வெள்ளி, 22 அக்டோபர், 2010

ரஜினி கமல் வரிசையில் பா.விஜய்




தாய்காவியமாய் வளரவிருந்த படம் சிலபல காரணங்களால் தடைப்பட்டது. இப்போது இளைஞனாய் சில மாற்றங்களுடன் வளர்ந்துவிட்டது.

அரசாங்கப் பணிகளின் பரபரப்புக்கு இடையிலும் 45 நாட்களில் முதல்வர் கலைஞர் கதை வசனம் எழுதி தந்துள்ள படம் இளைஞன். கலைஞருக்கு இது 75 வது படம்.   வரலாற்று படமான இளைஞன் 1959 ல் நடக்கும் கதையாம்.  இயக்கம் - சுரேஷ்கிருஷ்ணா.  இது இவருக்கு 50வது படம்.  

பா.விஜய்க்கு இதற்குமுன் ‘ஞாபகங்கள்’ எனும் படம் வெளிவந்திருந்தாலும் ‘இளைஞன்’தான் அவர் கதாநாயகனாக அறிமுகமான படம்.  குஷ்பு,  ரம்யா நம்பீசன், மீராஜாஸ்மின், நாசர், சுமன் டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஹைலைட்டான ஒருவிஷயம் வில்லியாக நடிப்பவர் நமீதா. நமீதாவை தேர்வு செய்தது கலைஞர்தானாம். இதை நமீதாவே பெருமையாக கூறுகிறார். தயாரிப்பு- மார்ட்டின். ஒளிப்பதிவு சஞ்சய் லோக்நாத்.  


கமலஹாசனுக்கு சத்யா, இந்திரன் சந்திரன், ஆளவந்தான்,  ரஜினிக்கு பாட்ஷா, வீரா, அண்ணாமலை என பெரிய நடிகர்களுக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த சுரேஷ்கிருஷ்ணா பா.விஜய்க்கு இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுவே இளைஞனின் மீது பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்துகிறது.  

கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள வரலாற்றுக் கால கதையான இளைஞனின் பிரமிப்பான ஒரு விஷயம் 3 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கும் பிரமாண்டமான கப்பல்தான். 

கிட்டத்தட்ட 100 அடி உயரம் 200 முதல் 250 அடி அகலம் கொண்டதாம். 200 டன் இரும்பு மற்றும் ஸ்டீல், 150 சதுர அடி மரப்பொருட்கள், 400 கிலோ வாட்ஸ் ஜெனரேட்டர்ஸ், 3 டன் வெல்டிங் குச்சிகள் என்று 700 உழைப்பாளார்களால் 3 மாத கால கடின உழைப்பில் உருவாகப்பட்டதாம்.  கப்பல் முழுதுவதும் வண்ணமடிக்க மட்டுமே 6000 லிட்டர் பெயிண்ட் செலவானதாம்.   

இது பற்றி கப்பலை தனது கலை நயத்துடன் வடிவமைத்த தோட்டாதரணி,“  இளைஞன் படத்திற்காக  கப்பலை உருவாக்கியது என் பணி நாட்களில் நான் செய்த மிகச்சிறந்த கலைப் படைப்பு,” என பெருமைப்படுகிறார்.

பெரம்பலூர் பின்னி மில்லில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலை படப்பிடிப்பு நடந்த போதே சுற்றுலாப் பயணிகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் என பலரும் பார்த்து வியந்து போனார்களாம்.

படப்பிடிப்பை முடித்துவிட்ட இளைஞன் விரைவில் இசைவடிவில் வெளிவரவிருக்கிறான். டிசம்பர் இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

கருத்துகள் இல்லை: