சனி, 23 மார்ச், 2013

இனி யாரும் ஏழை இல்லை தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.13,862

தமிழக அரசுக்கு தற்போதுள்ள கடனில், ஒவ்வொரு குடிமகனும், 13 ஆயிரத்து 862 ரூபாய்க்கு பொறுப்பாளியாக உள்ளனர். தமிழக அரசின் கடன் தொகை, 2013-14ல், 1.41 லட்சம் கோடியாக உயரும். இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை: இக்கடன் தொகையை, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகைக்கு கணக்கிடும்போது, ஒவ்வொரு குடிமகனும், 13 ஆயிரத்து 862 ரூபாய், 19 காசுகளுக்கு பொறுப்பாளி ஆகிறார். இந்த கணக்கீடு, 2011ல் தமிழகத்தில் உள்ள, 7.21 கோடி மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், மக்கள் தொகை அதிகரித்திருக்கும் பட்சத்தில், இதில், கொஞ்சம் குறையலாம். தமிழகத்தின், 2013-14ம் நிதி ஆண்டின் வருவாய், 1 லட்சத்து 18 ஆயிரத்து 579 கோடி ரூபாய்; வருவாயில் செலவு, 1 லட்சத்து 17 ஆயிரத்து 916 கோடி ரூபாய்; வருவாய் உபரி, 664 கோடி ரூபாய். நடப்பு, 2012-13ம் நிதி ஆண்டில் வருவாய், 1 லட்சத்து ஆயிரத்து 777 கோடி ரூபாயாக இருந்தது. செலவினம், 1 லட்சத்து ஆயிரத்து 325 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டது. இதனால், 451 கோடி ரூபாய் வருவாய் உபரி கிடைத்தது.
பற்றாக்குறை: வரும் நிதி ஆண்டில், 664 கோடி ரூபாய் வருவாய் உபரியாக இருந்தாலும், நிதி பற்றாக்குறை, 22 ஆயிரத்து 938 கோடி ரூபாயாக இருக்கும். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், இப்பற்றாக்குறை, 2.84 சதவீதமாகவே இருக்கும் என்பதால், 13வது நிதிக்குழு வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது என, பட்ஜெட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இது, சற்று நிம்மதி தரும் தகவல். அதே சமயம், மத்திய அரசு கடன் தொகையில், ஒரு தனி நபர், எவ்வளவு கட்ட வேண்டும் என்றும், அதையும் சேர்ந்த சுமையைக் கணக்கிட்டால், அனாவசிய குழப்பம் தான் அதிகரிக்கும். தமிழகம், 2012-13ம் ஆண்டில் பெற்ற கடன், 1.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு, 10 ஆயிரத்து 754 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டது. இக்கடன் தொகை, 2013-14ம் ஆண்டில், 1.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளது. இதற்காக, 13 ஆயிரத்து 584 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு, 6,000 கோடி ரூபாய் கடன் பெறப்படுகிறது. இத்தொகையை, தமிழக அரசு ஏற்றுக் கொண்டதால், கடந்த ஆண்டை விட, கடன் தொகை அதிகரித்து உள்ளது.
குறையும் கடன்: ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட, கடன் பெறுவது அனுமதிக்கப்படுகிறது. 2012-13ம் நிதியாண்டில், 20 ஆயிரத்து, 716 கோடி ரூபாய், கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 15 ஆயிரத்து 675 கோடி ரூபாய் தான், கடன் வாங்கப்பட்டது. கடன் பெறுவது குறைவதற்கு, வரி வருவாய் அதிகரித்துள்ளது முக்கிய காரணம். வரும், 2013-14ம் நிதி ஆண்டில் பெற உள்ள, 24 ஆயிரத்து 263 கோடி ரூபாய் கடனில், 21 ஆயிரத்து 142 கோடி ரூபாய் அளவிற்கே கடன் பெற, தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பளமும், ஓய்வூதியமும்: தமிழத்தில், 13 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அளிக்க, 49 ஆயிரத்து 687 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இத்தொகை, மொத்த செலவினத்தில், 42 சதவீதம். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பல துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பியதால், கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை: