ஞாயிறு, 17 மார்ச், 2013

கலைஞர் சோனியாவுக்கு கடிதம் : கூட்டணியில் திமுக நீடிக்காது

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக நீடிக்காது என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய அநீதியை போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் இந்தியா பிரகடனப்படுத்த வேண்டும். இந்த இனப்படுகொலை தொடர்பாக நம்பகத்தன்மையுள்ள சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட காலவரையரைக்குள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதித்தேடிதர யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு இந்தக் கூட்டணியில் திமுக இனிமேலும் நீடிக்காது என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.எங்களுக்கும், இந்த கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம். நீடிக்காது. நீடிக்காது என்பது உறுதி. அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ. அதைக்கூட இந்தியா சொல்லத் தவறினால், அது இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும், பெருத்த அநீதி என்று நாங்கள் கருதுகிறகாரணத்தினால்தான், இந்த கூட்டணியிலே நீடிப்பது என்பது அர்த்தமிருப்பதாக தெரியவில்லை என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதையே இப்போதும் சொல்லுகிறேன். இலங்கை தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இனியாவது ஐ.நா. தீர்மானத்தை வலுப்பெற செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: