பியர்) விற்பதுதான் நெருடலாக இருந்தது. அங்கோர் என்றால்
புனிதம். அப்படியானால் அங்கோர் பியர் புனிதமானதா? ஒரு மொழியிலோ,
தத்துவத்திலோ, சமயத்திலோ வர்த்தகம் புகுந்துவிட்டால் அதன் தன்மை
கெட்டுப்போகும்.
விமானநிலையத்தில் என்னை இறக்கிவிட்ட ‘யான்’ இரு கை கூப்பி வணக்கம்
செய்து என்னை வழியனுப்பி வைத்தான். பதில் வணக்கம் செய்தேன். தூரத்தில்
கம்போடிய நாட்டுத் தேசியக்கொடி பறந்தது. அக்கொடியில் கம்போடியா
பெளத்த நாடாக இருந்த போதும் அங்கோர்வாட் கோயில் உருவம் நடுவில் இருந்தது.
உலகிலேயே ஒரு கோயிலின் உருவத்தை தேசிய கொடியில் வைத்திருக்கும் நாடு
கம்போடியாதான்.
(தொடரும்…)
-மாத்தளை சோமு-
The Royal Palace, Phnom Penh, Cambodia
கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-5/6) : உலகிலேயே மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட்!!
கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-4)
மாத்தளை சோமு
ilakkiyainfo.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக