புதன், 5 அக்டோபர், 2011

தெலுங்கானா போராட்டம் தென்னிந்தியாவுக்கு ஆபத்து! மின் உற்பத்தி வீழ்ச்சி


ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டம் நீடித்து வருவதால் ஆந்திராவில் மின் நிலையங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா மட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திராவில் மின் உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து அணல் மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டிய கடுமையான சூழல் எழுந்துள்ளது. இதனால் ஆந்திராவே இருளில் மூழ்கும் அபாயகரமான நிலையை நோக்கி அந்த மாநிலம் போய்க் கொண்டுள்ளது.

இன்னும் நான்கு நாட்களுக்குத்தான் அணல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு உள்ளதாம். அதன் பின்னர் மின் நிலையங்களில் உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நீர் மின்சார உற்பத்தி அடியோடுநின்று விட்டது. இந்த நிலையில் அணல் மின் நிலையங்களையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமரிடம் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி பேசியுள்ளார். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கிழக்கு கிரிடிலிருந்து 800 மெகாவாட் மின்சாரமும், ஹரியானாவிலிருந்து 200 மெகாவாட் மின்சாரமும் வழங்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இதனால் மட்டும் நிலைமையை சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை. மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக, ஹைதராபாத் நகரில் தினசரி 4 மணி நேர மின் வெட்டு அமலாகியுள்ளது. பிற மாநகராட்சிகளில் 6 மணி நேரமும், மாவட்டத் தலைநகரங்களி்ல் 8 மணி நேரமும் மின்வெட்டு அமலில் உள்ளது. கிராமப்புறங்களில் எப்போது கரண்ட் வரும் என்றே சொல்ல முடியாத நிலை.

தொழிற்சாலைகளை வாரத்திற்கு 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தினசரி இரவு 4 மணி நேர மின்வெட்டும் கூடுதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே மின்சாரம் அளிக்கப்படுகிறது.

ஆந்திர மாநில மின்வாரியத்திற்குச் சொந்தமான அணல் மின் நிலையங்கள் தற்போது 3000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றன.

ராமகுண்டம் அணல் மின் நிலையத்தின் 550 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பிரிவு மூடப்பட்டு விட்டது.

இப்படி தெலுங்கானாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக நிலக்கரி கிடைக்காமல் ஆந்திர மின் நிலையங்கள் தத்தளித்து வருவதால் ஆந்திரா மட்டுமல்லாமல் தமிழகமும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வரும் மின்சாரமும் பெருமளவில் நின்று விட்டதால் தமிழகத்திலும் மின்வெட்டு அதிகரித்துள்ளது. அதேபோல கர்நாடகத்திலும் மின்சார வரவு பாதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் போராட்டம் மேலும் நீடித்தால் தென் மாநிலங்களில் கடும் மின் நெருக்கடி ஏற்படும், ஆந்திரா முழுமையாக இருளில் மூழ்கும் நிலை உருவாகும் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை: