செவ்வாய், 7 மே, 2013

ராமதாஸ் கைதினால் தலித் வாக்குகள் இனி அதிமுகவிற்குத்தான் ???

ராமதாஸ் அரசியல்தைலாபுரம் தோட்ட மாளிகையில் ஜெனரேட்டர், ஏசியோடு வாழ்ந்தவருக்கு திருச்சி சிறை சென்ற பிறகுதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு அமலில் இருப்பதும், அதனால் மக்கள் படும் துன்பமும் கொஞ்சமாக தெரிய வந்திருக்கிறது. கூடங்குளம் வழக்கு, மதுரை ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு உட்பட பழைய வழக்குகளெல்லாம் தூசி தட்டப்பட்டு ராமதாஸ் மீது போடப்படுவது, விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் சென்றது குறித்தெல்லம் பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. பாமக கும்பல் கூடிய சீக்கிரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜெயலலிதா இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு காரணம் என்ன?
மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் நடந்த நாடகமொன்றில் ஜெயா, சசிகலா வேடமிட்டவர்கள் பேசிய பேச்சுதான் ஜெயாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி கோபப்படும்படி அந்த நாடகத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. அரசியலிலும், அறிக்கையிலும் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க முடியாதவர்கள் நாடகத்தில் மட்டும் விசுவரூபமெடுப்பார்களா என்ன? எனில் வேறு என்ன காரணம்?
ஜெயலலிதாவின் ஈகோவை யாராவது சீண்டிவிட்டால் அவரது கோபத்தை யாரும் அது அவாளாகவோ இல்லை ‘ஆண்டவ’னாவாகவோ இருந்தால் கூட தடுக்க முடியாது. அதுவும் அவர் முதலமைச்சராக இருப்பதாலும், போலீஸ், நீதிமன்றம், அதிகார வர்க்கம் என்று பல்வேறு அதிகார அமைப்புகள் அவருக்கு சேவை செய்யக் காத்திருக்கும் போது அந்த கோபத்தின் அளவையும், வீச்சையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

2016-இல் ஆட்சியைப் பிடிப்போம், சின்னைய்யாதான் முதலமைச்சர் என்று பல்வேறு ‘அனாமதேயங்கள்’ மாமல்லபுரத்தில் முழங்கிய ஒன்று போதாதா, ஜெயாவின் ஈகோவை கிண்டி விட? சவால் விடும் அரசியல் ஆண்களை ஜெயலலிதாவுக்கு சுத்தமாக பிடிக்காது. அதுவும் போயஸ் தோட்டத்தில் ஐந்து, பத்து சீட்டுகளுக்காக தவம் கிடந்தவர்கள் வீரம் பேசினால் அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.
மேலும் ஒரு காரணமாக இருப்பதற்கு தகுதி இல்லாத ஒரு சிறு விசயம் கூட ஜெயாவின் நடவடிக்கைக்கு அடிப்படையாக இருக்கலாம். மாமல்லபுரத்தில் ஜெயாவாக நடித்தவர் அழகாக இல்லை என்ற ஒரு விசயம் கூட அம்மாவின் சீற்றத்தை தூண்டி விட போதும். எனவே இறைந்திருக்கும் இத்தகைய காரண முத்துக்களை நாம் என்னதான் கோர்த்துப் பார்த்தாலும் அது அவரது ஈகோவே சீண்டி விட்டதன் விளைவே என்பது மட்டும் உண்மை.

ராமதாஸ் எத்தனை ராமதாஸடி!
அதனால்தான் ஜெயலலிதா தனது நடவடிக்கை ஏற்படுத்தும் விளைவுகளைக் கூட கவலைப்படாமல் உறுதியாக இருக்கிறார். ராமதாஸ் விசயத்திலும் அதுவே உண்மை. கருணாநிதியாகி இருந்தால் இந்தப் பிரச்சினை பூசி மெழுகி நீர்த்துப் போயிருக்கும். அதனால் ராமதாஸின் வெற்று சவுடால் நாடகத்தின் கிளைமேக்சாக கூட வரும். ஆனால் இங்கே அந்த வாய்ப்பு ராமதாஸுக்கு இல்லை.
ஆட்சியைப் பிடிப்போம் என்று சபதம் விட்டு சவுண்டு விட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருந்தால் ஒளிரும் விளக்குகளுக்கு விரைவிலேயே ஃபீஸ் போய்விடும் என்பது ஜெயாவுக்கு மட்டுமல்ல, பலருக்கும் தெரிந்த உண்மைதான்.
ஏற்கனவே வினவு கட்டுரையில் சொன்னது போல இந்த பிரச்சினையில் ராமதாஸின் மீது வன்கொடுமை, இதர கடுமையான பிரிவுகளில் வழக்குப் போடாமல் சாதாரணமான போண்டா பிரிவுகளிலேயே வழக்கு போடப்பட்டுள்ளதால் இது ஜெயாவின் நாடகம் என்பதுதான் உண்மை. அதாவது ராமதாஸை வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பதைத் தாண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மம் கக்கிய அவரை தண்டிக்க வேண்டுமென்பதல்ல. அதனால் இது ஒரு வகை அரசியலற்ற பழிவாங்கல்தான்.
நடவடிக்கையில் அரசியல் இல்லை என்பதால் விளைவுகளிலும் இல்லை என்பதல்ல. தற்போது வடதமிழக தலித் வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்குத்தான் என்பது ராமதாஸ் கைதினால் விளைந்த உடனடிப் பயன் எனலாம். எனவே விடுதலைச் சிறுத்தைகள் கூட இந்த விளைவை புரிந்து கொண்டால்தான் அடுத்த தேர்தலில் ஏதோ கொஞ்சம் பிழைப்பைப் பார்க்கலாம். இல்லையெனில் அவர்களுக்கு எதுவும் தேறாது.
பொதுவான நடுத்தர வர்க்கம், மற்ற சாதி மக்களைப் பொறுத்த வரை ராமதாஸ் கைதை வரவேற்கவே செய்கிறார்கள். பேருந்துகளை தொடர்ந்து தாக்கிய பாமகவின் அடாவடியை அவர்கள் விரும்பவில்லை. வன்னியர்களைப் பொறுத்தவரையிலும் கூட ராமதாஸ் கைது எந்த வகையான அணிதிரட்சியையும் ஏற்படுத்தவில்லை, முடியாது. பாமகவிற்கு இதற்கு முன்பும் சரி, இனிமேலும் சரி வன்னியர்களின் மொத்த ஒட்டு மட்டுமல்ல, பத்து சதவீத வாக்குகள் கூட கிடைப்பது கடினம்.
பாமகவின் பிழைப்பு வாத அரசியல், கூட்டணி மாறும் பச்சோந்தித்தனம், ராமதாஸின் குடும்ப அரசியல், என்று வன்னியர்கள் கடந்த காலத்திலேயே பாமகவிலிருந்து பிரித்து விட்டார்கள். இருப்பவர்களும் கட்டைப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டெட், சுயநிதிக் கல்லூரி, வட்டித் தொழில் என்று கட்சி அடையாளத்தை வைத்து தொழில் செய்பவர்கள்தான். இவர்களது காசில்தான் மாமல்லபுரத்திற்கு கூட்டம் கூட்டிவரப்பட்டது. ஆகவே ஜெயாவின் நடவடிக்கையால் வன்னியர்கள் அணிதிரண்டு ராமதாஸின் பின்னால் செல்வார்கள் என்பது கனவிலும் சாத்தியமில்லை. அதனால் ஜெயாவுக்கும், அதிமுகவிற்கும் வன்னியர் வாக்குகள் கிடைக்காது என்று யாரும் கூறமுடியாது. இது ஜெயாவுக்கும் தெரியுமென்பதால்தான் அவர் ராமதாஸை சிறையில் முடக்க நினைக்கிறார்.
எனவேதான் இந்த கைது நடவடிக்கைகளால் மொத்த பாமக கும்பலும் மிரண்டு போய் இருக்கிறது. 90-களில் ராமதாஸின் சிறை வாசத்தில் இருந்து விடுதலை கோரி மனைவி சரஸ்வதி மனமுருகி, முழு அடிமைத்தனத்தோடு ஜெயாவுக்கு எழுதிய கடிதத்தை அம்மா அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார். ஆக பாமக இன்று என்றில்லை அன்றிலிருந்தே முழு கோழைத்தனத்தில் குடியிருந்த ஒரு பிழைப்புவாத கும்பல்தான். ராமதாஸ் மட்டுமல்ல, ஆதிக்க சாதிவெறியால் ஆதாயம் அடைய நினைக்கும் பல்வேறு சாதி சங்கங்களின் கதியும் இதுதான். அந்த வகையில் தமிழகத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இத்தகைய சாதிவெறியர்களுக்கு பெரிய அங்கீகாரம் கொடுத்ததில்லை.

சிறைக்கு செல்லும் போதும் உதவியாளர் தேவைப்படும் ‘சின்னய்ய்யா’ !
மாமல்லபுரம் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, “நாங்கள் அக்னியில் பிறந்தவர்கள், யாராவது மறுக்க முடியுமா?” என்று சவால் விட்டு பேசினார். இறுதியில் இதை யார் மறுத்தார்கள்? அவர்களே மறுத்துக் கொண்டார்கள். திருச்சி எனும் கந்தக பூமியில் போட்டு உச்சி வெயிலில் வாட்டி எடுக்கிறார்கள் என்று பிலாக்கணம் வைத்து அழுவது யார்? நாமா இல்லை அவர்களா?
மேட்டுக்குடி அன்புமணிராமதாஸ் கைது குறித்த பத்திரிகைச் செய்திகளைப் படித்தாலே பாமகவின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். ராமதாஸ் கைது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த சின்னைய்யா ரொம்ப பணிவாகத்தான் அதாவது அம்மாவை சீண்டாமல் வி.சி கட்சியை திட்டித்தான் பேசினார். ஆனால் அம்மா மாமல்லபுரத்தில் சின்னதின் வீர முழக்கத்தை பார்த்திருப்பார் போல, தூக்கு சின்னைய்யாவை என்றிருக்கிறார். இதுவரை சிறை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு மேட்டுக்குடி நபர் முதன்முறையாக புழலுக்கு சென்றிருக்கிறார்.
அதுவும் இரண்டு சூட்கேசில் துணிமணிகள், இரண்டு பைகளில் பழங்கள், பிஸ்கெட்டு மற்றும் ஒரு உதவியாளருடன் கைதாகியிருக்கிறார் சின்னைய்யா. உலகிலேயே உதவியாளருடன் கைது செய்யப்பட்ட முதல் தமிழக அரசியல்வாதி அன்புமணியாகத்தான் இருக்கும். அன்புமணியின் காங்கிரசு மாமனார் கிருஷ்ணசாமியை சிறையில் அனுமதிக்கவில்லை என்று மக்கள் டி.வி சோக கீதம் வாசித்தது. இப்படி ராஜ உபசாரத்துடன்தான் சிறைவாசம் செல்ல முடியும் எனும் போது இவர்களை எந்த முட்டாள் கொள்கை பூர்வமாக ஆதரிப்பான்?
விழுப்புரம் மண்டபத்தில் ராமதாஸ் இருக்கும் போது அவருக்கு தைலாபுரம் தோட்டத்தில் விளைந்த ஆர்கானிக் காய்கறியுடன் சாப்பாடு காரில் வந்ததாம். அவரும், தன்ராஜும் மண்டபத்தின் மணமகன் அறைக்கு சென்று பூட்டிக் கொண்டு சாப்பிட்டிருக்கின்றனர். ஏனைய தொண்டர்கள் வெளியே போலீஸ் கொடுத்த சாம்பார் சாதத்தோடு ஏப்பம் விட்டனர். தொண்டன் சாப்பிடும் உணவைக் கூட சாப்பிட முடியாத இவரெல்லாம் எப்படி மக்கள் தலைவராக இருக்க முடியும்? அதுவும் வீட்டுச் சாப்பாட்டை திருட்டுத்தனமாக சாப்பிடும் அளவுக்குத்தான் இங்கே வெளிப்படையான கொள்கை இருக்கிறது.
தலைவர் எவ்வழியோ அவ்வழிதான் தொண்டர்கள் என்பதால் விழுப்புரம் மண்டபத்தில் மதிய நேரவாக்கில் அனைவரும் ரிமாண்ட் செய்யப்படுவார்கள் என்ற செய்தி பரவியிருக்கிறது. ராமாதஸின் முகம் இருண்டுவிட்டது. தலைவர் முகம் இருண்டதின் காரணத்தை தொண்டர்கள் கேட்டறிய கிட்டத்தட்ட 400 தொண்டர்கள் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டார்கள். மீதி 300-த்தி சொச்சம்பேர்தான் தலைவருடன் சிறைக்குச் சென்றார்கள். ஆக சிறைவாசத்தை அனுபவிப்பதற்கு தலைவனும் தயாரில்லை, தொண்டனும் தயாரில்லை. உண்மையில் பாமகவில் தொண்டர்கள் யாருமில்லை என்பது வேறு விசயம்.
ஒரு அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் சாதாரண நிகழ்வு என்றாலும் அதைக்கூட சந்திக்க வக்கில்லாத கும்பலாகத்தான் ராமதாஸ் கட்சி இருக்கிறது. அடுத்து தமிழகத்தின் கந்தக பூமியான திருச்சியில் கடும் வெயிலில் ராமதாஸை அடைத்திருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள். இது உண்மையில் திருச்சி மக்களையும், திருச்சி சிறையில் இருக்கும் மற்ற சிறையாளர்களையும் இழிவுபடுத்துவதாகும். மேலும் சிறையில் மின்விசிறியில்லை, மின்சாரமில்லை என்பதெல்லாம் ராமதாஸை துன்புறுத்தும் விசயம் என்று பாமகவின் இணைய அடிமைகள் பட்டியலிடுகிறார்கள்.

அன்று திருகுவலிக்காக கடிதம் எழுதிய சரஸ்வதி அம்மாள் இன்று என்ன எழுதுவார்?
சொகுசு ராமதாஸ்ஆக இதிலிருந்து தெரிவது என்ன? தைலாபுரம் தோட்ட மாளிகையில் ஜெனரேட்டர், ஏசியோடு வாழ்ந்தவருக்கு திருச்சி சிறை சென்ற பிறகுதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு அமலில் இருப்பதும், அதனால் மக்கள் படும் துன்பமும் கொஞ்சமாக தெரிய வந்திருக்கிறது. அதைக்கூட தனது கஷ்டங்கள் வழியாகத்தான் புரிந்து கொள்கிறார் என்றால் இவர் எவ்வ்வளவு பெரிய தியாகி?
சிறையில் வெஸ்டர்ன் டாய்லட் இல்லை என்பதால் இந்தியன் டாய்லட்டில் போகமாட்டேன் என்று தமிழர் ராமதாஸ் மறுத்த உடனேயே சிறை அதிகாரிகள் அதிகாலையிலேயே பஜாருக்குச் சென்று பூட்டிய கடையை திறக்க வைத்து மொபைல் டாய்லெட்டெல்லாம் வாங்கி வந்திருக்கிறார்கள். அவருக்கு பிடிக்கும் விதமாக சப்பாத்தி, இட்லி என்று நன்றாகவே கவனிக்கிறார்கள். திருக்கழுங்குன்றம் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் செல்ல முடியாது என்று அறிவித்த உடனேயே நீதிபதியே அங்கிருந்து திருச்சி சென்று வழக்கை பதிவு செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார். இப்படி ஒரு கைதி இருக்கும் சிறைக்கு எந்த வெளியூரிலிருந்து நீதிபதி வந்து வேலை செய்வார்? தற்போது ராமதாஸுக்கு முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆக இவையெல்லாம் கூறுவது என்ன? ஒரு பத்து நாள் சிறையில் அடைத்தாலே போதும், பாமகவின் அலட்டல் முடிவுக்கு வரும். இதனால்தான் அம்மாவின் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் பாமக அழுது புலம்புகிறது. சிறைக்குள்ளே மட்டுமல்ல சிறைக்கு வெளியேயும் அவர்கள் போராட பயப்படுகிறார்கள்.
பேருந்துகளை அடிப்பது என்பது ஓரிருவர் செய்யும் இரவுப்பணி என்பதால் ஆரம்பத்தில் அதிகம் செய்தனர். தற்போது அவர்களையும் தேடிப்பிடித்து போலிஸ் கைது செய்து சிறையில் அடைப்பதால் அந்த ஒளிந்து செய்யும் வீரம் குறைந்திருக்கிறது. மட்டுமல்ல ஆரம்பம் முதலே இந்த வன்முறைகளெல்லாம் நாங்கள் செய்யவில்லை என்று பாமகவின் தலை முதல் வால் வரை மக்கள் தொலைக்காட்சியில் அழாத குறையாக சத்தியம் செய்கிறார்கள். தற்போது விடுதலைச் சிறுத்தைகள்தான் பேருந்துகளை அடித்து எரித்தார்கள் என்று கரடியாக கத்தி வருகிறார்கள்.
இதைத் தவிர்த்த அறப்போராட்டங்களின் கதி என்ன? கைது என்பதால் யாரும் வர மறுக்கிறார்கள். பல மாவட்டங்களில் ஆஃப்ட்டரால் உண்ணாவிரதத்திற்கு கூட ஆளில்லை. உண்ணாவிரதம் நடக்கும் அன்று காலையில் போலீஸ்தான் பெரும் எண்ணிக்கையில் காவல் காக்கிறதே அன்றி பல இடங்களில் ஒரு காக்காய் கூட வரவில்லை. சில இடங்களில் மாவட்டச் செயலாளர் மட்டும் உண்ணாவிரதம் இருந்து கைதாகியிருக்கிறார். இறுதியில் வீடுகளில் கருப்புக் கொடியாவது ஏற்றுங்கள் என்றார்கள். அப்படிக் கருப்புக் கொடி ஏற்றியவர்கள், பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் கூட கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் தற்போது அதற்கும் யாரும் தயாரில்லை. பிளக்ஸ் பேனர் வைத்து வன்னிய வீரம் முழங்கியவர்களெல்லாம் அதை இரவோடு இரவாக கழட்டி அடையாளம் தெரியாமல் எரித்திருக்கிறார்கள்.
இப்படியாக பாமக எனும் கோமாளிக் கூட்டத்தின் பாசிசக் கனவு காமடி அவலத்தில் முடிந்திருக்கிறது.
இந்நிலையில் நாம் ஜெயா அரசின் கைது நடவடிக்கைகள் ஒரு பழிவாங்கல் நாடகம் என்பதை அம்பலப்படுத்துவதோடு பிசிஆர் சட்டப்படி பாமக, வன்னியர் சங்கம், இன்ன பிற ஆதிக்க சாதி வெறி சங்க தலைவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் படி போராட வேண்டும். பொதுவான அரசியல் கட்சிகள், தமிழினவாத இயக்கங்கள் எல்லாம் ராமதாஸை விடுதலை செய்யும்படி கோருகின்றனவே அன்றி ஆதிக்க சாதிவெறிக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரவில்லை. இது ஒரு வகையில் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியிடம் மண்டியிடும் போக்கே அன்றி வேறல்ல. ஆனால் ஆதிக்க சாதிவெறி என்பது எல்லா வகை சாதி மக்களுக்கும் எதிரானது என்பதே உண்மை.
உழைக்கும் வன்னிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பாமக மற்றும் வன்னியர் சாதி சங்க கும்பல்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற வேண்டும். சாதிவெறியை தூண்டி விட்டு இவர்கள் செய்யும் பிழைப்புவாத அரசியல் தலித் மக்களுக்கு மட்டுமல்ல, வன்னிய மக்களுக்கும் சேர்த்தே தீங்கிழைக்கிறது. ஆதலாம் பிறப்பினால் வன்னியராக உள்ள நண்பர்கள் பொதுவெளியில் ராமதாஸைக் கண்டிப்பதற்கு முன் வரவேண்டும்.
பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு போராட வேண்டிய நேரத்தில் நமது ஆற்றலெல்லாம் இத்தகைய சாதிவெறியர்களை அம்பலப்படுத்துவதற்கு சென்று விடுகிறது. ஆகவே சாதி அரசியல் நம்மை மேலும் புதைகுழிக்குள் கொண்டு விடும் என்ற உண்மையை புரிந்து கொள்வதோடு அதை நிறுத்துவதற்கும் நாம் பாடுபட முன்வரவேண்டும். vinavu.com

கருத்துகள் இல்லை: