வெள்ளி, 22 மார்ச், 2013

காஞ்சி சங்கர மட சங்கரராமன் கொலை வழக்கு முக்கிய குற்றவாளி படுகொலை


சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன், 2004 செப்டம்பர் 3ம் தேதி கோயில் வளாகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த கூலிப்படை தலைவன் கதிரவன் தலைமையில் சின்னா, அம்பிகாபதி, நண்டு பாஸ்கர், குமார், ஆந்திரா குமார், அணில் குமார், மீனாட்சி சுந்தரம் ஆகியோர், சங்கரராமனை கொலை செய்தது அம்பலமானது. காஞ்சி சங்கர மடத்துக்கு நெருக்கமான அப்பு என்பவர் மூலம் கூலிப்படை ஏற்பாடு செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. சங்கர மடத்தின் கான்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் கூலிப்படைக்கு பணம் கொடுத்ததாக கூறப்பட்டது.இதில் கைதான ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார். அவர் கொடுத்த வாக்குமூல அடிப்படையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் தம்பி ரகு, கூலிப்படை தலைவன் கதிரவன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்< அவர்கள் ஜாமீனில் வந்தனர். இவ்வழக்கு தற்போது புதுவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக 1,823 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் 3வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தவர் கதிரவன் (42). இவரது தந்தை மாணிக்கம், எம்ஜிஆரின் உதவியாளராகவும், கார் டிரைவராகவும் பணியாற்றியவர். திருமணமாகாத கதிரவன், கே.கே.நகர் சத்யா கார்டன் வி.வி கிரி தெருவில் உள்ள அண்ணன் அலங்கார் வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்பத்தினருடன் திருப்பதி செல்ல முடிவு செய்து கதிரவன் நேற்று காலை 7.45 மணியளவில் சொந்த காரில் அண்ணன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.  அதே பகுதி காமராஜர் நகர் 3வது தெரு சர்வ சக்தி விநாயகர் கோயில் அருகே வந்தபோது, எதிரே 2 கார்கள் வந்தன. அதில் ஒரு கார், கதிரவன் கார் மீது மோதி யது. இதனால் அவர் காரில் இருந்து இறங்கி ஓடினார்.


உடனே கார்களில் இருந்து 5 பேர், டிரைவரை அரிவாள் முனையில் சிறைபிடித்தனர். பின்னர் கதிரவனை ஓடஓட விரட்டிப்பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் கார்களில் ஏறி தப்பினர். சினிமாபோல் நடந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் சிதறி ஓடினர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கதிரவனை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழ¤யிலேயே அவர் இறந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்தனர். இதற்கிடையில், புளியந்தோப்பை சேர்ந்த சரவணன், (24), ராஜேஸ் என்ற யமஹா ராஜேஸ் (28), ஒல்லி ராஜேஸ் (27), மாதவன் (24), அமீர் (25) ஆகிய 5 பேர், திருவொற்றியூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட் கோவிந்தராஜ் உத்தரவின்படி அவர்கள் சிறை யில் அடைக்கப்பட்டனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கிய அப்பு, கதிரவன், சின்னா என்ற சின்ன கேசவன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்குள் பெண்கள் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள் ளது. இந்த மோதலில் அப்புவின் ஆதரவாளரான கதிரவன் 2011 ஏப்ரல் 30ம் தேதி சின்னாவை பூந்தமல்லி கோர்ட் வளாகத்திலேயே ஆட்களை வைத்து தீர்த்து கட்டியுள்ளார். அப்போது பகத்சிங் என்ற வக்கீலும் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கதிரவனுக்கும், சின்னாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.  இப்போது பழிக்கு பழியாக சின்னாவின் ஆதரவாளர்கள் கதிரவனை தீர்த்து கட்டியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நில விவகாரம் காரணமா?

கொலை குறித்து தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பூந்தமல்லியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட நில பிரச்னையை கதிரவன் தீர்த்து வைத்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் கதிரவன் மீது கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், சங்கரராமன் கொலையில் முக்கிய சாட்சியாக கதிரவன் இருந்துள்ளார். இவர் இருந்தால் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்த சிலர் கூட இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தனிப்படையினர் கருதி விசாரிக்கின்றனர்.

காவலில் எடுக்க முடிவு

“சங்கரராமன் கோயிலில் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டார். அதேபோன்று கதிரவனும் கோயில் முன்பே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்காக கூலிப்படையினருக்கு ரூ.10 லட்சம் வரை கைமாறி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே அவர்களை ஒருசில நாட்களில் போலீஸ் காவலில் எடுக்க உள்ளோம். கொலை தொடர்பாக ஓட்டேரி ராஜேஸ், குட்கா நாகபூஷண், ஜான்சன், மாட்டுத்தாவணி சுந்தரம் ஆகியோரையும் விசாரிக்க உள்ளோம்’’ என்று போலீசார் தெரிவித்தனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: