திங்கள், 25 அக்டோபர், 2010

யாழ். பொதுநூலகம் என்ன உல்லாச புரியா? மாநகரசபை உறுப்பினரின் ஆதங்கம்

 
சமாதான நோக்கத்துக்காகவே உல்லாசப் பயணிகள் பொது நூலகத்தைப் பார்வையிட அனு மதிக்கப்பட்டனர். இதை அவர்கள் துஷ்பிரயோகம் செய்வார்களாயின் அதைப் பார்வையிட அனும திப்பது இமாலயத் தவறாகும். எனவே இதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநகர சபைக்குப் பிரேரணை வடிவில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தெரிவித்துள்ளார். பொதுநூலகம் என்ன உல்லாசபுரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, யாழ். மாநகரசபை உறுப்பினரான நான், யாழ். மாநகரசபையால் பொதுநூலகத்துக்கென நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளேன். இந்த வகையில் நான் விசாரித்தறிந்த விவரங்களை இங்கே சமர்ப்பிக்கின்றேன்.
பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் மருத்துவச் சங்க மாநாடு கடந்த 22ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த மூன்று நாள்களும் மாலை 5.30 மணியின் பின்னரே பார்வையாளர் களுக்கென நேரம் ஒதுக்கப்பட்டது.
எனினும் நேற்றுமுன்தினம் தெற்கு உல்லாசப் பயணிகள் சுமார் 300 பேர்வரை நூலக வாயிலில் குவிந்தனர். உள்ளே நுழைய விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாயில் காவலாளி தடுத்த போது கதவின் பூட்டுக்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்டவேளை நிலைமை எல்லை மீறவே முதல்வருக்கு அறிவிக்கப்பட் டது. முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்தபோது பொலிஸார் வருகைதந்து சமரசப் படுத்தியுள்ளனர்.
உடனே உல்லாசப் பயணிகள் இராணுவத்துடன் தொடர்பு கொண்டதன் பிரகாரம் அவர்களால் கதவு திறக்கப்பட்டு உல்லாசப் பயணிகளை உள்ளே விட்டனர். உள்ளே சென்ற உல்லாசப் பயணிகள் புத்தகங்களை அடுக்கிலிருந்து எடுத்துச் சிதறியடித்து அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.
இக்களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாசகர்கள் பலர் நூலகத்தைவிட்டுப் பின் பக்கமாக வெளியேறிவிட்டனர். மொத்தத்தில் இது ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாகரிகமற்ற நடவடிக்கை என அங்கிருந்த வாசகர்கள் விசனம் தெரிவித்தனர்.
நூலகம் என்பது அமைதியான வழியில் பயன்படுத்தப்படும் ஒரு இடம். அது சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசபுரியல்ல என்பதைச் சம்பந்தப்பட்டோர் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: