திங்கள், 6 மே, 2013

சீனா பாஸ்போர்ட் விசா திடீர் கெடுபிடி

பீஜிங்: விசா, பாஸ்போர்ட் தொடர்பாக கெடுபிடி உத்தரவுகளை அமல்படுத்தி
வந்த சீனாவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல், கல்வி துறை நிபுணர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக விசா விதிமுறைகளை தளர்த்தியுள்ளன.சீனாவுக்கு வெளிநாட்டினர் விசா வாங்கிக் கொண்டு வருவதற்கு இதுவரை கடுமையான விதிகள் கடைபிடிக்கப்பட்டது. திடீரென்று வெளிநாட்டை சேர்ந்த திறமைசாலிகளை கவர்ந்திழுக்கும் வகையில் விதிகளை தளர்த்தி இருக்கிறது. நிர்வாகம், கல்வி, அறிவியல் துறைகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் வகையில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆர் 1, ஆர் 2 என இரு வகை விசா வழங்கப்படுகிறது. ஆர் 1 விசாவில் சீனா வருபவர்களுக்கு அங்கு தங்கும் உரிமையும் வழங்கப்படுகிறது. ஆர் 2 விசாவில் வருபவர்கள் சீனாவுக்கு எத்தனை முறையும் வந்து செல்லலாம் என்று சலுகை அளிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக 10 ஆண்டு பணியாற்றினால் அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான கிரீன்கார்டும் வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள திறமைசாலிகளை தங்கள் நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போல பாஸ்போர்ட், விசா வழங்குவதில் எளிய நடைமுறைகளை பின்பற்றவும் சீனா முடிவு செய்துள்ளது.

இதுபற்றி சீன நாட்டின் குடியுரிமை சட்ட சிறப்பு அதிகாரி லியு குஃபு கூறும்போது, ‘ஆர் 1 விசா பெறுபவர்கள் 5 ஆண்டு வரை சீனாவில் தங்குவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர் 2 விசா பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ச்சியாக 180 நாள் தங்க முடியும். இந்த நடைமுறைகள் வரும் ஜூலை முதல் அமல்படுத்தப்படும்’ என்றார். சீனா மற்றும் உலகமயமாக்கல் மைய இயக்குனர் வாங் ஹுயோ கூறுகையில், ‘வெளி நாட்டில் உள்ள திறமைசாலிகளை இந்த விசா எளிதில் ஈர்க்கும்’ என்றார்.

கருத்துகள் இல்லை: