மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகல்! உணர்ச்சி கொந்தளிப்பில் துள்ளும் தி.மு.க. தொண்டர்கள்!! தலைமை முடிவே எனது முடிவு : மு.க. அழகிரி
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார் அவர். ஆதரவு வாபஸ் பெறுவதுடன், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இன்று காலை வெகு சீக்கிரம் அறிவாலயத்துக்கு வந்து விட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, அனைத்து மாவட்ட செயலர்களையும் உடனடியாக அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார். அவர்களில் பலர் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதையடுத்து, அனைத்து உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பி, சென்னையில் உள்ளவர்கள் அறிவாலயத்தில் கூடினர்.
அப்போது செய்யப்பட்ட ஆலோசனையை அடுத்து மத்திய அரசில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்தார் கருணாநிதி.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர், “இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தி.மு.க.வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது. இன்று அல்லது நாளை தி.மு.க. மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர்” என்றார்.
தி.மு.க. தலைவரின் இந்த அறிவிப்பால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உள்ள தி.மு.க. தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், வாழ்த்துக் கோஷம் எழுப்பியும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலத்துக்குப்பின், ‘பழைய’ ஃபோர்மில் தி.மு.க. தொண்டர்களை காணக்கூடியதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக