எந்தப் படத்தையும் முழுமையாக ஏற்கவும்
முடியாது. நிராகரிக்கவும் முடியாது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. இது
ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மை போல தோன்றும். ஆனால் இதே வாதம் படு மோசமான
மசாலா படங்களுக்கும் பொருந்தும். அவற்றில் கூட ஓரிரு ஏற்கத்தக்க அம்சங்கள்
எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு படம் வெகுஜன பார்வையாளர்கள் முன்பு
வைக்கப்படும்போது அவர்கள் அந்தப் படத்தை எப்படி
புரிந்துகொள்ளும் வாய்ப்பை அந்தப் படம் தருகிறது என்பதே எனக்குப்
பிரதானமானது. வெகுஜனங்களுக்கான படத்தில், சிறப்பான அம்சங்கள் அறிவுஜீவி
ஆய்வாளர்களுக்கும் திரைவிமர்சன மேதைகளுக்கும் மட்டுமே புரிகிற மாதிரியும்,
சாதாரணப் பார்வையாளருக்கு அவை எட்டாத விதத்திலும் இருந்தால் எனக்கு அது
உடன்பாடில்லை. ஒரு படத்தின் இறுதியில் ஒற்றை செய்தியாக ஒரு சிறந்த கருத்து
சாதாரணப் பார்வையாளர்களுக்குப் போய் சேர்ந்துவிடுகிறது என்பதற்காக அந்தப்
படத்தில் மறைக்கப்படும், மழுப்பப்படும் திரிக்கப்படும் திணிக்கப்படும்,
கருத்துகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்கமுடியாது. பார்வையாளர்கள் அந்தக்
கருத்துகளையும் படச் செய்தியுடன் சேர்ந்தே ஏற்றுக் கொள்ளச்
செய்யப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குறைகள் சிறியனவாக உள்ளனவா, அதிகமாக்
உள்ளனவா என்பதை கவனித்தே ஆகவேண்டியிருக்கிறது. இதன் காஸ்ட் பெனஃபிட் ரேஷியோ
முக்கியமானது.
பரதேசி படத்தைப் பற்றி விரிவாக எழுத எனக்கு விருப்பமில்லை. என்
சக்தியையும் நேரத்தையும் அதில் வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. எனவே என்
கருத்துகளை சுருக்கமாக மட்டுமே சொல்லப் போகிறேன். இந்த ஒவ்வொரு கருத்தையும்
விரிவுபடுத்திப் பேச என்னிடம் விஷயம் உண்டென்றபோதும்.எரியும் பனிக்காடு என்ற டாக்டர் டேனியலின் டாக்கு-நாவலையும் நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா என்ற சிறுகதையையும் பாலா இணைத்து தன் திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.இரண்டு கதைகளும் கருப்பொருளில் தொடர்புடையவையே அல்ல. எனில், இதற்கான அவசியம் என்ன ? எரியும் பனிக்காடு அதனளவில் முழுமையாகப் படமாக்கப்பட்டாலே மூன்று மணி நேரப் படமாக எடுக்கும் சாத்தியங்களும் பாத்திரங்களும் உள்ள நாவல். ஆனால் அதில் பாலா தன் படங்களில் வழக்கமாக வைத்திருக்ககூடிய பார்முலாவுக்கான பாத்திரம் எதுவுமில்லை. சேது, பிதாமகன் விக்ரம் பாத்திரங்கள் போலவோ அகோரி போலவோ ஒரு பாத்திரத்தை கதாநாயகனாக வைக்கும் பார்முலா பாலாவுடையது. இடலாக்குடி ராசா அதற்கு தோதான பாத்திரம். இதே போல பரதேசி படத்தில் வரும் பிரதான பெண் பாத்திரங்கள் எல்லாம் பாலாவின் முந்தைய படங்களில் லைலா, சங்கீதா போன்றோர் செய்த பாத்திரங்களின் மறுவார்ப்புதான். இவர்களின் உடல்மொழி எல்லாம் தொடர்ந்து பாலாவின் முந்தைய படங்களில் இருக்கும் அதே செயற்கையான உடல்மொழிதான். இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாத ஒரு படைப்பு எரியும் பனிக்காடு. அதில் தன் சைக்கிக் பர்வர்ட்டட் பார்முலாவை பாலா புகுத்திச் சிதைத்திருப்பதுதான் என்னைப் போன்றோரைக் கண்டிக்க வைக்கிறது. லைஃப் ஆஃப் பை நாவலை பாலாவிடம் படமாக்கக் கொடுத்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்தால் இந்த சிக்கல் புரியும்.
எரியும் பனிக்காடு நாவலை எழுதிய டாக்டர் டேனியல் ஒரு விஷயத்தை தெளிவாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை 1900களில் தேயிலைத்தோட்டங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அப்போது அங்கே வேலை பார்த்தவர்களிடம் அவர் கேட்டு பதிவு செய்ததன் அடிப்படையில் எழுதுவதாக் சொல்கிறார். தன் கதையின் ஆரம்பத்திலேயே கதை நடக்கும் வருடம் 1925 என்று சொல்கிறார். அந்தக் கிராமம் அரிஜனங்கள் வாழும் கிராமம் என்று எழுதுகிறார்.
பாலாவோ தன் படத்தில் கதை நடப்பது 1939ல் என்கிறார். அது தலித்துகளின் (அரிஜனங்களின்) கிராமம் என்பதற்கான குறிப்பு எதுவும் என்னைப் போன்ற பாமர பார்வையாளனுக்குப் புரியும் விதத்தில் படத்தின் முதல்பகுதியில் கிடையாது. அந்த கிராமம் பொய்யானது. அதில் இருக்கும் மனிதர்கள் தட்டையாக எல்லாரும் பாலாவின் சைக்கிக் பொம்மலாட்ட பொம்மைகளாக இருக்கிறார்கள். கிராமத்தில் வர்க்க அடுக்கோ சாதி அடுக்கோ தெரியவருவதில்லை. சோழர் காலத்திலிருந்து வரிவசூல் முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்ட தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அதற்கான அரசுப் பிரதிநிதி உண்டு. ஆட்சி சோழர் முதல் இங்கிலீஷ்காரர்கள் வரை மாறினாலும் இந்தப் பிரதிநிதியும், ரெவின்யூ அமைப்புகளும் தொடர்ந்து வருகின்றன. பாலாவின் கிராமத்தில் எதுவும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கிராமம் 1939ன் தமிழ் கிராமம் என்பது பெரும்பொய். ஏனென்றால் 1939 என்பது இன்னும் எட்டே வருடங்கள்தான் சுதந்திரத்துக்கு அப்பால் இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் உச்சமே கடந்துவிட்ட காலம் அது கடைசி போராட்டமே 1942தான். பெரியார் 1917லிருந்து 1924 வரை காங்கிரசில் இருந்துவிட்டு பின் சுயமரியாதை இயக்கம் நடத்திவிட்டு அடுத்து நீதிக்கட்சியிலும் இணைந்துவிட்டார். 1920 முதல் 1937க்குள் நீதிக்கட்சி 13 வருடம் ஆட்சி நடத்தியிருக்கிறது. 1939ல் பெரியார்தான் அதன் தலைவர். தனி திராவிட நாடு கோரி பெரியார் மாநில மாநாடு நடத்தியது 1939ல்தான். முதல் பாதி முழுக்க பாலா காட்டும் கிராமத்தில் இதற்கான எந்த அடையாளமும் கிடையாது. படத்தின் கடைசி பகுதியில் மட்டும் திடீரென இரண்டொரு வசனங்களில் காந்தியும் காங்கிரசும் தலை நீட்டுகிறார்கள்.
பாலா காட்டும் தேயிலை எஸ்டேட்டும் 1939ன் எஸ்டேட் அல்ல. ஏனென்றால் 1936 லேயே தேயிலைத் தோட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. அதற்கான விழிப்புணர்ச்சி அங்கே தொடங்கிவிட்டது. பாலாவின் எஸ்டேட்டில் அதற்கான அறிகுறியே இல்லை. காரணம் நாவல் 1925ல் நடப்பதாக டேனியல் சொன்னதை பாலா 1939 என்று மாற்றிய தவறுதான். ஏன் 1939 என்று மாற்றினார் ?
எழுத்தாளர் டாக்டர் டேனியல் 1940 எஸ்டேட்டுக்குள் வந்தார். பாலாவின் படத்தில் வரும் கிறித்துவ டாகடர் பரிசுத்தமும் அப்போதுதான் வரவேண்டும் என்பதற்காக கதையை பாலா 1939ஆக மாற்றியிருக்கிறார். அதாவது டேனியல் பாத்திரத்தைத்தான் பரிசுத்தமாக பாலா இழிவுபடுத்த் திட்டமிட்டிருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.பாலாவின் இந்துத்துவ அரசியல் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் ஆய்வு செய்யப்படவும் வேண்டியதாகும். டேனியலின் நாவலில் அவர் தன்னையே ஆபிரகாம் என்ற டாக்டர் பாத்திரமாக்கி தான் எஸ்டேட்டுக்கு வந்ததையும் தன் அனுபவங்களையும் சொல்கிறார். தொழிலாளர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை விவரிக்கிறார். அந்த கிறிஸ்துமஸ் அனுபவங்களை பாலா எடுக்கவில்லை. நேர்மாறாக டேனியலைக் கேவலப்படுத்தி குத்தாட்டம் போட்டு மதமாற்றம் செய்யும் கோமாளியாகக் காட்டியிருக்கிறார். கதை உரிமையை படமாக்க பாலாவுக்குக் கொடுத்த டேனியலின் வாரிசுகள் இதற்காக பாலா மீது அவதூறு நஷ்ட ஈடு வழக்கு போட போதுமான முகாந்தரம் இருக்கிறது. மத போதகர்களை கிண்டலடிப்பதையும், படத்தின் முதல்பாதியில் நாஞ்சில் நாடனின் சரமாரியான தென் தமிழக பாலியல் கெட்ட வார்த்தை வசவுகளையும் யூ படத்தில் அனுமதித்திருக்கும் சென்சார் போர்ட், இனி பாலாவின் ஆன்மீக வழிகாட்டி ஜக்கி, ஜயேந்திரர், பிஜே போன்றோரை கிண்டல் செய்தும், சென்னை தமிழ் வசவுகளை சரமாரியாக அனுமதிக்கவும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.
டேனியலின் நாவலில் கங்காணிகளும் அதே சாதியினர்தான். அதுதான் முதலாளிகளின் தந்திரம். பாலா படம் அந்த தந்திரம் பற்றிப் பேசுவதில்லை.டேனியல் நாவலில் முழு கிராமமும் நடை பய்ணமாக புறப்பட்டு செல்வதில்லை. ஒரு ஜோடி ஊரை விட்டு பழனிக்குப் போய் ரயிலில் கங்காணியால் அழைத்து செல்லப்பட்டு போகிறது. பாலா படத்தில் எல்லாரும் போகிறார்கள். ஏன் எல்லாரும் போகிறார்கள்? கடும் பஞ்சமா? ஊரில் வேலை இல்லையா? அதெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. ஊரை பஞ்சக் கொடுமையில் சிக்கி தவிக்கும் ஊராகவே பாலா காட்டவில்லை. குதூகலமாக கல்யாணம் நடக்க விருந்து சாப்பிடும் சூழல்தான் காட்டப்படுகிறது. அதையடுத்து பெரும் பஞ்சம் என்ற ஒரு குறிப்பு கூட கிடையாது. ரயிலில் செல்லாமல், நடந்து எஸ்டேட்டுக்கு செல்பவர்கள் 48 நாள் நடக்கிறார்களாம். அப்படி நடந்தால் உத்தரப் பிரதேசத்துக்கே போய்விடலாம். தென் தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வால்பாறைக்கு செல்ல பத்து நாள் நடந்தாலே போதும். பாலாவின் ஜனங்கள் நடந்து போகிற வழியில் 48 நாட்களிலும் வழியில் ஒரு ஊர் கூட கிடையாது. வழி நெடுக பொட்டல் காடுதான். இப்படி எல்லாமே பொய். எஸ்டேட்டில் ஆங்கிலேய முதலாளி பாத்திரம் மசாலா சினிமாவின் காமெடி வில்லன் மாதிரி இருக்கிறது. குமரிமுத்து மாதிரி அவர் தோட்டப்பெண் தொழிலாளிகளிடம் விஷமம் செய்கிறார். டேனியலின் நாவல் எஸ்டேட் அதிபர்கள் எப்படி பாலியல் குற்றங்கள் செய்வார்கள் என்பதை துல்லியமாக சொல்லியிருக்கிறது, ஆசைப்படும் பெண்ணை பங்களாவுக்கு அனுப்பச் சொல்வார்களே ஒழிய, திறந்த வெளியில் களத்தில் வம்பு செய்யமாட்டார்கள். அப்படி செய்யக்கூடியவர்கள் மேஸ்திரிகள், கங்காணிகள் போன்றோர்தான். இந்த நுட்பங்களெதிலும் பாலாவுக்கு அக்கறையில்லை. இவரைத்தான் மகா இயக்குநர் என்று ஜால்ரா அடிக்கிறது ஒரு கூட்டம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லப் போவதில்லை. இப்படியாக பாலாவின் சைக்கிக் பார்முலாவில் மொண்னையாக எடுக்கப்பட்ட ஒரு படம்தான் பரதேசி. ஒவ்வொரு முறை டீ குடிக்கும்போதும் தோட்டத் தொழிலாளிகளின் ரத்தமும் வியர்வையும் நினைவுக்கு வருவதை சாதித்த ஒரே படம் சில வருடங்கள் முன்பு ம.க.இ.க எடுத்த ஆவணப்படம்தான். தொழிலாளர்களின் அடிமை நிலையைப்பற்றிய சோகத்தையும் அதையொட்டிய நம் கோபத்தையும் கமர்ஷியல் பார்முலாவுக்குள்ளேயே நின்று எடுத்த வசந்தபாலனின் அங்காடித்தெரு ஏற்படுத்தியதில் கால்வாசியைக் கூட பரதேசி எனக்கு ஏற்படுத்தவில்லை. கலைப்படம் போல பொய்த் தோற்றம் காட்டும் ஒளிப்பதிவும், இசையும், படக்குழுவினரின் கடும் உழைப்பும் ஒரு படம் சரியானதாக இருப்பதற்குப் போதாது. படத்தில் ஒரே நிஜமான பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை அளித்திருப்பது அதர்வாவின் பாட்டியாக நடித்திருக்கும் கச்சம்மாள் மட்டும்தான். அவரை நடிக்கவைத்ததற்காக பாலாவைப் பாராட்டுவதைத் தவிர வேறு எதற்காகவும் என்னால் பாலாவைப் பாராட்ட முடியாது..gnani.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக