சனி, 15 டிசம்பர், 2012

Punjab மனைவிகளை தவிக்க விட்டு ஓடும் கணவன்கள்

சண்டிகார்:பஞ்சாபில், மனைவிகளை தவிக்க விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதற்கு கிடுக்கிப்பிடி போடும் நடவடிக்கைகளை, மாநில அரசு தீவிரப் படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், சண்டிகாரை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள், சரப்ஜித் கவுர். 10 ஆண்டுகளுக்கு முன், சரப்ஜித்துக்கும், பஞ்சாபை சேர்ந்த, குர்பிரீத் என்பவருக்கும், மிக தடபுடலாக திருமணம் நடந்தது.இந்த திருமணத்துக்காக, சரப்ஜித்தின் தந்தை, தன் தகுதிக்கு அதிகமான பணத்தை, கடன் வாங்கி செலவழித்தார்.குர்பிரித், ஜலந்தரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே, இவர்களுக்கு, பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, பணியாற்றுவதற்காக, பிரிட்டனுக்கு செல்லப் போவதாக, குர்பிரித் தெரிவித்தார்.இதற்கு, சரப்ஜித் சம்மதம் தெரிவிக்கவே, குர்பிரித், பிரிட்டனுக்கு பறந்தார். இதற்கு பின், அவர், மீண்டும், பஞ்சாப்புக்கு திரும்பவே இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, "எனக்கும், சரப்ஜித்துக்கும் நடந்த திருமணம், சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. இதனால், என்னை எதுவும் செய்ய முடியாது'என, கூறி விட்டார்.இதையடுத்து, தன் கணவருக்கு எதிராக, பஞ்சாப் குடும்ப நல கோர்ட்டில், சரப்ஜித் வழக்கு தொடர்ந்து உள்ளார்.dinamalar.com/
கணவர் துணையின்றி, தன் குழந்தையுடன், வறுமையில் வாடி வருகிறார், அவர். சரப்ஜித்தை போலவே, பஞ்சாபில், ஏராளமான பெண்களை, அவர்களது கணவர்கள், தவிக்க விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதும், வேறு திருமணம் செய்து கொள்வதும், அதிகரித்து வருகிறது.பஞ்சாபில் மட்டும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசே கூறியுள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க, பஞ்சாப் மாநில அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, மாநிலத்தில் நடக்கும், ஒவ்வொரு திருமணத்தையும், முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும், திருமணங்கள், குருத்வாராக்களில் நடந்தாலும், அவற்றையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்றும், சமீபத்தில், சட்டசபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: