வியாழன், 25 ஏப்ரல், 2013

விமானத்தில் ஒழிந்து பயணித்தவர் மரணம்

தென் மேற்கு லண்டனில் கடந்த செப்டம்பரில் வானிலிருந்து விழுந்து இறந்த ஒரு இளைஞன் ஆப்ரிக்காவின் அங்கோலா நாட்டிலிருந்து நல்ல வாழ்க்கையைத்தேடி விமானத்தில் திருட்டுத்தனமாக வந்தவர் என்று பிரிட்டனில் நடந்த மரண விசாரணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜொஸ் மட்டாடா என்ற அவர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர். இவரது உடல் கடந்த செப்டம்பரில் லண்டனின் அமைதியான ஒரு தெருவின் பாதசாரிகள் நடக்கும் பாதையில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் உடலில் பல காயங்கள் இருந்தன.
தனது 26வது பிறந்த நாளில் லுவாண்டாவில் இருந்து வந்த விமானத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த மட்டாடா, இந்த விமானம் லண்டனில் தரையிறங்கும் நிலையில், விமானத்தில் அடிப்பாகத்திலிருந்து தவறி விழுந்துவிட்டார்.
அவரது சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி சிம் கார்டு ஒன்றின் மூலம் , அவர் ஐரோப்பாவில் ஒரு நல்ல வாழ்க்கை வாழ விரும்புவதாகக் குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
அவர் தரையில் விழும் நேரத்தில் அவர் கடும் குளிரினாலோ அல்லது பிராண வாயு பற்றாக்குறையாலோ, இறந்திருக்கலாம் அல்லது, இறக்கும் நிலைக்கு வந்திருகலாம் என்று மருத்துவர் ஒருவர் விசாரணையில் கூறினார்.
இது ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணமாக மரண விசாரணை அதிகாரியால் முடிவு செய்யப்பட்டுள்ளது. bbc.com

கருத்துகள் இல்லை: