புதன், 20 மார்ச், 2013

பாலியல் குற்ற தடுப்பு மசோதா நிறைவேறியது: 40 சதவீத எம்.பி.,க்களே பங்கேற்பு

புதுடில்லி: பெண்களுக்கு எதிரான, பாலியல்குற்றங்களை தடுக்கும் புதிய சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. முக்கியமான இந்த மசோதா ஓட்டெடுப்பின் போது, வெறும் 40 சதவீத எம்.பி.,க்களே கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அவையில் இல்லை. டில்லி, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, "பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மிக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, அவசர சட்டம், கடந்த மாதம் அமல்படுத்தப் பட்டது. இந்த அவசர சட்டத்தை, அடுத்த மாதம், 4ம் தேதிக்குள், சட்டமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளதை அடுத்து, அதற்கான புதிய மசோதாவை, மத்திய அரசு தயாரித்தது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான, வயது வரம்பை, 16 ஆக குறைக்க, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்தன. இதையடுத்து, திருத்தப்பட்ட மசோதாவில், இதற்கான வயது வரம்பு, மீண்டும், 18 ஆக தொடர, சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, இந்த மசோதாவை, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, இனியும், சமூகம் பொறுக்காது என்பதை உணர்த்த வேண்டிய நேரம் வந்து விட்டது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்காகவே, இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார். உடன், இந்த மசோதா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில், சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வயது வரம்பு உள்ளிட்ட, மேலும் சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தனியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது, கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஒரே நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.


"ஆசிட்': இந்த மசோதாவில், முதல் முறையாக, ஆசிட் வீச்சு, குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீசுவோரை எதிர்த்து, பெண்கள் தாக்குதல் நடத்தினால், அது, தற்காப்பாக கருதப்படும். குற்றவாளிகளுக்கு, குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின் தொடருவது, மற்றவர்கள் உறவில் ஈடுபடும்போது, மறைந்திருந்து உற்றுப் பார்ப்பது மற்றும் பாலியல் தொல்லைகள் ஆகிய குற்றங்கள் குறித்த விளக்கமும், அதற்கான தண்டனையும், இந்த மசோதாவில் இடம் பெறும். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டால், சம்பந்தபட்ட மருத்துவமனைகள், அந்த பெண்களுக்கு, உடனடியாக, இலவசமாக, முதல் உதவி அளிக்க வேண்டும். லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தை அடுத்து, நேற்று இரவு இந்த மசோதா நிறைவேறியது. dinamalar,com

கருத்துகள் இல்லை: