வியாழன், 13 டிசம்பர், 2012

அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !

vinavu.com அரியானாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஏவிவிடும் பாலியல் வல்லுறவுத் தாக்குதல்களைப் பத்தோடு பதினொன்றாக நீர்த்துப் போகச் செய்ய காங். அரசு முயலுகிறது. அரியானா மாநிலத்தில் கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள 19 பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மீது நடத்தப்பட்டவை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த 15 வழக்குகளில் பெரும்பாலானவை ஆதிக்க சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட கும்பல் பாலியல் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  இவ்வழக்குகளில் ஒன்றிரண்டில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்டு, குற்றமிழைத்த ஆதிக்க சாதிவெறியர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.  இதுவும்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களும் அமைப்புகளும் போராடிய பிறகுதான் நடந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆதிக்க சாதிக் கொழுப்பும் ஆணாதிக்க திமிரும் வக்கிரமும் கொண்ட ஜாட் சாதி பஞ்சாயத்துகள், அப்பஞ்சாயத்துகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் ஓட்டுக்கட்சிகள்-அரசு இயந்திரம் – இதுதான் அரியானாவின் உண்மை முகம் என்பது ஏற்கெனவே பலமுறை அம்பலமாகியிருக்கிறது.  இப்பொழுதும்கூட, அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு கட்சியும், போலீசும், ஜாட் பஞ்சாயத்துகளும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்துள்ள இந்த வன்புணர்ச்சித் தாக்குதல்களை உப்புசப்பில்லாத விவகாரமாக ஆக்கி, கைகழுவிவிடத் தொடர்ந்து முயன்று வருகின்றன.
ஜாட் சாதியைச் சேர்ந்த கும்பலால் 15 தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ள நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஜிந்த் மாவட்டத்தில் சச்சா கேரா என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் அளிக்கச் சென்றார்.  ஒரு சில நிமிடங்களே நடந்த இந்த ஆறுதல் நாடகத்தின் மூலம் எல்லா சாதிகளிலும் பெண்களுக்கு எதிரான போக்கிரி கும்பல் இருப்பதாகக் காட்டியதோடு, “கற்பழிப்புக் குற்றம் நாடு முழுவதும் நடப்பதுதான்” எனக் கூறி, அரியானா அரசிற்கு வக்காலத்து வாங்கினார்.
அக்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரான தரம்வீர் கோயட், “இக்கற்பழிப்பு சம்பவங்களில் 90 சதவீதம் பெண்ணின் சம்மதத்தோடு நடந்தவைதான்” எனக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பெண்களை நடத்தை கெட்டவர்களாகக் குற்றஞ்சுமத்துகிறார்.  வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்களுள் பலர் திருமணமானவர்கள் என்ற உண்மையை மறைத்துவிட்டு, இளைஞர்களுக்கு 16 வயதிலேயே திருமணம் செய்துவிட்டால், அவர்கள் அலைவதைத் தடுக்க முடியும்” எனக் கூறி, குழந்தைத் திருமண முறைக்கு வக்காலத்து வாங்குகிறது, உள்ளூர் காப் (சாதி) பஞ்சாயத்து.  இந்தக் காட்டுமிராண்டித்தனமான யோசனையை அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா வழிமொழிந்து, பின்பு ஜகா வாங்கிக் கொண்டார்.
முதலாளித்துவ அறிவுஜீவிகளோ, “அரியானா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு எண்ணூத்தி சொச்சம் பெண்கள் இருப்பதுதான் இப்பிரச்சினைக்குக் காரணம்” எனக் காரணம் கற்பிக்கிறார்கள். அரியானா மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை சரிந்துகொண்டே போவதற்கு ஆணாதிக்கம் நிறைந்த பிற்போக்கு குடும்பங்கள் பெண் சிசுக்களைச் சட்டவிரோதமான முறையில் கருவிலேயே அழித்துவிடுவதுதான் காரணம் என்பதும்; ஆண்கள் எண்ணிக்கைக்குச் சமமாகப் பெண்கள் இருக்கும் இடங்களிலும் பாலியல் வன்புணர்ச்சி நடைபெற்று வரும் உண்மையும் இவர்களை உறுத்தவில்லை போலும்.
அரியானாவை ஆண்டு வரும் காங்கிரசு அரசோ இன்னும் ஒருபடி மேலே போய், தனது ஆட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் அரசியல் சதி இது” என்ற புளுகுணி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  அரியானா  போலீசு துறை இயக்குநர் ரஞ்ஜிவ் சிங் தலால், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கற்பழிப்புக் குற்றங்களின் எண்ணிக்கையில் 80 குறைந்துள்ளதாக’’ப் புள்ளிவிவரத்தைத் தூக்கிப்போடுகிறார்.  ஹிஸார் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதியினரால் கற்பழிக்கப்படுவது குறைவுதான்” என வாதிடுகிறார்.  கோஹானா நகரின் துணைக் கண்காணிப்பாளர், “பெண்கள் மேற்கத்திய பாணி உடைகளை அணிவதால்தான் கும்பல் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிப்பதாக’’க் கண்டுபிடித்துச் சோல்கிறார்.  இவற்றின் மூலம் அம்மாநில அரசு, “இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையே தவிர, இதில் சாதிக்கு இடமில்லை” எனச் சாதிக்க முயலுகிறது.
அரியானா-1ஆனால், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் காப் பஞ்சாயத்து தலையீடு செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்றியிருக்கிறது; காப்பாற்ற முயலுகிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன.  ஹிஸார் மாவட்டம்-டாப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான தாழ்த்தப்பட்ட இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜாட் சாதியைச் சேர்ந்த சுனிலை போலீசு கைது செய்துவிடாமல் காப்பாற்றி வருகிறது, அக்கிராம காப் பஞ்சாயத்து.  குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக சுனிலைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன் போலீசு நிறுத்தியபோது, அப்பெண் காப் பஞ்சாயத்தின் கட்டாயத்தால் அவனை அடையாளம் காட்டவில்லை.  இப்பாலியல் வன்புணர்ச்சி வழக்கு தொடர்பாக காப் பஞ்சாயத்து நடத்திய கூட்டத்தில் வெளியாட்களையும் பத்திரிகையாளர்களையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும், அப்பொழுது அக்கூட்டத்தில் அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
டாப்ரா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞரான ரஜத் கல்ஸான், “போலீசு, நீதித்துறை என அரசு இயந்திரம் முழுவதிலும் ஜாட் சாதியினர் நிறைந்துள்ளனர்.  அதிகார வர்க்கமும் காப் பஞ்சாயத்தும் பல்வேறு வழிகளில் நெருக்கமாக உள்ளது.  இந்த நெருக்கம் காரணமாக, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காப் பஞ்சாயத்துதான் தீர்மானிக்கின்றன.  போலீசு அதற்குத் தலையாட்டுகிறது” எனக் குற்றஞ் சுமத்துகிறார்.
‘‘ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகள் போலீசால் கைது செய்யப்படும்பொழுது, காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தலையிட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கைத் தீர்த்துக் கொள்வதாகக் கூறி, குற்றவாளியை விடுவித்துவிடுகிறார்கள்.  இதையும் மீறி வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால், பஞ்சாயத்தின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண்ணே பிறழ் சாட்சியாக மாறிவிடுகிறார்” என்கிறார் ஜிந்த் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்.
அம்மாநிலத்தில் நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும் வன்புணர்ச்சி வழக்குகளில் வெறும் 13 சதவீத வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  இப்புள்ளிவிவரமும் போலீசு கண்காணிப்பாளரின் கூற்றும் வழக்குரைஞர் ரஜத் கல்சான் முன்வைக்கும் குற்றச்சாட்டை உறுதி செகின்றன.
கடந்த செப்.9 அன்று டாப்ரா கிராமத்தில் நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கில், குற்றவாளிகள் அச்சம்பவத்தைத் தாமே கைபேசியில் படமெடுத்ததோடு, அதனைப் பலருக்கும் அனுப்பி வைத்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கிருஷ்ணகுமார் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.  குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், கிருஷ்ணகுமாரின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக் கோரித் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிய பிறகுதான்,  இவ்வழக்கில் போலீசு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.  அதிலும்கூட, பாதிக்கப்பட்ட பெண் தந்த வாக்குமூலத்தைத் திரித்து எழுதி, சில தாழ்த்தப்பட்ட இளைஞர்களையும் வழக்கில் சேர்க்க முனைந்து அம்பலப்பட்டுப் போனது.
சோனியா அரியானாவிற்கு வந்து ஆறுதல் நாடகம் நடத்திச் சென்ற மறுநாளே, கைதால் என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமணமான தாழ்த்தப்பட்ட இளம் பெண் இரண்டு ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்.  குற்றவாளிகள் இருவரும் அப்பெண்ணிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதையும்; குற்றம் நடப்பதற்கு முன் அப்பெண் அவர்களோடு கைபேசியில் பேசியிருக்கிறார் என்பதையும் வைத்துக் கொண்டு, இவ்வழக்கில் குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முகமாக அப்பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறது போலீசு.  இப்படிப் பல்வேறு வழக்குகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்ட போலீசார் மீது கிரிமனல் சட்டப்படியோ, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியோ எந்தவொரு வழக்கும் தொடரப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘‘தனது பண்ணையாளின் மனைவியோடும் மகளோடும் வல்லுறவு கொள்ளாத எந்தவொரு ஜாட்டும், தன்னை ஜாட் என்று அழைத்துக் கொள்ளத் தகுதியில்லாதவன்” என்று காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பெருமையாக கூறிக் கொண்டு திரிவதை அரியானாவின் ஒவ்வொரு கிராமப்புறத்திலும் இன்றும் காண முடியும்.  இன்று இவர்கள் பண்ணையார்களாக, நிலப்பிரபுக்களாக மட்டும் இல்லை.  தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதுப் பணக்காரக் கும்பலாகவும் உருவெடுத்துள்ளனர்.  இவர்கள்தான் அரியானாவில் முதலீடு செயும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாங்கிக் கொடுக்கும் ரியல் எஸ்டேட் தரகர்களாக, அந்நிறுவனங்களுக்குக் கூலி ஆட்களை சப்ளை செயும் காண்டிராக்டர்களாக மாறி பெரும் பணத்தில் புரள்கின்றனர்.
இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கும்பலிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அவர்களின் சாதிக் கொழுப்பும் வக்கிரமும் அதிகரித்து வருகிறது.  அரியானாவில் 2004-ஆம் ஆண்டில் பதிவான பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களின் எண்ணிக்கை (386), 2011-இல் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதை (733) இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.
ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தும் வழக்குகளில், அந்த வக்கிரத்தை அக்கும்பல் கைபேசியில் பதிவு செய்து கொள்வதோடு, அக்காட்சிகளைப் பலருக்கும் அனுப்பிவைக்கும் போக்கும் தற்பொழுது அதிகரித்து வருகிறது.  அவர்கள் தங்களின் செய்கையை வெட்கப்படத்தக்கதாகவோ, குற்றமாகவோ பார்ப்பதில்லை.  தங்களின் ஆண்மையையும் ஆதிக்க சாதித் திமிரையும் நிலைநாட்டும் செயலாகவே கருதுகின்றனர்.  இவை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வன்புணர்ச்சி தாக்குதல்கள் காமத்தின் பாற்பட்டதல்ல; ஆதிக்க சாதித் திமிரோடு தொடர்புடையது என்பதைத்தான் நிரூபித்துக் காட்டுகின்றன.
பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, சாதியை மறுத்துத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரைப் படுகொலை செய்யும் குற்றச் செயலுக்குக் கௌரவக் கொலைகள் என நாமகரணம் சூட்டி, அப்படுகொலைகளைச் செய்யும் ஆதிக்க சாதிவெறி பிடித்த கொலைகாரர்களையும் காப் பஞ்சாயத்துகள்தான் ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.  இப்படிபட்ட சட்டவிரோத, சமூக விரோத, பிற்போக்கான காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்வதை ஓட்டுக்கட்சிகளே முன்னின்று தடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்ச்சி வழக்குகளில் நீதி கிடைத்துவிடும் என யாரேனும் நம்ப முடியுமா?  எட்டு மாதங்களுக்கு முன்பு நர்வானா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் மீது ஜாட் சாதிவெறிக் கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்திய வழக்கில், அக்குற்றவாளிகளின் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசு மறுத்துவிட்டதால், குற்றவாளிகளுள் சிலரைத் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கொன்றொழித்தனர்.  நீதி பெறுவதற்கு இதைக் காட்டிலும் காரிய சாத்தியமான வழி வேறெதுவும் இருக்கிறதா?

கருத்துகள் இல்லை: