வெள்ளி, 22 அக்டோபர், 2010

BJP.எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது பாஜக-குமாரசாமி புகார்

பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக என்று குற்றம் சாட்டியுள்ளார் மதச்சார்பற்ற ஜனதாள தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி.

இதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் வெளியிட்ட வீடியோவில், ஒரு பாஜக எம்எல்ஏ, மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரிடம் (எம்.எல்.ஏ.) ரூ. 16 கோடி பணம் தருவதாகவும், பாஜகவில் வந்து சேருமாறும் கேட்பதாக காட்சி உள்ளது. மேலும், சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறும் அப்படிச் செய்தால் அடுத்த தேர்தலில் சீட் தரப்படும் என்றும் அந்த பாஜக எம்.எல்.ஏ. உறுதியளிப்பதாக காட்சி உள்ளது.

இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தங்களது ஆட்சியைக் காப்பாற்ற முயலுகிறது பாஜக. இதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ. 30 முதல் 50 கோடி வரை பணம் தர அவர்கள் தயாராகி விட்டனர் என்றார்.

2வது நம்பிக்கை வாக்கெடுப்பை முடித்த கையோடு தற்போது எதிர்க்கட்சியினரை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சமீபத்தில் காங்கிரஸைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும் (ராமச்சந்திரா, நாராயணசாமி), மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஒருவரும் (அஸ்வத்) கட்சியை விட்டும், எம்.எல்.ஏ பதவியை விட்டும் விலகியுள்ளனர். இதையடுத்து இவர்கள் மூவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விலகலைத் தொடர்ந்து சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலம் வெறும் 98 ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது..

கருத்துகள் இல்லை: