திங்கள், 6 மே, 2013

உழவர் சந்தையை மீண்டும் தொடங்க தீர்மானம் ! அப்படியே திமுகாவின் மற்ற நல்ல திட்டங்களையும் ......

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் துவக்கிவைக்கப் போவதாகவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு நுகர்வோர், விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறதே?. பதில்:- குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி விற்கப்பட வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம். இந்தத் திட்டத்திலே பஸ்களிலே காய்கறிகளை ஏற்றிவருவதற்கான லக்கேஜ் கட்டணம் கிடையாது. விவசாயிகள் உழவர் சந்தைகளிலே தங்கள் பொருட்களை வைத்து விற்பதற்கு வாடகை கிடையாது. தராசு எடைக் கற்களைக் கூட அரசே இலவசமாக வாங்கி வழங்கும். 14-11-1999 அன்றுதான் முதன்முதலாக இத்திட்டம் மதுரை மூதூரில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளன்றே 4,500 கிலோ காய்கறிகள் 115 விவசாயிகள் மூலம் கொண்டு வரப்பட்டு அவை அனைத்தும் பிற்பகல் 4 மணி அளவிலேயே விற்கப்பட்டுவிட்டன. 4 ஆயிரம் பொதுமக்கள் நேரடியாக வந்து அந்தக் காய்கறிகளை விலைக்கு வாங்கிச் சென்றார்கள்.
100-வது உழவர் சந்தை 14-11-2000 அன்று காஞ்சீபுரம் மாவட்டம் பல்லவபுரத்திலே திறந்து வைக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 100 உழவர் சந்தைகள் திறந்து வைக்கப்பட்டன என்ற ஒன்றில் இருந்தே அந்தத் திட்டத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த உழவர் சந்தைகள் திட்டத்தைத்தான் தற்போது இந்த ஆட்சியினர் மீண்டும் தொடங்கிட முடிவு செய்துள்ளார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை: