திங்கள், 22 ஏப்ரல், 2013

மோடி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை

நரேந்திர மோதி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை. குஜராத் மாடலுக்கு மாற்றாக ஏதோ பிகார் மாடல் என்று ஒன்று கண்டுபிடித்திருப்பதாக அவரும் சொல்கிறார், பிறரும் சொல்கிறார்கள். ஆனால் கண்ணுக்குத்தான் ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது.
மோதி, குஜராத்தின் பெருமை என்பதை முன்வைக்கிறார். யார் தயவும் இன்றி தன் நிதிநிலைக்கு உள்ளாகவே, தானாகவே தன் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவருவேன், ஏற்கெனவே பெருமளவு கொண்டுவந்துள்ளேன் என்கிறார். மாறாக, நிதீஷ் குமார் முன்வைப்பது பெரும் யாசகச் சட்டியை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று ஏந்துகிறார். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். உடனே ஒடிசா அடுத்து திருவோட்டைப் பெருமையுடன் ஏந்த ஒட்டுமொத்தமாக மாநில சட்டமன்றமே முன்வருகிறது. தீர்மானம் ஒன்றை இயற்றுகிறது.
இந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை. அப்படித்தான் ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக நாம் இருந்தோம். இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கையேந்து, கையேந்து, இன்னும் அதிகமாகக் கையேந்து. மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். Right of Centre என்ற கருத்தாக்கத்தை இன்று பளிச்சென்று, ஜகா வாங்காமல், தைரியமாகப் பேசும் ஒரே அரசியல்வாதி அவர்தான். அதனை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது. கையேந்தும் அரசியலில் மேலிருந்து கீழ்வரை ஒருவர் மாற்றி ஒருவர் கையேந்திக்கொண்டே இருப்பதால், இந்நிலை மாற யாருமே அனுமதிப்பதில்லை. இலவச அரிசி, இலவச சேலை, இலவசப் பல்பொடி, மாதாந்தர நிதியுதவி என்று மாறி மாறி நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கேட்டால் நியோ லிபரல் பாலிசியால் யார் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது. ஒரு பெரும் மத்தியவர்க்கம் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இந்த நாடு இந்த அளவு முன்னேறியுள்ளது.

நிதீஷ் குமார் திடீர் என்று செகுலரிசம் பேசுகிறார். அத்வானி தேவலாம், ஆனால் மோதி கூடாது. என்றிலிருந்து அத்வானி செகுலரிசத்தின் ஏற்கத்தக்க முகமாக ஆகியுள்ளார்? பாஜகவுக்கு எந்த அளவுக்கு நிதீஷ் தேவையோ அதற்கும் அதிகமாக நிதீஷுக்கு பாஜக தேவை. லாலுவா, மோதியா, யார் பெரிய எதிரி என்பதை நிதீஷ் முடிவு செய்துகொள்ளவேண்டும். ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்.

மோதி எதிர்ப்பாளர்கள், மோதிக்கு பாஜக உள்ளேயே பெரும் எதிர்ப்பு இருக்கும், எனவே அவர் அதைத் தாண்டி வரட்டும் என்கிறார்கள். அந்த எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே இருக்கின்றன. வரிசையாக பாஜக தலைவர்கள் மோதியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பாஜகவின் வேறு எந்த முதல்வரும் ஊடகங்களின் ஆசைப்படி நடக்கப்போவதில்லை. அத்வானி, சுஷ்மா சுவராஜ் இருவரும்தான் இன்னும் தெளிவாகத் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை. வரும் சில மாதங்களில் அது தெளிவாகத் தெரிந்துவிடும். பாஜக மோதியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.

மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும். இதனால் பாஜக தலைமையில் மோதி பிரதமராக, ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சிக்கு வரும். அதை வைத்துக்கொண்டு மோதியால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதிலிருந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும். அப்போதுதான் இந்தியாவில் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும். முக்கியமாக சோஷலிசக் கட்டமைப்புகள் பலவற்றை இழுத்து மூடவேண்டும். முதலாவதாக திட்டக் குழு. இதற்கு இன்று தேவையே இல்லை. நாடாளுமன்ற அமைப்புக்குள் இல்லாத இந்தத் தனி அமைப்புகளை ஒழிக்கவேண்டும். அதேபோல சோனியா காந்தி கொண்டுவந்துள்ள NAC.

கல்வி, தொழில்துறை, வரி போன்ற பலவற்றிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அரசாங்கத்தைச் சுருக்கிச் சிறிதாக்கவேண்டும். ஊழல் பெருகும் இடங்களைத் தேடி தேடி அடைக்கவேண்டும்.

ஆனால் அதற்கு முன்னதாக பாஜக உள்ளேயே சில சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும். கோட்பாட்டுத் தெளிவு இல்லாத தலைவர்கள் ஒதுக்கப்படவேண்டும். பாஜக ஒரு உண்மையான வலதுசாரி இயக்கமாக, குழப்பங்கள் இன்றி, உருவாகவேண்டும்.

கருத்துகள் இல்லை: