மின்னம்பலம் - Mathi : திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கணேசன் என்ற எல்ஜி (வயது 92) மறைவைத் தொடர்ந்து அவரது உடலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் எல்.கணேசன் (வயது 92). காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரறிஞர் அண்ணா காலம் முதல் திமுகவை வளர்த்தெடுத்த தளகர்த்தர். 1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். சட்டமன்றம், சட்ட மேலவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழுவின் உறுப்பினராக இருந்து வந்தார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலன் பாதிப்பால் எல்.கணேசன் இன்று ஜனவரி 4-ந் தேதி அதிகாலை காலமானார். எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு தனி விமானம் மூலம் சென்ற முதல்வர் ஸ்டாலின், எல்.கணேசன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி.செழியன் உள்ளிட்டோரும் எல்.கணேசன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக