செவ்வாய், 19 மார்ச், 2013

Red Teaயின் மறைக்கப்பட்ட குழந்தை பாலாவின் பரதேசி ஆக

எரியும் பனிக்காடு” நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் நாவலிலிருந்து மொத்தக் கதையை உருவியிருந்தாலும் அந்த நாவலுக்கான கிரெடிட் படத்தில் கொடுக்கப்படவில்லை. எழுத்தும் இயக்கமும் பாலா என்று டைட்டில் போடுகிறார்கள். கேரக்டர்களின் பெயரை மாற்றிவிட்டால் கதை அவருடையதாகிவிடும் போலிருக்கிறது என்று நம்பித்தான் படம் பார்க்க வேண்டும். Red Tea நாவல் 1969 லேயே ஆங்கிலத்தில் வந்துவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டு இரா.முருகவேள் மொழிபெயர்த்து தமிழில் வெளியிடும் வரை அந்த நாவல் தமிழகத்தில் எந்தக் கவனமும் பெற்றிருக்கவில்லை. முருகவேளின் மொழிபெயர்ப்பு இல்லாமலிருந்தால் பாலாவுக்கும் இந்த ஸ்டோரி லைன் கிடைத்திருக்க முடியாது. அதற்காக, முருகவேளுக்காவது ஒரு நன்றி போட்டிருக்கலாம். ம்ஹூம். படம் பார்க்க வருபவர்களுக்கு துன்பத்தின் பக்கங்களை எப்படியெல்லாம் காட்ட முடியும் என்று பாலாவுக்கு தெரிந்திருக்கிறது. சாகடித்துவிடுகிறார். அலுவலகத்தில் நசுக்கிறார்கள். வெளியுலகம் வதைக்கிறது. வீட்டில் அதைவிட பிரச்சினைகள் என ஒருவன் Relaxationக்காக தியேட்டருக்குச் சென்றால் “நீ தூக்கில் தொங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை” என்று சொல்கிறார்கள்.
இந்த மாதிரி படங்களை கலைக்கண்களோடு பார்க்க வேண்டும் என்று யாராவது சொல்லிவிடக் கூடும் என்று பயமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் அப்படி நினைத்துக் கொண்டுதான் தியேட்டருக்குள் போயிருந்தோம். ஆனால் அப்படியெல்லாம் அசால்ட்டாக இருப்பது இந்த படத்திற்கு சாத்தியமே இல்லை. படம் நன்றாக இருக்கிறதா அல்லது நன்றாக இல்லையா என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. ஆனால் தியேட்டருக்குள் அமர்ந்திருக்க முடியவில்லை என்று வேண்டுமானால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
ஒளிப்பதிவு, இசை பற்றியெல்லாம் எதுவும் எழுதும் அளவிற்கு அறிவும் இல்லை பொறுமையும் இல்லை. ஆனால் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். எஸ்டேட்டுக்கு ஷூட்டிங் போகும் போது லைட்களை மறந்துவிட்டு போய்விட்டார்களோ அல்லது லைட் வாடகையை மிச்சம் பிடிக்கலாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை. செழியன் இருட்டிலேயே படம் முழுவதையும் முடித்திருக்கிறார். ஒரு Mood Settingக்காக இருளிலேயே படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால் அதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு என்று இடதுகையால் தள்ளிவிட்டு விட முடியும் என்று நினைக்கிறேன். 
முதல் பாதியில் சில சீன்களுக்கு பிறகாக கிராமத்திலிருந்து எஸ்டேட்டுக்கு நடக்கத் துவங்குகிறார்கள். பேக்ரவுண்டில் ஒரு பாடல் ஒலிக்கிறது. வழக்கமாக பாடல் போடும் போதெல்லாம் சிகரெட் பிடிக்கப் போகும் நம் தமிழவர்கள் ஒரு பாக்கெட் சிகரெட்டை முடித்தால் கூட பாட்டு முடிவதில்லை. அத்தனை நீளம். இரண்டாம் பாதியிலும் இப்படியொரு நீளமான பாடல் வருகிறது. பாடல்களுக்கான முதல் வார்த்தை எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆனால் இரண்டாவது பாதியில் கேட்ட அந்தப்பாடலால் வந்து சேர்ந்த தலைவலி இன்று காலை வரைக்கும் தொடர்ந்தது.
நடிகர்களின் நடிப்பைப் பற்றி குறிப்பிடாமல் சினிமா விமர்சனம் செய்ய முடியாது என்றெல்லாம் எதுவுமில்லை. அல்லவா? விட்டுவிடலாம். Red Tea நாவலை எழுதிய பி.எச்.டேனியலின் பெயருக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்கவில்லை என்றாலும் கூட தொலையட்டும் என்றுவிட்டுவிடலாம். ஆனால் அவருக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார் பாலா.  நாவலின் இறுதிப்பகுதியில் ஆபிரஹாம் என்ற டாக்டர் வருவார். அவர்தான் எஸ்டேட்டின் அவலங்களை மாற்ற முயற்சிப்பார். நாவலில் வரும் டாக்டர் ஆபிரஹாம் வேறு யாருமில்லை- நாவலாசிரியர் டேனியல்தான். படத்திலும் ஒரு டாக்டர் கதாபாத்திரம் வருகிறது. வெறும் கிறித்துவ மத பிரச்சாரகராக காட்டுகிறார்கள். எஸ்டேட் தொழிலாளர்கள் மீதான அவரது அக்கறை, தொழிலாளர்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும் என எஸ்டேட் முதலாளிகளுக்கு அவர் அளித்த அழுத்தங்கள், தேயிலை தொழிலாளர்களுக்கான சங்கம் உருவாக்குவதில் அவரது பங்களிப்பு என அத்தனையையும் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். 
நாவல் கொடுத்த வாசிப்பின்பம், உருவாக்கிய சலனம் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இந்தப்படம் ஜூஜூபி. ஒருவேளை நாவலை வாசிக்காதவர்களுக்கு இது க்ளாசிக்கான படமாகத் தெரியக் கூடும் என நினைக்கிறேன்.நம்பாதவர்கள் “எரியும் பனிக்காடு” நாவலை வாசித்துவிடுங்கள். 
தியேட்டரை விட்டு வெளியே வரும் போது ஒவ்வொரு முகத்தையும் பார்க்க வேண்டுமே. பெரும்பாலான பெண்கள் அழுது கொண்டிருந்தார்கள். அத்தனை ஆண்களும் பேயறைந்தாற்போல இருந்தார்கள். பேய் அறைந்ததை பார்த்ததுண்டா என்று கேட்டுவிடாதீர்கள். இந்தப்படத்தை பார்த்த பிறகு தைரியமாகச் சொல்வேன். “பார்த்திருக்கிறேன்” என்று. nisaptham.com

கருத்துகள் இல்லை: