விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தைப் பார்த்தேன். சிறிய விமான நிலையம். ஆனால் கம்போடிய மன்னர்களின் வரலாற்றை நினைவு கூரும் விதமாகக் கட்டப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்குள் நுழையும் வாசலில் ஒரு கம்போடிய இளம் பெண் பயணிகளை இரு கரம் குவித்து வரவேற்றுக் கொண்டிருந்தாள். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ நாடுகளின் விமான நிலையத்திற்குப் போயிருக்கிறேன்.
அங்கெல்லாம் இப்படி ஒரு வரவேற்பு இல்லை. அவளுக்குப் பதில் வணக்கம்
செய்து விட்டு குடிவரவு அதிகாரியிடம் 20 யு.எஸ். டொலர் கொடுத்து
விசாவைப் பெற்றுக்கொண்டு நடந்த போது எதிர்ப்பட கைத்தொலைபேசி விற்கும்
கடை தெரிந்தது. அந்தக் கடைக்குள் நுழைந்து புதிய ‘சிம்கார்ட்டை’
வாங்கினேன். சிம்மை விற்ற கம்போடிய இளம் பெண் என் கைப்பேசியில்
சிம்மைப் பொருத்தி கைப்பேசியை என்னிடம் கொடுத்துவிட்டு இரு கை
கூப்பி வணக்கம் தெரிவித்தாள்.
இது எனக்கு மட்டுமல்ல அந்தக் கடையில் வர்த்தகம் செய்யும்
எல்லோருக்கும் என்பதைப் பார்த்தேன். மறுபடியும் எனக்குள் ஆச்சரியம்
செய்த உதவிக்கு நன்றி கூட சொல்லத் தயங்குகிற இக்காலத்தில்
வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு மரியாதையா?
விமான நிலையத்திற்கு வெளியே வந்து ஏற்கனவே முன் பதிவு செய்த தங்கும்
விடுதிக்கு எப்படி போவது என்று யோசித்த போது எனது பெயர் எழுதிய ஒரு
அட்டையைப் பிடித்துக் கொண்டு கம்போடிய இளைஞன் நிற்பதைக் கண்டு அவனை
நோக்கிப் போனேன். அவனிடம் என் பெயரைச் சொன்னதும் கையிலிருந்து
அட்டையை மடக்கி வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கும்பிட்டு
வணக்கம் செய்தான். பிறகு எனது சூட்கேஸை வாங்கிக் கொண்டு நடந்தான்.
டாக்ஸி கொண்டு வந்திருப்பானோ என்று யோசித்த போது தமிழ் நாட்டில் ஓடும்
ஆட்டோ போல் ஆனால் சற்று வித்தியாசமான ஆட்டோவில் ஏறச் சொன்னான். நான்
ஆட்டோவில் ஏறியதும் அவனே ஓட்டினான். இரு பக்கமும் திறந்து இருந்ததால்
வெளியே வெயில் அடித்த போது காற்று வந்து தழுவி உடலுக்கே அது இதமாக
இருந்தது. மெல்லமாய் பேச்சுக் கொடுத்தேன் “அங்கோர் வாட்டை இன்று பார்க்க
முடியுமா?”
“பார்க்கலாம் ஆனால் உடனே போக வேண்டும்”
“முடியும்” என்றேன்.
ஆட்டோ வேகமாக ஓடி விடுதிக்குச் சென்றது. விடுதியின் வரவேற்பு
அறைக்குப் போய் எனது கடவுச்சீட்டைக் கொடுத்தேன் விடுதிப் பணியாளன்
தங்கும் அறை சாவியை என்னிடம் கொடுத்து விட்டு ‘இருகைகூப்பி’ வணக்கம்
செய்தான். பதில் வணக்கம் செய்து யோசித்தேன். இரு கை கூப்பி வணக்கம்
செய்வது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. இது கெமர்
மன்னர்கள் ஆண்ட போது மக்களிடையே பரவியிருக்க வேண்டும்.
அதனை இன்றும் கம்போடியர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால் நாகரிகச்
சூழலில் சிக்கி ஆங்கில மோகத்தில் நடமாடுகிற தமிழர்களில் பலர் இந்த
வணக்க முறையையே மறந்து விட்டார்கள். ஆட்டோ சியாம்ரிப்பைத் தாண்டி
இருபக்கமும் இறப்பர் மரங்களைப் போல உயர்ந்த காட்டு மரங்கள் நிற்கும்
பாதையில் ஓடியது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து போனாலும்
குப்பைகளை எங்கும் பார்க்க முடியவில்லை.
இருபது நிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஆட்டோ அங்கோர்வாட்டைப் பார்க்க
நுழைவுச் சீட்டு வாங்க வேண்டிய இடத்தில் நின்றது. வண்டியிலிருந்து
இறங்கிய ஆட்டோ ரிக் ஷா ஓட்டி என்னைப் பார்த்து ‘டிக்கட் வாங்குங்கள்’
என்றான்.
“நீதானே டிக்கட் தேவையில்லை என்றாயே” என்றேன் சற்று கோபம் வந்தது போல்,
“நாளைய டிக்கட்டை இன்று வாங்கினால் தான் அங்கோர்வாட்டை இன்று பார்க்க முடியும்.
20 யு.எஸ்.டொலர் கொடுத்து நுழைவுச்சீட்டை வாங்கினேன். அப்போது தான்
மாலையில் அங்கோர் வாட்டைப் பார்க்க நுழைவுச்சீட்டு
தேவையில்லையென்றாலும் மறுநாள் சீட்டை வாங்கச் சொன்ன மர்மம் புரிந்தது.
ஒரு நாள் சீட்டு வாங்கினாலும், மூன்று நாள் சீட்டு வாங்கினாலும்
வாங்குபவர்களின் போட்டோவைப் பிடித்து அதை சீட்டில் அச்சிட்டுக்
கொடுக்கிறார்கள். பாதுகாப்புக் கருதி இதனைச் செய்திருக்கலாம்.
எனது படத்தோடு அச்சிடப்பட்ட நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு
ஆட்டோவில் ஏறு முன் ஆட்டோ ஓட்டுபவனின் பெயரைக் கேட்டேன். அவன் சான்
யான் என்றான். நான் உடனே உன்னை யான் என்று அழைக்கவா? என்று கேட்டேன்.
அதற்கு எப்படி வேண்டுமானால் அழைத்துக் கொள் உன்னைப் போல் ஆயிரம்
பயணிகளைப் பார்க்கிறேன் என்பது போல் புன்னகைத்தான்.
ஆட்டோ மறுபடியும் ஓடியது. போகிற வழியில் ஆட்டோவை நிறுத்தி
நுழைவுச்சீட்டை வாங்கி என் படத்தையும் திகதியையும் பார்த்து விட்டு,
போகலாம் என்றார்கள் பாதுகாவலர்கள். அவர்களை மீறி நுழைவுச்சீட்டு
இல்லாமல் எவரும் போக முடியாது.
நீண்ட சதுர வடிவில் அமைக்கப்பட்ட கோயிலுக்கு ஐந்து கோபுரங்கள்
இருக்கின்றன. (வழக்கமாக இந்து கோயில்களில் நான்கு திசைகளுக்காக
நான்கு கோபுரங்கள் இருக்கும்) ஆனால் இந்த ஐந்து கோபுரங்களையும்
முக்கியமான ஒரு கோணத்தில் இருந்து தான் முழுமையாகப் பார்க்க முடியும்.
ஐந்து கோபுரங்களில் ஒரு கோபுரம் மட்டும் 213 மீற்றர் உயரத்தில்
இருக்கிறது. மற்ற நான்கும் அதற்கு கீழே இருக்கின்றன. கோபுரம் சிறுத்து
கூர்மை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் கட்டிய கோயிலின் கோபுரமும்
இதேவடிவமைப்பில் தான் உள்ளது. அங்கோர்வார்ட் கோபுர மாதிரியை வைத்தே
மலேஷியாவில் கோலாலம்பூரில் கட்டப்பட்டுள்ள இரட்டைக் கோபுரம் ஒரு
தமிழ் வர்த்தகரால் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அங்கோர்வாட் கோயிலை 500 ஏக்கரில் 1.5 கிலோ மீற்றர் கிழக்கு மேற்காக 1.3
கிலோ மீற்றர் வடக்கு தெற்காக ஒரு நீள் சதுர பரப்பளவு நிலத்தில்
கட்டுவித்தான் இரண்டாம் சூரியவர்மன். கோயிலின் பாதுகாப்பு
அரண்களாகக் கிட்டத்தட்ட 5.5 கிலோ மீற்றர் சுற்றளவிற்கு சிகப்புக்
கப்பிக் கற்களால் நீண்ட சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோயிலின்
மேற்கு கோபுர நுழைவாயில் யானைகளும் வண்டிகளும் போகக் கூடிய அளவிற்கு
2.30 மீற்றர் அகலமானது.
கோபுரத்தின் வலப்பக்கத்தில் எட்டு கைகளோடு விஷ்ணு சிலை ஒரே கல்லில்
3.25 மீற்றர் உயரத்தில் செதுக்கப்பட்டுக் கம்பீரமாக நிற்கிறது.
கோயிலுக்கு முன்னால் நடந்து போக 250 மீற்றர் நடை பாதை அந்த நடை பாதையின்
நுழைவில் பாம்பின் முகமும் அதன் நீண்ட வாலும் கல்லிலேயே
செய்யப்பட்டுள்ளது. நடை பாதையின் இரு பக்கமும் தண்ணீர் நிரம்பிய அகழி
உண்டு.
அது 200 மீற்றர் அகலமும், 5.5 கிலோ மீற்றர் சுற்றளவும் கொண்டது.
கோயிலின் உள்ளே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நடந்த போது மகாபாரதக்
குருஷேத்திரப் போர், கிருஷ்ணரின் வாழ்க்கைக் காட்சிகள் கைலாய மலையை
அசைக்கும் இராவணன், வாலியும் சுக்ரீவனும் மோதும் சண்டை, எறுமை மாட்டில்
அமர்ந்திருக்கும் எமன், காளை மாட்டில் இருக்கும் சிவன், மயிலில் இருக்கும்
ஸ்கந்த மூர்த்தி, சிவனை வணங்கும் விஷ்ணு,
இந்திர உருவம், சிவ நடனம், கோழிச்சண்டை, பாற் கடலில் அமுதம் கடைவது,
அனுமான் சீதைக்குக் கணையாழி கொடுப்பது, மூன்று தலை யானையில் இருக்கும்
இந்திரன், சிங்கத்தில் அமர்ந்திருக்கும் சக்தி ஆகியனவற்றை அந்த
நான்குப் பக்கச் சுவர்களில் அற்புதமாய்ச் செதுக்கியிருக்கிறார்கள்.
இரண்டாம் சூரியவர்மன் படையோடு யுத்தத்திற்குப் போவதும்
செதுக்கப்பட்டுள்ளது. இவற்றோடு ஆங்காங்கே அப்ஸரா நடனப்பெண்களின்
உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 1500 அப்ஸரா நடனப் பெண்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அந்த நடனப்பெண்களின் சிற்பங்களை உற்றுப் பார்த்தேன். உயிருள்ள நடனப்
பெண்களைப் போல் இருந்தார்கள். ஒரு கெமர் நாட்டுக் கவிஞன் 17ஆம்
நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான உருவங்கள் பார்ப்பவர் மனதில்
கிளர்ச்சியைக் கொடுக்கும். கண்கள் இவற்றைப் பார்ப்பதால் எப்போதும்
களைப்படையாது. அது ஒரு நாளும் சலிப்புத்தராது. இந்தச் சிலைகள் மனிதனின்
கை களால் செதுக்கப்படவில்லை. அவை கடவுளால் உயிருள்ள சிலைகளாகச்
செதுக்கப்பட்டுள்ளன என்று சொன்னது அப்போது என் நினைவுக்கு வந்தது.
அங்கோர்வாட் கோயிலை அதன் அழகை எழுத்துக்களால் எழுதிக் காட்டுவதை விட
அதை நேரில் பார்த்தால் உணர முடியும். சுவையான மாம்பழத்தையும் அழகான
மலரையும் படமாகப் பார்த்தால் இனிய உணர்வு வருமா என்ன? ஆயிரம் அங்கோர்வாட்
படங்கள் அவற்றை நேரில் பார்க்கின்ற உணர்வை அளிக்குமா? மறுபடியும்
மறுபடியும் அங்கோர்வாட்டைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குள்
எழுந்தது.
அப்போது பிராங்க் வின்சென்ட் என்பவர் எழுதியது நினைவுக்கு வந்தது. அவர்
‘’Sights and Scenes in South East’
என்ற புத்தகத்தில் பொதுவாகக் கண்ணுக்குத் தோன்றும் இக்கோயிலின்
அழகும் விசித்திரமும் மனதில் பதியும் போது அதன் கம்பீரம் வியப்பாக
இருக்கும். இதனைப் பார்த்தால்தான் இதன் மதிப்பை உணர்ந்து கொள்ள
முடியும் என்று எழுதியிருக்கிறார்.
அதனை அவர் எழுதிய ஆண்டு 1872. அதற்குப் பிறகு 50 வருடத்தில் ஹெலன்
சர்ச்சில் கென்டீ என்பவர் ஒரு சொர்க்கத்தில் பிடிபட்டது போன்ற உணர்வும்
பிரமிப்பும் இல்லாமல் எவரும் மொத்தமாய்க் கருதிப்பார்க்கும்
ஒன்றல்ல. இது மனதில் ஆழமாய் பதியும் அற்புதமான கட்டடம் என்று
எழுதியிருக்கிறார். 1863 இல் Henri Mouhot என்பவர் அங்கோர்வாட்டைப்
பற்றி லண்டனிலும் பாரிஸிலும் புத்தகங்கள் எழுதி வெளியிட்ட பிறகே அதன்
புகழ் மேலைத்தேயமெங்கும் பரவியது.
அங்கோர்வாட்டுக்குத் தெற்கே 1700 மீற்றர் தூரத்தில் 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏழாவது ஜெயவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் தொம் (Anghor Thom) என்ற பழம் பெரும் நகரத்தைப் பார்த்தேன். 360 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை அமைச்சர்கள், தளபதிகள், சமய குருமார்கள் ஆகியோர் தங்கும் வீடுகள் என்பனவற்றைக் கட்டி வைத்தான். நகருக்கு ஐந்து நுழைவாயில்கள் இருந்தன.
அங்கோர்வாட்டுக்குத் தெற்கே 1700 மீற்றர் தூரத்தில் 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏழாவது ஜெயவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் தொம் (Anghor Thom) என்ற பழம் பெரும் நகரத்தைப் பார்த்தேன். 360 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை அமைச்சர்கள், தளபதிகள், சமய குருமார்கள் ஆகியோர் தங்கும் வீடுகள் என்பனவற்றைக் கட்டி வைத்தான். நகருக்கு ஐந்து நுழைவாயில்கள் இருந்தன.
அவையெல்லாம் நகரத்தைச் சுற்றியுள்ள அகழியின் மீது போடப்பட்ட நீண்ட
பாலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அப்பாலத்தின் ஒரு பக்கம்
வாசுகி என அழைக்கப்படும் ஏழு தலைகொண்ட பாம்பின் ஒரு பகுதியை 54
அசுரர்கள் இழுத்துக் கொண்டிருப்பது போலும் பாலத்தின் மறு பக்கம்
பாம்பின் மறு பகுதியை 54 தேவர்களும் இழுத்துக் கொண்டிருப்பது போலவும்
தொடர் கற்சிலைகள் வடித்திருப்பது அற்புதமான காட்சியாகும்.
உள்ளே நுழையும் வாயிலில் 75 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு அதன்
மேல் பகுதியில் நான்கு திசைகளையும் பார்க்கும் விதமாக 20 அடி
உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள ஏழாம் ஜெயவர்மனின் பாரிய நான்கு சிலைகள்
கம்பீரமாக உள்ளன. அந்தச் சிலைகளின் முகங்களும் கண்களும் மெல்லிய
புன்னகையை உதிர்ப்பது போல் மெல்லத் திறந்திருக்கும் உதடுகளும்
சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.
ஏழாம் ஜெயவர்மனின் அரண்மனையும் வீடுகளும் மரங்களினால்
எழுப்பப்பட்டிருந்ததால் அவையெல்லாம் காலப் போக்கில் அழிந்து
அவையிருந்த அடையாளமாக கற்களினால் எழுப்பப்பட்ட அடித்தளம்
இன்றைக்கும் இருக்கின்றது. மன்னர் குடும்பம் குளித்து மகிழ்ந்த பெரிய
நீச்சல் குளம் நீர் வற்றிய நிலையில் காட்சியளிக்கிறது.
மன்னர் தனது படைகளைப் பார்வையிடவும் கலாசார நிகழ்ச்சிகளைக் காணவும்
யானைகள் தாங்கும் பீடம் (Terrace of Elephants) என்ற மேடை
பிரமாண்டமானதாக எழுப்பப்பட்டுள்ளது. கற்களால் கட்டப்பட்ட இந்த
மேடையை யானைகளும் அரக்கர்களும் தாங்கிப் பிடிப்பது போன்ற சிற்பங்கள்
செதுக்கப்பட்டுள்ளன.
இதனைப் பார்வையிட உள்ள நடை பாதையின் தொடக்கத்தில் ஒன்பது தலை நாகம் ஒரு
விசிறியைப் போல் தனது முகத்தை வைத்து நிற்க அதன் நீண்ட வாலை தேவர்களும்
அரக்கர்களும் இழுப்பது போன்ற தொடர்ச் சிற்பங்கள் இருக்கின்றன. மேலும்
அந்த நடைபாதையின் இடது வலது என இரு பக்கமும் புராணக் கதைகளில் இருந்து
108 காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
அங்கோர் தொம் நடுவே ஏழாம் ஜெயவர்மனால் Bayon என்று அழைக்கப்படும் பிரமாண்டமான அரச கோயில் (State Temple) கட்டப்பட்டுள்ளது. அது தொடக்கத்தில் இந்து கோயிலாகக் கட்டத் தொடங்கிய போதும் அது புத்தர் கோயிலாக முடிந்திருப்பதன் அடையாளமாக 54 கோபுரங்களில் (இன்று இருப்பது 37 தான்) அவலோகீடீஸ்வரா (Avlokitesvara)- தமிழில் அவலோகிதர், சமஸ்கிருதத்தில் Avalokitesvar தாய்மொழியில் Lokesvara என அழைக்கப்படும் புத்தரின் முகம் 54 கோபுரங்களில் 200க்கும் மேற்பட்ட பெரிய முகமாக செதுக்கப்பட்டுள்ளன.
அவலோகீடீஸ்வரா வழிபாட்டில் புத்த சமயமும் இந்து சமயமும்
கலந்திருக்கின்றது. ஜப்பானியக் கல்வியாளர் சூஹிகோசாகா தமிழ்
நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பா சமுத்திரத்தில் உள்ள
பொதிகை மலையில் அசோக மன்னர் காலத்தில் அவலோகீடீஸ்வரா வழிபாடு
இருந்ததாகக் குறிப்பிடுகிறார். சீனப் புத்த மதத்துறவி மதுரா வந்து
எழுதியக் குறிப்பில் அவலோகீடீஸ்வரா வழிபாட்டைப் பற்றியும்
குறிப்பிடுகிறார். இந்த வழிபாடு 12 ஆம் நூற்றாண்டு வரை
இருந்ததாகவும் அதற்குப் பிறகு நடந்த இஸ்லாமிய படையெடுப்பால் புத்த
மடாலயம் சிதைக்கப்பட்டு மறைந்ததாகத் தெரிகிறது.
அங்கோர்ப் பேரரசைத் தொடர்ந்து ஆண்ட மன்னர்களால் பிரமாண்டமான பல
கோயில்களைக் கட்டிய போதும் அவற்றில் சில கோயில்கள் மட்டுமே ஒரே
மன்னரால் கட்டப்பட்டுள்ளது. ஏனையவை ஒரு மன்னரால் தொடங்கப்பட்டு
அவருக்குப் பிறகு பதவியேற்ற வேறு மன்னரால் முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புகழ்பெற்ற அங்கோர்வாட் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.
இதற்கு எடுத்துக் கொண்ட ஆண்டுகள் முப்பது ஆகும்.
ஏழாம் ஜெயவர்மனும் இந்திரவர்மனும் கட்டிய Taprohm என்ற கோயில் பக்கம் சென்றேன். பிரமாண்டமான கோயில் இன்று சிதிலமடைந்துள்ளது. இதன் உண்மையான பெயர் ரஜவிகார (Raja Vihara)(அரச மடாலயம் அல்லது அரச கோயில்) இதற்குச் சொந்தமாக 3140 கிராமங்கள் இருந்தன.
அக்கிராமங்களில் இருந்த 76,365 மக்கள் அந்தக் கோயிலையும் 18 பெரிய
குருமார்களையும் 2740 அலுவலர்களையும் 2202 உதவியாளர்களையும்
615 நடனப் பெண்மணிகளையும் கவனிக்க வேண்டுமாம். சமஸ்கிருத மொழியில்
எழுதபட்ட கல்வெட்டு இந்த விபரங்களைத் தருகிறது. இன்றும்
அக்கல்வெட்டு இருக்கிறது.
இன்று அந்த ஆலயம் பிரமாண்டமான ஆலமரம், அத்திமரம், இலவமரம்
ஆகியவற்றின் வேர்களில் சிக்கியிருக்கின்றன. இதனைக்
கவித்துவமாகச் சொல்வதானால் வேர்களின் அரவணைப்பில் வேந்தன் கட்டிய
கோயில் இருக்கின்றது எனலாம். ஆனால் இந்த மர வேர்கள் எவ்வாறு இங்கு
வந்தன? பறந்து திரியும் பறவைகளின் எச்சங்களிலிருந்து விழுந்த
விதைகள் முளைத்து மரமாகி இக்கோயிலை தம் வசப்படுத்தி விட்டதாகச்
சொல்லப்படுகின்றது.
இங்கு வரும் பயணிகள் மரங்களுக்குள்ளும் மர வேர்களுக்குள்ளும்
சிக்கியிருக்கும் இந்தக் கோயிலைப் படம் பிடிக்க மறப்பதேயில்லை. இது
போன்ற ஒரு காட்சியை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என படம்
பிடித்துக் கொண்டிருந்த ஒரு அமெரிக்கன் சொன்னான். இன்று இந்த கோயிலை
இந்திய அரசாங்கம் பாதுகாக்கும் பணிகளை ஐ.நா.வின் புராதனச் சின்னங்கள்
பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செய்து வருகின்றது.
நீர் விழுகிற கற்பாறைகளில் பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின்
சயனக் கோலம், தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் பிரமா, சிவன், ஆகியவை
மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அநேகமாக இதனைச் செதுக்கிய
சிற்பிகள் மேலிருந்து வரும் நீரில் நனைந்து கொண்டே செதுக்கியிருக்க
வேண்டும். இறை உருவங்களைத் தொட்டு வரும் இந்நீர் புனித நீராகக்
கருதப்படுகிறது.
(தொடரும்)
கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-1…2…3…4) ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக