வெள்ளி, 7 அக்டோபர், 2011

வாச்சாத்தி –நீ ஒரு பெண். அது போதும் எங்களுக்கு என்றனர் காவலர்கள்


“இச்சம்பவம் நடந்தபோது எனக்கு வயது 13. என்னை ஏரிக்கரைக்கு இழுத்துச் சென்று கற்பழித்தனர். நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி, என்னை விட்டு விடுங்கள் என்று கதறிய போதும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. நீ ஒரு பெண். அது எங்களுக்குப் போதும் என்றனர் காவலர்கள்
காலையில் அரைத் தூக்கத்தில் இருந்த என்னை, என்னுடன் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பினார். வாச்சாத்தி பழங்குடி மக்களின் கிராமத்தில் வனத்துறையினரும் காவல்துறையினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அங்கே முதலில் சென்று செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரசில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு குறித்துத் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தார். நாடு முழுவதும் வாச்சாத்தி கிராம மக்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு இருக்கும் நேரத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

“வாச்சாத்தி கிராமமே சந்தனக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்து ஏராளமான பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தது. அந்த ஊரின் எல்லையில் இருந்த மதுக்கடையில் எப்போதுமே அமோக வியாபாரம் இருக்கும். ஊரில் உள்ள பயன்படாத கிணறுகளில் மது பாட்டில்கள்தான் நிறைந்திருந்தன. அந்த ஊர் மக்கள் எல்லோரும் வீடுகளில் எல்லா இடங்களிலும் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தனர். பதுக்கி வைத்திருந்த சந்தனக்கட்டைகளை மீட்பதற்கு வனத்துறை அதிகாரிகள் போனபோது, அக்கிராம மக்கள் அவர்கள்மீது தாக்குதல் நடத்தி, சில அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். அவர்களை மீட்பதற்கு வனத்துறையானது பெரும் படையுடன் காவல்துறையினரையும் கூட்டிக்கொண்டு வந்து ஊரைச் சூறையாடியது.”
இதையெல்லாம் சொல்லிவிட்டு, அடுத்தத் தகவலுக்குப் போனார். “பெண்களைக் கற்பழித்தார்கள் என்பதெல்லாம் பொய். அதிகபட்சம் பெண்களின் புடைவையைப் பிடித்து இழுத்திருக்கலாம். இந்தப் பிரச்னையை அரசியலுக்காகக் கையில் எடுத்தவர்கள், பிரச்னையைத் தூண்டிவிட்டு, கற்பழிப்பு குறித்துப் பொய்ப் புகார்களைப் பதிய வைத்தார்கள்” என்று வாதித்தார்.
“சரி. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். உடம்பு நன்றாக இருக்கிறதா” என்று நலன் விசாரித்துவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டார்.
1992-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதியில் இருந்து மூன்று நாள்கள் நடந்த தாக்குதல் குறித்து, அப்போதைய தமிழக அரசு எந்தக் கருத்தைக் கொண்டிருந்ததோ, அக்கருத்தையே மூத்த பத்திரிகையாளரும் எதிரொலித்தார். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகத் தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை. இக் கருத்துதான் தொடர்ந்து நீதிமன்றத்தில் அரசு சார்பில் சொல்லப்பட்டது.
இப்பிரச்னையை முதன்முதலில் வெளியில் கொண்டுவந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்.) அக்கட்சியை சார்ந்த தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தினர்தான் முதலில் வாச்சாத்தி கிராமத்தில் நுழைந்தார்கள். அதுகூட எதேச்சையாகத்தான் நடந்தது. அச்சங்கத்தின் மாநாடு சித்தேரி மலைப்பகுதியில் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடந்தது. அப்போது அதில் பங்கேற்றவர்கள், வாச்சாத்தி பகுதியில் உள்ள பழங்குடியினர்களில் பலர் காவல்துறைக்குப் பயந்து சித்தேரியில் உள்ள உறவினர்கள் வீட்டில் ஒளிந்திருப்பதாக கூறினர். அச்சங்கத்தின் அப்போதைய தலைவர் பாஸா ஜானும் துணைத் தலைவர் என். கிருஷ்ணமூர்த்தியும் இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ப. சண்முகத்திடம் தெரிவித்தனர். அவர் வாச்சாத்திக்குச் சென்று பார்த்தபோதுதான் நடந்திருக்கும் சம்பவத்தின் பரிமாணம் முழுமையாகத் தெரியவந்தது. சண்முகம் உடனே சேலம் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கே அடைக்கப்பட்டிருந்த ஆண்களையும் கற்பழிக்கப்பட்ட பெண்களையும் சந்தித்தார். இரவோடு இரவாக தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. முதல்வருக்குப் புகார் பட்டியல் அனுப்பப்பட்டது. பதில் இல்லை. உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன்மூலம் புகார் அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் இல்லாத நிலையில்தான் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டது.
அதிகாரிகளின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை முதலில் தள்ளுபடி செய்த நீதிபதி பத்மினி ஜேசுதுரை, அரசின் கருத்தையே ஏற்றுக்கொண்டார். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் இதையெல்லாம் செய்திருக்க மாட்டார்கள் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவை ஏற்ற நீதிமன்றம், இதுகுறித்து ஆராயுமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் இயக்குனர் பாமதியை, நடந்த நிகழ்வுகள் குறித்து ஆராயுமாறு பணித்தார். அவர் வழங்கிய அறிக்கை வழியாகத்தான் தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழும் வாழ்க்கை குறித்து முதன்முதலாக வெளியுலகுக்குத் தெரிய வந்தது. அதன்பிறகு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் நல்லசிவன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கி்ன் அடிப்படையிலேயே மத்தியப் புலனாய்வுத்துறையான சி. பி. ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனுவை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நிராகரித்தது. விடாப்பிடியாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. உச்ச நீதிமன்றமும் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
தொடக்கத்திலிருந்து வழக்கு முடியும்வரை ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றத் தலையீட்டின் காரணமாகத்தான் இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. மாநில அரசு எந்த ஒரு கட்டத்திலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை. வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்கவேண்டும் என்றுகூட இந்த ஆண்டு ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் தீர்ப்பு வெளியானது. குற்றம் சாற்றப்பட்டவர்கள் தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.
வாச்சாத்தியில் நடந்த மிகப்பெரும் அக்கிரமத்துக்குக் காரணமானவர்கள் தண்டனை அடைந்திருந்தாலும், தீர்ப்பு வெளியான நாளில், பாதிக்கப்பட்டவர்கள் மனங்களில் பழைய புண்கள் இன்னும் ஆறாத ரணமாக இருப்பது மக்களுக்குத் தெரிந்தது.
“இச்சம்பவம் நடந்தபோது எனக்கு வயது 13. என்னை ஏரிக்கரைக்கு இழுத்துச் சென்று கற்பழித்தனர். நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி, என்னை விட்டு விடுங்கள் என்று கதறிய போதும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. நீ ஒரு பெண். அது எங்களுக்குப் போதும் என்றனர் காவலர்கள்,” என்று பழைய துன்ப நினைவுகளில் மூழ்கினார் அந்தப் பெண். அவருக்கு இப்போது வயது 33.
பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் கீழ்நிலையில் உள்ள காவலர்கள் என்றாலும், மேலதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளாமல் வெறுமனே நின்றிருந்தனர்.
பரந்தாயி என்ற பழங்குடியினப் பெண்ணின் 16 வயது மகளை அவருடைய கண்முன்னரே துணிகளை அவிழ்த்து அசிங்கப்படுத்தினர். பின்னர் அவளை மதியம் 2.45 மணியளவில் தூக்கிக்கொண்டு சென்றனர். அவள் வீடு திரும்பும்போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது. வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மீண்டும் அவளை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் கொடூரங்களையும் மீறி அந்த பெண் தீர்ப்பு வழங்கிய நாள் அன்று தன் கணவருடனும் மூன்று குழந்தைகளுடனும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
இந்த நேரத்தில் இன்னொரு பத்திரிகை நண்பர் தெரிவித்த கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். தண்டனை அடைந்த வனத்துறையினரில் அவருடைய உறவினரும் ஒருவர். வனத்துறையினர்மீது வாச்சாத்தி மக்கள் நடத்திய தாக்குதலைக் கேள்விப்பட்டுப் புறப்பட்டு சென்ற வனத்துறைப் படையில் பங்கேற்றவர்களில் அவரும் அடங்குவார். அவருடைய தவறு எல்லாமே சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றதுதானாம். அவர் யாரையும் தாக்கவி்ல்லை என்று பத்திரிகை நண்பர் கூறினார். வாச்சாத்தி கிராமத்து மக்களில் ஒரு சிலர் சந்தனக் கடத்தலில் ஈடுபட்டதற்காக எல்லோருமே அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதுபோல, வனத்துறையினர் சிலர் செய்த தவறுக்கு அத்துறையைச் சேர்ந்த பலரும் பொறுப்பேற்க வேண்டிவந்தது என்பது நண்பரின் வாதம்.
சீருடையில் இருக்கும் தங்கள் துறையினர் தாக்கப்பட்டால் அதற்கு எதிர்வினையாற்றுவதில் காவல்துறையும் வனத்துறையும் நடந்துகொண்ட முறை, இத்துறையினரின், குறிப்பாக காவல்துறையினரின் மனப்பாங்கை வெளிப்படுத்தியுள்ளது. பரமக்குடியிலும் பிற இடங்களிலும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இதையே நமக்குக் காட்டுகின்றன. கற்களையும் கம்புகளையும் வைத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுபவர்களைத் துப்பாக்கியைக்கொண்டு சமாளிப்பதுதான் காவல்துறையின் வழிமுறையாக இருந்திருக்கிறது.
வாச்சாத்தியைப் பொருத்தவரை, சந்தனக் கடத்தல் அங்கு பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. அக்கிராமத்தினர் யாரும் கட்டைகளை வெளியே கடத்திச் சென்று விற்கவில்லை. அந்த ஊரில் உள்ள சிலர், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு உறுதுணையாக இருந்து கட்டைகளைப் பதுக்கி வைத்துள்ளனர். 1990-களில் அதற்குக் கூலியாக ஒரு நாளைக்கு ரூ. 100 கிடைத்தது என்பது மிக அதிகமான பணம்தான். கடத்தலில் ஈடுபட்ட ஒரு நபர் பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆக, காலம் காலமாகக் கடத்தல் நடந்துவந்தாலும், அதற்குப் பின்னால் இருப்பவர்களை காவல்துறையோ வனத்துறையோ ஒருபோதும் கண்டுகொண்டதில்லை. கடத்தல்காரர்களுக்கு உறுதுணையாக வனத்துறை செயல்பட்டு வந்தது. பிரச்னை பெரிதாக உருவெடுத்தபோதுதான் அவர்கள் தலையிட்டார்கள். அப்போதும் முதலைகளை விட்டுவிட்டு, கூனிப்பொடிகளை நோக்கி அரசின் அதிகாரம் பாய்ந்தது.
வாச்சாத்தியில் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராகவே எல்லாமும் நடந்தேறியது. முறையாக விசாரணை நடத்தி, உண்மையில் வனத்துறையினர்மீது தாக்கியவர்களைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் யுத்தம் நடக்கும்போது, வெற்றி பெற்ற நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் தோல்வியடைந்த நாட்டின் உள்ளே புகுந்து கொள்ளையடித்து, கற்பழித்து, கையில் கிடைத்ததையெல்லாமே சேதப்படுத்திச் செல்வதுபோலத்தான், சொந்த நாட்டிலேயே வனத்துறையினரும் காவல்துறையினரும் நடந்துகொண்டிருக்கின்றனர். உணவுப் பொருட்களைச் சிதறியடித்தனர். குடிநீர் வழங்கும் கிணறுகளில் மண்ணெண்ணெயை ஊற்றினர். வீடுகளின் கூரைகளை இடித்துத் தள்ளினர். முதன்முறையாக பழங்குடியின மக்கள் சங்கத்தினர் வாச்சாத்தியில் நுழைந்தபோது அவர்கள் கண்ணில் பட்டது, சாப்பிடுவதற்காகச் சேமித்து வைத்திருந்த தானியங்கள் முளைத்து நின்ற காட்சிதான். போரில் வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்ற மண்ணை, கழுதையை வைத்து உழுது, ஆமணக்கை விதைத்துவிட்டுச் செல்வார்களாம். அதுபோன்ற ஒரு காட்சிதான் நம் கண் முன்னே வாச்சாத்தியில் அரங்கேறியது. இது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னால், அடிப்படையில் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது. எதையும் செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என்ற காவல்துறை, வனத்துறையின் மனப்பதிவுதான் எல்லாவற்றுக்கும் காரணம். அதிலும் குறிப்பாக தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள் விவகாரத்தில் காவல்துறையினர் நடந்துகொள்ளும்விதம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் இவர்கள் அனைவருமே சமூக விரோதிகள், திருடர்கள், சட்டத்தை மீறுபவர்கள் என்ற எண்ணம் நம்முடைய சமுதாயத்தின் மனத்தில் ஒரு மூலையில் ஆழமாகப் பதிந்துவிட்டிருப்பதே இதற்கெல்லாம் காரணம்.
இதில் இதுவரை புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்னவென்றால் தமிழக அரசு நடந்துகொண்ட முறைதான். மிகப்பெரிய ஒரு மனித உரிமை மீறல் நடந்திருக்கும்போது, அதுகுறித்து குறைந்தபட்சமாக விசாரிக்கக்கூட அது தயாராக இருந்ததில்லை. அந்த நேரத்தில் அமைச்சராக இருந்த கே. ஏ. செங்கோட்டையன், “வாச்சாத்தி, மலையில் இருக்கும் ஒரு கிராமம். அங்கெல்லாம் வயதான நல்லசிவன் சென்றிருக்க முடியாது. கம்யூனிஸ்டுகளின் குற்றச்சாற்றில் எந்த உண்மையும் இல்லை” என்று சாதித்தார்.
வேறு எந்த சாதிக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்திருக்குமேயானால் இந்த அரசுகள் அலறி அடித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் நிவாரணம் வழங்கவும் ஓடோடிப் போயிருக்கும். தலித்துகளும் மலைவாழ் மக்களும் அரசுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அந்தச் சாதிகளிலிருந்து பெரிய கட்சிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பவர்கள், தங்கள் கட்சியின் தலைவரை விட்டால் தலித்துகளுக்கு நாதியில்லை என்ற தொனியில் பேசுகிறார்கள். அரசியல் பிழைப்பாகிவிட்ட நேரத்தில் இதுபோன்ற வசனங்களைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
இந்த இடத்தில் ஜார்ஜ் ஆர்வெல்லின் Down and Out in Paris and London என்ற புத்தகத்தின் வரிகளை மேற்கொள் காட்டுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த இரண்டு மாநகரங்களின் சேரிப்பகுதிகளில் பல்லாண்டு காலம் வாழ்ந்த ஆர்வெல், “பணம் வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்வதிலிருந்து விடுதலை கிடைப்பதுபோல, வறுமை என்பது நன்னடத்தைகளை ஒருவரிடம் இருந்து விடுவித்து விடுகிறது” என்றார். பின்னர் அவரே அப்புத்தகத்தின் இறுதியில் கூறுகிறார்: “வீடின்றித் தெரிவில் திரிபவர்கள் எல்லாம் குடிகாரர்கள் இல்லை. ஒரு நாணயத்தைக் கொடுத்துவிட்டேன் என்பதற்காக ஒரு பிச்சைக்காரன் எனக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. வேலையின்றி இருப்பவர்கள் சோர்வுடன் இருப்பார்கள் என்பதிலும் எனக்கு ஆச்சரியமில்லை.”
ஆர்வெல்லைப்போல் சேரிகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்துதான் அம்மக்களைப் பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நிலைமை ஒரு சமுதாயத்துக்கு ஏற்படுமானால் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டி வரும்.
ஜூன் 20, 1992: சந்தனக் கடத்தல் தொடர்பான புகார்களை அடுத்து, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆரூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் (தருமபுரியில் இருந்து 50 கி.மீ தொலைவில்) இருக்கும் பழங்குடிக் கிராமமான வாச்சாத்தியில் அத்துமீறி நுழைந்தது.
ஜூன் 22, 1992: வீடுகளைச் சூறையாடியது, கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டது தொடர்பான புகாரை, அந்தக் குழுவின் மீது பழங்குடி மக்கள் காவல்துறையிடம் கொடுத்தார்கள். காவல்துறை அந்தப் புகாரை ஏற்க மறுத்துவிட்டது.
செப், 22 1992: நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஆரூர் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
ஜனவரி 1993: வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பிப்ரவரி 24, 1995 : நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 269 பேரையும் சி.பி.ஐ. கைது செய்து ஐ.பி.சி மற்றும் எஸ்.ஐ./எஸ்.டி. (வன் கொடுமைத் தடுப்பு) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது.
ஏப் 23, 1996 : கோவையில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜனவரி 2006 : கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
பிப் 17, 2008 : தர்மபுரி செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 54 பேர் மீதான வழக்கு, அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து, கைவிடப்பட்டது.
செப் 26, 2011 : குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து தீர்ப்பு செப் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த மூவர் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
செப் 29, 2011: 215 பேர்மீதும் சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இரண்டு வருடங்களிலிருந்து 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதித்தது. மேல் முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டது. வன்புணர்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
(தேதி வாரியான தகவல் – நன்றி: தி ஹிந்து நாளிதழ்.)
-    திருச்செல்வன்

கருத்துகள் இல்லை: