வெள்ளி, 7 அக்டோபர், 2011

போண்டா, வடை, டீ, காபி ஓடும் ரயிலில் இனி விற்க முடியாது !



சென்னை: தமிழ்நாட்டில் ரயில், ரயில் நிலையங்கள் என ரயில்வே இடங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்வதை முழுமையாக தடுக்க தெற்கு  ரயில்வே முடிவு செய்துள்ளது
சென்ட்ரல் உட்பட ரயில் நிலைய வளாகங்களின் நுழைவு வாயில்களில் பழம், பூக்கடைகள் ஏராளமாக உள்ளன. பயணிகள்தான் இவர்களது வாடிக்கையாளர்கள். இந்த கடைகளில் காலை, மாலை நேரங்களில் கூட்டம் இருக்கும். இதனால் அவசரத்திற்கு ரயிலை பிடிக்க ஓடுபவர்கள், நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.   பெருநகர ரயில் நிலையங்களில் மட்டுமின்றி கிண்டி போன்ற புறநகர் ரயில் நிலையங்களிலும் இதுதான் நிலைமை.
இதில் மின்சார ரயில்களில் கிடைக்காத பொருட்களும் இல்லை. விற்காத வியாபாரிகளும் இல்லை.
செல்போன் கவரில் இருந்து லேட்டஸ்ட் சீனத் தயாரிப்புகள் வரை ஓடும் ரயிலில் கிடைக்கின்றன.
வேலைக்கு செல்லும் பெண்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, காய்கறிகளை வெட்டி சுத்தம் செய்து, பாக்கெட்டில் அடைத்து ரெடிமேடாகவும் விற்கின்றனர். கீரையும் இதில் தப்பவில்லை. வாங்கிச் செல்லும் பெண்மணிகளுக்கு வெட்டும் வேலை மிச்சம் என்பதால், இந்த வியாபாரிகளுக்கு வரவேற்பு அதிகம். அதிலும் காய்கறிகளை விற்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதும் கூடுதல் நன்மையாக  அமைகிறது. இதனால் எத்தனை கூட்டம் என்றாலும், பயணிகளை தள்ளிவிட்டு தங்கள் வருவாயை குறைவில்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.
பசியில் ஓடிவந்து ரயில் ஏறுபவர்கள், குழந்தைகளுக்கு ஒன்றும் வாங்கவில்லையே என்று நினைப்பவர்கள், வீட்டில் சமைக்க ஏதாவது இருக்குமா என்று யோசிப்பவர்கள் என பலவிதமான பயணிகளுக்கும் இந்த வியாபாரமும், விலையும் வசதியாகவே இருக்கிறது.
சுதந்திர தினம், குடியரசு தினம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் போன்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள நாட்களில் மட்டும் இந்த வியாபாரிகள் ரயில்வே வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற நாட்களில் வியாபாரம் தடையில்லாமல் நடக்கும்.
ஆனால், அனுமதி பெறாமல் ரயில்வே இடங்களில் வியாபாரம் செய்பவர்களால் அடிக்கடி தகராறு, கலாட்டா, அடிதடி போன்ற சட்டமீறல்கள் தொடர்கதையாக உள்ளன. அதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் நினைக்கிறது. அதுமட்டுமின்றி இந்த வியாபாரத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டால் ரயில்வே பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த முடியும் என்று அதன் தலைமை இயக்குனர் பி.கே.மேத்தா முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து முதற்கட்டமாக தெற்கு ரயில்வேயில் இந்த முயற்சியை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் முழுவதுமுள்ள ரயில் நிலையங்கள், ரயில்களில் அனுமதியில்லாமல் நடைபெறும் வியாபாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் நிலைய இடங்களில் வைத்திருந்த கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டன. ஒருமுறை அகற்றிவிட்டு மீண்டும் வந்து வியாபாரம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீறினால் சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தின் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலம் முழுவதும் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் பக்கம் ரயில்வே நிர்வாகத்தின் பார்வை திரும்பியுள்ளது. Ôஇப்பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும். அதன்பிறகு ரயில்வே இடங்களில், ரயில் நிலையங்களில் எங்குமே அனுமதியின்றி நடைபெறும் வியாபாரம் இருக்காதுÕ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: