திங்கள், 18 மார்ச், 2013

Swiss Tourist பாலியல் பலாத்கார வழக்கில் 6 பேர் கைது

ஸ்விஸ் நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்; ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்துக்கு கணவருடன் சுற்றுலா வந்த 36 வயதுடைய ஸ்விஸ் நாட்டுப் பெண், வெள்ளிக்கிழமை இரவு தாடியா மாவட்ட வனப்பகுதியில், சைக்கிளில் பயணம் சென்றார்.
அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர், அந்தப் பெண்ணிடமும், அவரது கணவரிடமும் இருந்த செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்று விட்டனர்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேக நபர்கள் 20 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், 6 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து, ஸ்விஸ் தம்பதிக்குரிய லேப்-டாப், செல்போன் மீட்கப்பட்டன.
இதுபற்றி, சம்பல் சரக காவல் துறை துணைத் தலைவர் டி.கே. ஆர்யா கூறுகையில்,"" ஸ்விஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாபா, புத்தா, ராம்ப்ரோ, கஜா என்ற பிரஜேஸ், விஷ்ணு காஞ்சார், நிதின் காஞ்சார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.

காவல் துறை தலைவர் எஸ்.எம். அஃப்சல் அளித்த பேட்டியில்,""பாதிக்கப்பட்ட ஸ்விஸ் நாட்டுப் பெண் மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்,''என்று கூறினார்.
இதனிடையே, மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் உமாசங்கர் குப்தா அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வரும்போது, தங்களது பயணத்திட்டம் குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், இந்த தம்பதிகள் அதை பின்பற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஸ்விஸ் அரசு அதிர்ச்சி: இந்தியாவில் தங்கள் நாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இது ஒரு துயர சம்பவம் என்றும் ஸ்விஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: