திங்கள், 13 ஜனவரி, 2014

ஆம் ஆத்மிக்கு அஞ்சுகிறாரா நரேந்திர மோடி?,,,, ஆம்


மெட்ரோ ரயிலில் சென்று பதவியேற்றது, சொந்த வாகனத்தில் அலுவலகத்துக்குச் செல்வது, சொகுசு பங்களா, பாதுகாப்பு வேண்டாம் என புறக்கணித்தது, முதல்வராகும் முன்னரே மக்கள் தர்பார் நடத்தியது... டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பின் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊடகங்களில் பிரவேசிக்காத நாட்கள் இல்லை.
தமிழக ஊடகங்களிலும் 'முதல்வன் பாணியில் ஒரு முதல்வர்' என்று அரவிந்த் கேஜ்ரிவால் முக்கியத்துவம் பெற்றுள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறார்.
பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய அரசியலில் ஒரு அலை ஏற்பட்டது. இது மோடி அலை என்று பாஜகவினரால் வருணிக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, இந்த அலை ஏற்பட உபயமே ஊடகங்கள்தான் என காங்கிரஸ் கட்சியினரால் விமர்சிக்கவும்பட்டது.

ஆனால், நரேந்திர மோடி பிரதமர் வேட்பளராக அறிவிக்கப்பட்டது முதல் 5 மாநில சட்டசபைத் தேர்தல் வரை அடித்த மோடி அலை தற்போது அடங்கிவிட்டதாக உணரப்படுகிறது. இந்தத் தருணத்தில் தான் கோவா பேரணியை முடித்த கையோடு மோடி ட்விட்டரில் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.
அதாவது, "நாட்டிற்கு நன்மை, தொலைக்காட்சியில் தொடர்ந்து முகத்தைக் காட்டுவதால் ஏற்படுமா? இல்லை களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகளை முடிப்பதால் விளையுமா... இதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று ஒரு பதிவை இடுகிறார்.
மோடியின் இந்த ட்வீட்டுக்கு டவீட் பதில் அளித்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது. ஷகீல் அகமதின் பதிவில், "நரேந்திர மோடியின் காங்கிரஸ் மீதான விமர்சனம் இயல்பானதே, ஆனால் காலப் போக்கில் அவர் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு வேளை ஆம் ஆத்மியின் உதயமும், வளர்ச்சியும் மோடியை அச்சப்படுத்துகிறதோ?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியின் ட்விட்டர் பதிவும், காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகம்தின் பதில் பதிவும் இந்திய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆம் ஆத்மி - பாஜக தலைவர்களிடையே வார்த்தைப் போர்களும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த சூழலையும் கருத்தில் கொள்ளும்போது மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிக சவாலை ஏற்படுத்தக் கூடியது காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும், ஆம் ஆத்மி கட்சியாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் சொல்வது போலவே ஆம் ஆத்மிக்கு நரேந்திர மோடி அஞ்சுகிறாரா? பாஜக-வுக்கு ஆம் ஆத்மி சவாலாக இருக்குமா?  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: