செவ்வாய், 24 செப்டம்பர், 2013

6 மெழுகுவர்த்திகள் படு சீரியசான பிரச்சனையை கையாண்டிருக்கும் படம்

படம் பார்க்கிற பெற்றோர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக 6 இருக்கும். படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேச்சுலர் பசங்களோட மனசு பதறுதுன்னா பாருங்களேன்!தன் மகன் காணாமல் போக அவனையே தன் உயிராக நினைத்து வாழ்ந்த தந்தை அவனைத் தேடிப் போக, அவனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படம். வாரம் ஒரு காமெடி என்று வரிசைக்கட்டி வரும் திரைப்படங்களில் மூழ்கி கிடக்கும் ரசிகர்களை கொஞ்சம் சீரியஸ்சாக யோசிக்க வைக்கிறார் ஷாம். கிட்டத்தட்ட பாலாவின் நான் கடவுளை நினைவு படுத்துகிற படம். அலுங்காமல் குலுங்காமல் தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஷாம். ஆனால் அதெல்லாம் முதல் மூன்று நான்கு படங்களோடு முடிந்துவிட்டது. இந்த சாக்லேட் ரொம்ப நாள் தாங்காது என்கிற உண்மையை அறிந்து தனக்கான உணவை தானே தயாரித்திருப்பதின் மூலம் ஆச்சயரிப்படுத்தவும் அதே சமயத்தில் அதிரவும் வைக்கிறார் ஷாம். ஷாமின் முயற்சிக்கு முதலில் சல்யூட்!மனைவி, மகன் என்று சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார் ஷாம். தன் மகனை உலகமாக நினைக்கும் ஷாம் ஓரளவிற்கு வசதியான குடும்பம் தான். ஒரு நாள் கடற்கரையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க... கூட்டத்தில் தன் மகன் காணாமல் போகிறான். இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. போலிசில் புகார் கொடுக்கிறார்கள்.


இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. தகப்பனின் பதற்றைத்தை உணர்ந்துகொண்டு ‘உங்கள் பையன் கடத்தப்பட்டிருக்கலாம்’ என்று போலிஸ் ஒரு சின்ன ‘க்ளு’வைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது. கடற்கரையில் போலிஸ் கைகாண்பித்த ஒரு பிச்சைகாரனிடம் விசாரிக்கிறார்கள். பிச்சை எடுப்பது அவனுக்கு ஒரு ஹாபி தான்... ஆனால் அவன் தொழில் குழந்தைகளைக் கடத்துவது. குழந்தை கிடைத்துவிடும் என்று நம் மனசு ரிலாக்ஸ் ஆவதற்குள் இடி மேல் இடியாய் காட்சிகள் நகர்கிறது. 


உங்கள் பையனை நகரிக்கு எடுத்துக்கொண்டு போயாச்சு என்று செய்தி வர... தன் நண்பர்களோடு புறப்படுகிறார் ஷாம். குழந்தை கிடைக்கவேண்டும் என்று உள்ளுக்குள் பதற்றம் பரவிக்கிடக்க, அங்கிருந்து நல்லூர், அங்கிருந்து இன்னொரு இடம், என மாறி மாறி செய்திகள் வர, தன் மகன் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தந்தை ஷாம் ஓடிகொண்டே இருக்கிறார்.

குழந்தைகள் கடத்தல் கும்பல் இந்தியா முழுவதும் ஒரு பெரிய நெட்வொர்க்காக இருப்பது படத்தில் நடிக்கும் ஷாமைவிட படம் பார்க்கும் நமக்கு தான் பீதி பெருகிக்கொண்டே போகிறது.(குழந்தைகளின் உடல் உருப்புகள் நல்ல விலைபோகிறது என்பது வில்லன்கள் கொடுக்கிற இன்ஃபொர்மேஷன்)

என் மகனோடு தான் வீடு திரும்புவேன் என்று வைராக்யமாய் இருக்கும் ஷாம், தெருத்தெருவாய் அலைந்து, தன் அழகான தோற்றம் அகோரமாக மாறி நாடோடியைப்போல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சுற்றித்திரிகிறார். இந்தியாவின் ஏதோ ஒரு மூளையில் தன் மகனோடு ஷாம் இணைவதுதான் முடிவு! ஆனால், அவன் இருக்கும் இடமும் தோற்றமும் பகீரென இதயத்தை ஈரமாக்கும் காட்சி!


கடற்கரையில் சந்தித்த மூன்றாவது மனிதர் ஒருவர் ஷாமுக்கு உதவிகள் செய்வதும், அகமதாபாத்தில் மயங்கிக்கிடக்கும் ஷாமுக்கு முதலுதவிகள் செய்யும் இஸ்லாமிய நபரும்... இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் இந்த உலகில் நல்லவர்கள் இருக்கிறாகள் என்ற ஆறுதலைக் கொடுக்கிறது. 

படத்தின் கதையே இதயத்தை அலற வைக்கிக்கிற விதத்தில் இருக்கும் போது, அந்திராவின் வில்லனைக் காண்பிக்கும் காட்சியில் மாடுகளை சதக் சதக் என வெட்டி கறியாக்கும் காட்சிகள் தேவைதானா பாஸ்? 

மகனை காப்பாற்ற போன ஷாம், அந்த வில்லன்களிடமிருந்து அலறிக்கொண்டு வெளியே வந்து உதவி கேட்கும் ஒரு இளம் பெண்ணைக் காபாற்றும் காட்சிதான் படத்தின் உச்சம். வில்லனின் அடியாட்களை அடித்துப் போடு அந்தப் பெண்ணை காப்பாற்றும் காட்சியில் ஷாமின் நடிப்பும் பிரமாதம். ஆடியன்சின் கோபத்தை ஒட்டுமொத்தமாக திரையில் வெளிப்படுத்துகிறார் ஷாம். 


படத்திற்கு வசனம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். இவர் நான் கடவுள் படத்திற்கும் வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் மிகச் சில இடங்களில் மட்டுமே ஜெயமோகனின் பேனா வெளியே தெரிகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்தை எந்த விதத்திலும் சேதப்படுத்தவில்லை. அதுவரைக்கும் சந்தோஷம். இதுவரைக்கும் அழகாகப் பார்த்த இந்தியாவின் மாநகரங்களின் இன்னொரு முகமான அகோர முகத்தையும் காட்டுகிறது கிருஷ்ணசாமியின் கேமரா.
   
ஷாமின் மனைவியாக வரும் பூனம் கவுர் கண்ணீர் விடும் காட்சிகளில் நம் கண்ணிலும் கண்ணீர் வருகிறது. மகனும் தொலைந்துவிட்டான், மகனைத் தேடிப்போன கணவனும் வீடு திரும்பவில்லை... என ஆயிரம் சோகங்களை முகத்தில் வைத்துக்கொண்டு, நீ திரும்பி வந்துவிடு உனக்கு எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் நான் பெற்றுத்தருக்கிறேன் என்று போனில் கணவனிடம் கதறும் காட்சி இதயத்தைக் கலங்க வைக்கிறது. 

மலையாள வில்லனாக வரும் அனில் முரளி பெண்ணின் நளினத்துடன் மிரட்டலான நடிப்பு. அவர் பேசும் மலையாளம் கலந்த தமிழ் ரசிக்க வைக்கிறது. அவரைக் கொஞ்ச காலத்துக்கு தமிழ்நாட்டுப் பக்கம் தலைகாட்ட வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். படம் பார்த்த நம் மக்கள் அவர் மட்டும் கையில் கிடைத்தால், அவர் மேல் உள்ள கோபத்தில் அவரை சட்னியாக்கி விடுவார்கள். படத்தில், அவர் இருக்கும் இடத்தை மலபார் பீடி மேட்டரை வைத்து கண்டுபிடிப்பது எதிர்பார்க்காத ட்விஸ்ட்.


வில்லன்கள் மேல் வருகிற கோபத்தைவிட ‘காக்கிச் சட்டைகள்’ மேல் தான் அதிக ஆத்திரம் வருகிறது. சிங்கமென கர்ஜிக்கும் போலிஸ்காரர்களை படமாக்கும் நேரத்தில் ரவுடிகளின் உளவாளிகளாக போலிஸ் செயல்படுகிறது என்று அவர்களின் இன்னொரு முகத்தையும் காண்பித்திருக்கும் இயக்குனரின் தைரியத்தை ஆயிரம் முறை பாராட்டலாம்.

ஷாம் முதன் முதலாக ‘நடி’த்திருக்கிறார் என்பதே உண்மை. வசன உச்சரிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தலாம். ஷாம் பதறும் போதெல்லாம்... ‘அய்யோ அய்யோ...’என்று அதே மாடுலேஷனோடு சொல்வது கொஞ்சம் எரிச்சல்!  


இயக்குனர் வி.இசட்.துரை இந்தக் கதைக்காக பல ஆய்வுகள் செய்திருப்பது ஆச்சரிப்படவைக்கிறது. நல்ல வேளை மகனையும் தந்தையையும் சேர்த்துவைத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். இருவரும் க்ளைமாக்சில் சந்திக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய சாபத்திற்கு ஆளாகி இருப்பார். அந்த அளவிற்கு க்ளைமாக்ஸ் காட்சியில் நம்மை உரையவைத்து பின் உருகவைக்கிறார்.
  
இதை கமர்ஷியல் படமாக எடுப்பதா இல்லை எதார்த்த படமாக எடுப்பதா என இயக்குனர் வி.இசட்.துரை பெரிதும் குழம்பி இருப்பது படத்தின் மேக்கிங்கில் தெரிகிறது. நல்ல வேளை ஷாமுக்கு எதுவும் டூயட் பாடல்கள் இல்லை. தேவையில்லாத பல காட்சிகளை கத்தரித்து படத்தை பர பர வேகத்தில் ஓடவிட்டிருக்கும் என்.அருண்குமாருக்கு நன்றிகள் பல.

6 - அதிரவைக்கும் ஷாம்! பதறவைக்கும் உண்மைகள்!

கருத்துகள் இல்லை: