ஞாயிறு, 4 ஜனவரி, 2026

ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் கைதும் பின்னணியும் - தேவானந்தாவுக்கு அடுத்து என்ன நேரப்போகிறது? – dbsjeyaraj

ரணிலை சந்தித்தார் டக்ளஸ் ~~~~~~~~ செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள், தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ...

 டி.பி.எஸ். ஜெயராஜ் ; ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவரும் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். 
முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அவர் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை கொழும்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் சனிக்கிழமை கம்பஹா மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது 2026 ஜனவரி 9 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 
அதற்கு முன்னதாக மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு சுடுகலன் ஒன்றைக் கைமாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று சம்பந்தமாகவே தேவானந்தா கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர சேனரத் ஊடகங்களுக்கு கூறினார். தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டதாக கைத்துப்பாக்கி ஒன்று பாதாளஉலக குழுவின் தலைவரும் போதைப் பொருள் கடத்தல்காரருமான ‘ மகந்துரே மதுஷ் ‘ என்பவர் வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இலங்கை ஆயுதப்படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர்க் காலத்தில் தேவானந்தாவின பாதுகாப்புக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் விபரங்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு ( சி.ஐ.டி.) அவர் அழைக்கப்பட்டார். தேவானந்தா அரசாங்கங்களுக்கு ஆதரவாக இருந்ததுடன் அவரது தலைமையிலான ஈ.பி.டி.பி. ஒரு துணை இராணுவக்குழுவாக ஆயுதப்படைகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது. அன்று அவரை துரோகியென்று அழைத்த விடுதலை புலிகள் கொலை செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

பல வருடங்களுக்கு முன்னர் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக டிசம்பர் 26 சி.ஐ.டி.க்கு வருமாறு அவரிடம் கேட்கப்பட்டதாக தகவலறிந்த தமிழ் வட்டாரங்கள் கூறின. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த அவர் வெள்ளிக்கிழமை சி.ஐ.டி. க்கு சென்றார். தன்னைக் கைது செய்வார்கள் என்று அவர் சந்தேகிக்கவில்லை.

வெலிவேரியா

தேவானந்தா சி.ஐ.டி. யின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல் விசாரணை பிரிவைச் ( Homicide and Organized Crime Investigation unit ) சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டார். கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரியா பகுதியில் 2019 ஆம் ஆண்டு மதகு ஒன்றுக்கு அண்மையாக புதருக்குள் இருந்து 9 எம்.எம். கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக அவரிடம் கூறப்பட்டது. ஔித்து வைக்கப்பட்டிருந்த அந்த ஆயுதம் போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலையடுத்தே கண்டெடுக்கப்பட்டது. மதுஷ் 2020 ஆம் ஆண்டில் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலைகளின் கீழ் கொல்லப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக பரந்தளவிலான தீவிர விசாரணையொனறை முன்னெடுத்தனர். ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க போதைப் பொருள் பாவனை மற்றும் வியாபாரத்துக்கு எதிராக போரை பிரகடனம் செய்திருநதார் என்பது தெரிந்ததே. அவரின ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போதைப்பொருள் ஆபத்தை முற்று முழுதாக ஒழிப்பதற்கு உறுதி பூண்டிருக்கிறது.

கொலையுண்ட மதுஷ் தொடர்பான கோவைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது வெலிவேரியாவில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி பாதுகாப்பு அமைச்சினால் 2001 ஆம் ஆண்டில் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தின் தொடர் இலக்கத்தைக் கொண்டிருந்ததை பொலாசார் கண்டறிந்தனர். தேவானந்தாவுக்கு 2001 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட கைத்துபாபாக்கி எவவாறு மாகந்துரே மதுஷின் கைக்குச் சென்றது என்பதைக் கண்டறிய பொலிசார் விரும்பினர்.

தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்ட ஆயுதம் மதுஷிடம் எவ்வாறு சென்றது தெளிவுபடுத்தும் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டார். ஆனால், பொலிசாரினால் விசாரணை செய்யப்பட்டபோது திசுப்திகரமான விளக்கம் ஒன்றை தேவானந்தாவினால் அளிக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதன் விளைவாக சி.ஐ.டி. அவரைக் கைதுசெய்து பயங்கரவாத தடைச் சட்ட உத்தரவின் கீழ் 72 மணித்தியாலங்களுக்கு தடுத்துவைக்கப்பட்டார்.

ஆயுதங்கள்

தேவானந்தா 9 எம். எம். கைத்துப்பாக்கியை 2001 ஆம் ஆண்டில் அல்ல, 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே பெற்றுக்கொண்டதாக அவருக்கு நெருக்கமான தமிழ் வட்டாரங்கள் மூலமாக தெரியவந்தது. விடுதலை புலிகளின் அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட ஆயுத தொகுதியின் ஒரு பகுதியாகவே அது கிடைத்தது. அந்த தொகுதியில் பதினெட்டு ரி 56 ரைபிள்களும் ஆறு 9 எம்.எம். கைத்துப்பாக்கிகளும் ( பிஸ்டல்கள்) அடங்கியிருந்தன. வழங்கப்பட்ட ஆயுதங்களை திருப்பி ஒப்படைக்குமாறு ஈ.பி.டி.பி.யிடம் இரு தடவைகள் கேட்கப்பட்டது.

அவ்வாறு கேட்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் நோர்வேயின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட 2002 போர்நிறுத்தத்துக்கு பின்னரான நாட்களாகும். ஈ.பி.டி.பி. அதனிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்தது. அதன் விளைவாக நிசாயுதபாணிகளான பல ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் போர்நிறுத்தக் காலப்பகுதியில் விடுதலை புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து மீண்டும் போர் வெடித்ததை தொடர்ந்து ஈ.பி.டி.பி.க்கு ஆயுதங்கள் கிடைத்தன.

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஈ.பி.டி.பி.யிடம் கேட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் 2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான நாட்களாகும். ஈ.பி.வி.பி. கட்டங்கட்டமாக பாதுகாப்பு அமைச்சிடம் ஆயுதங்களைக் கையளித்தது. உண்மையில் மதுஷின் கைகளுக்கு கைத்துப்பாபாக்கி போயிருக்குமானால், அது ஈ.பி.டி.பி. யினால் அல்ல ‘ பாதுகாப்புத் துறையின் ‘ தவறு காரணமாகவே பெரும்பாலும் நடந்திருக்கக்கூடும் என்று தகவலறிந்த தமிழ் வட்டாரங்கள் அபிப்பிராயப்படுகின்றன.

தமிழில் வாக்குமூலம்

பாதுகாப்பு அமைச்சினால் ஈ.பி.டி.பி. க்கு வழங்கப்பட்ட பல்வேறு ஆயுதங்களின் விபரங்களை தேவானந்தா தெளிவாக வழங்கியதாக அந்த கட்சிக்கு நெருக்கமான இந்த தமிழ் வட்டாரங்கள் கூறின. ஆனால், தனது வாக்குமூலம் தமிழ் மொழியிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என்று விசாரணையின்போது தேவானந்தா வலியுறுத்தினார். தமிழ் தனது தாய்மொழி என்றும் அது ஒரு உத்தியோகபூர்வ மொழியாகவும் இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். அதனால், அவர் அரசியலமைப்பு ரீதியான உரிமையாக தனது வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்விப்பதற்கு அருகதையுடையவர். ஆனால், அவரை விசாரணை செய்த சி.ஐ.டி. அதிகாரிகளினால் தமிழில் வாக்குமூலத்தை பதிவுசெய்ய முடியவில்லை. 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு தேவானந்தாவின் வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்வதற்கு வசதியாகவே அமைந்திருக்கலலாம்.

மாகந்துரே மதுஷ்

மாகந்துரே மதுஷ் என்ற சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்சித்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர். போதைப்பொருள் கடத்தல்காரரான அவர் மிகவும் பலம் பொருந்தியவராகவும் அரசியல் செல்வாக்குடையவராகவும் இருந்தார். 2006 ஆம் ஆண்டில் துபாய் நாட்டுக்குச் சென்ற அவர் தனது போதைப்பொருள் கடத்தில் வலைப் பின்னலை அங்கிருந்து இயக்கினார். போதைப்பொருள் குற்றம் ஒன்றுக்காக 2019 பெப்ரவரியில் கைதுசெய்யப்பட்ட அவர் 2019 மே மாதத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். தனது சடடவிரோத நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் குறித்து பெருமளவு தகவல்களை மதுஷ் பொலிசாருக்கு வழங்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பில் மதுஷ் உயர்மட்ட அரசியல்வாதிகள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட 80 க்கும் அதிகமானவர்களை சம்பந்தப்படுத்தியதாக கூறப்பட்டது.

மறைத்து வைக்கப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளை மீட்பதற்காக 2020 அக்டோபரில் மதுஷ் மாளிகாவத்தையில் வீடமைப்புத்திட்டம் ஒன்றுக்கு பொலிசாரினால் கூட்டிச்செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இனந்தெரியாத இரு நபர்களினால் அவர் சுடப்பட்டார் என்பதே பொலிசாரினால் வெளியிடப்ப்ட ‘ உத்தியோகபூர்வ’ தகவல். பொலிசார் திருப்பித் தாக்கியதை தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சமர் ஒன்று மூண்டது. இரு தரப்புக்கும் இடையிலான சமரின் இடையில் அகப்பட்டு மதுஷ் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. பொலிசாரின் இந்த கதையை பலரும் நம்பவில்லை.

உண்மையிலேயே, மதுஷின் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் தொடங்கிய பொலிசார் மதுஷும் அவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பலம்பொருந்திய பதவிகளில் இருந்த பலரும் சம்பந்தப்பட்ட பாரதூரமான பல விடயங்களை விசாரணை செய்வதற்கு பதிலாக தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி தொடர்பில் விசாரித்தது விசித்திரமானதாகும். அந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனின் சட்டவிரோத நடவடிக்கைகளின் அளவுடனும் பரப்பெல்லையுடனும் ஒப்பிடும்போது தேவானந்தாவின் கைத்துப்பாக்கி விவகாரம் முக்கியத்துவமற்றதாக தோன்றுகிறது.

விடுதலை புலிகளுக்கு ஆதரவான சக்திகள்

தேவானந்தா கைதுசெய்ய்ப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை விடுதலை புலிகளுக்கு ஆதரவானவர்களும் அனுதாபிகளும் வரவேற்றிருக்கிறார்கள். விடுதலை புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் தேவானந்தாவுக்கு எதிரான பதிவுகளினாலும் கருத்துக்களினாலும் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. தேவானந்தாவுக்கு முடிவு வந்துவிடடது என்றும் நீண்டகாலத்துக்கு அவர் சிறையில் இருக்கப் போகிறார் என்றும் சில யூரியூபர்கள் நம்புகிறார்கள்.

விடுதலை புலிகளை துணிச்சலுடன் எதிர்த்து ஆயுதப்படைகளுடன் சேர்ந்து அவர்களுக்கு எதிராகச் சண்டையிட்ட காரணத்தினால் விடுதலை புலிகளும் அவர்களுக்கு ஆதரவான சக்திகளும் தேவானந்தாவை வெறுக்கிறார்கள். அதனால் அவருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் இடர்பாட்டு நிலையைக் கண்டு அவர்கள் குதூகலிக்கிறார்கள். விடுதலை புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் சேர்ந்து சண்டையிட்ட பிள்ளையான் மற்றும் தேவானந்தா போன்றவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அவர்கள் மகிழ்கிறார்கள்.

யார் இந்த டக்ளஸ் தேவானந்தா? இலங்கையின் அண்மைய வரலாற்றில் அவர் வகித்த பாத்திரம் என்ன? முன்னரும் நான் அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இந்த கேள்விகளுக்கு எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

விடுதலை புலிகளுக்கு துணிச்சலுடன் எதிர்ப்பு

கதிரவேலு நித்தியானந்தா டக்ளஸ் தேவானந்தா ஒரு வகையில் மிகவும் தனித்துவமான ஒரு பேர்வழி. கடந்த காலத்தில் விடுதலை புலிகளை எதிர்ப்பதில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் வெளிக்காட்டினார். இலங்கைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று விடுதலை புலிகள் உரிமை கோரிக் கொண்டிருந்த அந்த நாட்களில் அவர்களை எதிர்ப்பதில் ஏக மாற்றுச் சக்தியாக ஈ.பி.டி.பி.யை காட்டிக்கொண்டதன் மூலம் மாற்று உரிமையைக் கோருவதற்கு தேவானந்தா முயற்சித்தார்.

தனது துணிச்சலான நிலைப்பாட்டுக்காக தேவானந்தா உயர்ந்த விலையைச் செலுத்த வேண்டியிருந்தது ; அவரின் சொந்தச் சகோதரன் உட்பட அவரது இயக்கத்தின பெரும் எண்ணிக்கையான தோழர்களையும் போராளிகளையும் விடுதலை புலிகள் கொலைசெய்தனர். தேவானந்தாவைக் கொலை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விடுதலை புலிகளின் பல்வேறு கொலை முயற்சிகளில் இருந்து உயிர்தப்பிய ஒரேயொரு ஆள் தேவானந்தா மாத்திரமே. கொழும்பு – 5 இல் இருந்த அவரது முன்னாள் வாசஸ்தலத்தின் மீது இயந்திரத் துப்பாக்கிகள், ரொக்கெட் மூலம் ஏவப்படும் கிரனேட்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முழு அளவிலான தாக்குதல், களுத்துறை சிறையில் விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கைதிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல், கொழும்பு – 3 இல் இருந்த அவரின் அமைச்சில் வைத்து தற்கொலைக் குண்டுதாரியான பெண்களினால் இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள் ஆகியவை அந்த முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவை.

அத்தியடிக் குத்தியன்

அதிகாரத்துக்கும் பதவிக்குமான டக்ளஸ் தேவானந்தாவின் எழுச்சி சுவாரஸ்யமான ஒரு கதை. அவரது குடும்பம் சுன்னாகத்தைச் சேர்ந்தது. ஆனால், பிறகு யாழ்ப்பாண நகரின் அத்தியடி பகுதிக்கு அவர்கள் மாறினர். விடுதலை புலிகளின் ‘ ஆஸ்தான கவிஞர் ‘ புதுவை இரத்தினதுரை தனது கவிதைகளில் தேவானந்தாவை ‘ அத்தியடிக் குத்தியன்’ என்று குறிப்பிடுவார். தேவனந்தாவின் தந்தையார் கதிரவேலு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஒரு எழுதுவினைஞர். பிறகு அவர் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில் ஒரு பதவிநிலை அதிகாரியாகவும் இருந்தார். அவரது தாயார் மகேஸ்வரி யாழ்ப்பாணம் மத்திய கல்லாரியின் ஆசிரியை.

நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான கே.சி. நித்தியானந்தா டக்ளஸின் பெரிய தந்தையாராவார். கொழும்பு வெள்ளவத்தையில் பிரான்சிஸ் வீதியில் உள்ள 17 ஆம் இலக்க இல்லத்தில் நித்தியானந்தாவுடன் பல வருடங்களை தேவானந்தா கழித்தார். அப்பேபாது கொழும்பு இந்து கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த தேவானந்தாவை பிரம்மச்சாரியான நித்தியானந்தா உண்மையில் தத்தெடுத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முனானதாக தேவானந்தா யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்தார். அவர் கல்வியில் பிரகாசமான ஒரு மாணவனாக இருக்கவில்லை. ஆனால், தனது மாமனாரிடமிருந்து அடிப்படை அரசியலை கற்றுக்கொண்டார். ஆயுதப்போராட்ட இயக்கத்தில் தனது பெயரான ‘டக்ளஸ் ‘ என்பதையும் நித்தியானந்தாவின் பெயரையும் தனது உத்தியோகபூர்வப் பெயரின் பகுதியாக தேவானந்தா சேர்த்துக் கொண்டார்.

20 ஆம் நூற்றாண்டின் எழுபதுகள் தமிழர்கள் மத்தியில் அரசியல் எழுச்சி ஏற்பட்ட ஒரு காலப்பகுதியாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான அரசியல் சகவாழ்வு காரணமாக பழைய இடதுசாரிக் கட்சிகள் அவற்றின் செல்வாக்கை இழந்தனர். நித்தியானந்தா போன்ற இடதுசாரி இயக்க முக்கியஸ்தர்கள் தமிழ்த் தேசியவாதிகளாக உருமாற்றம் பெற்றனர். தமிழ் இளைஞர்களும் தீவிரவாதமயமாகினர். பிரிவினைவாதமும் அதைச் சாதிப்பதற்கான ஆயுதப்போராட்டமும் அந்த இளைஞர்களின் இலட்சியங்களாகின.

ஈ.பி.ஆர்.எல்.எவ்.

இந்த போக்குகளுக்கு விதிவிலக்கானவராக தேவானந்தாவும் இருக்கவில்லை. அவர் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பில் ( Ealam Revolutionary Organizaton of Students – EROS ) இணைந்து கொண்டார். தனது முன்னாள் ரொட்ஸ்கியவாத ஆசான் இளையதம்பி இரத்தினசபாபதியின் உதவியுடன் தேவானந்தா லெபனானுக்குச் சென்று பாலஸ்தீனர்களிடம் இராணுவப் பயிற்சியைப் பெற்றார். அப்போது அவர் டக்ளஸ் என்ற இயக்கப் பெயரைப் பெற்றார். மத்திய கிழக்கில் இருந்து திரும்பிய பிறகு அவர் கே. பத்மநாபாவுடனும் ஏனையவர்களுடனும் சேர்ந்து ஈரோஸில் இருந்து பிரிந்து பொதுமாணவர்கள் ஒன்றியத்தை ( General Union if Students – GUES) அமைத்தனர். அதை தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ( ஈ.பி.ஆர்.எல்.எவ்) அமைத்தனர்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான தேவானந்தாவின் தீவிரவாத ஈடுபாடு குறுகியதாகவே இருந்தது. அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பெருமளவுக்கு வெற்றிபெறாத வங்கிக் கொள்ளைக்கு தேவானந்தா தலைமை தாங்கினார். ஆனால் தப்பியோடும்போது அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டார். வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட தேவானந்தா பனாகொடை மகேஸ்வரன் மற்றும் ஏனையவர்களைப் போன்று 1983 ஜூலையில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்களக் கைதிகளுடன் சண்டையிட்டு உயிர்தப்பினர்.

மக்கள் விடுதலை இராணுவத் தளபதி

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாறாறப்பட்ட தேவானந்தா சியைுடைப்பில் முக்கிய பாத்திரத்தை வகித்தார். இந்தியாவுக்கு தப்பிச்சென்ற அவர் இந்தியாவிலும் ஆயுதப்பயிற்சியைப் பெற்றுைஈ.பி.ஆர்.எல். எவ்.வின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தை ஆரம்பித்தார். தேவானந்தாவே அதன் முதல் தளபதி.

மக்கள் விடுதலை இராணுவத்தின் செயற்பாடுகள் பெருமளவுக்கு குறிப்பிடத்தக்கவையாக இருக்கவில்லை. தேவானந்தாவின் தலைமையின் கீழ் காரைநகர் கடற்படை முகாமைத் தாக்குவதற்கு 1985 ஆம் ஆண்டில் மேற்கெ்ள்ளப்பட்ட முயற்சி ஒரு அனர்த்தமாகிப் போனது. தேவானந்தா தனது சுகோதரி ஷோபா என்ற மதிவதனியையும் தனது இரண்டாவது தளதபதி சின்னனையும் தோல்வி கண்ட அந்த தாக்குதலில் இழந்தார். சண்டையில் கொல்லப்பட்ட முதல் பெண் போராளி மதிவதனி என்பது குறிப்பிடத்தக்கது.

ஈ.பி.ஆர்.எல்.எவ். அரசியல் தலைவர் பத்மநாபாவுக்கும் இராணுவத் தளபதியான தேவானந்தாவுக்கும் இடையில் விரைவாகவே கடுமையான முரண்பாடுகள் தோன்றின. இயக்கம் பிளவுபட்டது. தேவானந்தாவை அவரது பதவியில் இருந்து நீக்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் அரசியற்குழு இராணுவத் தளபதியாக கபூரை நியமித்தது.

சூளைமேடு

இதையடுத்து தேவானந்தா பத்மநாபாவை சந்தித்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக 1986 பிற்பகுதியில் சென்னைக்கு சென்றார். அங்கு சூளைமேட்டில் தேவானந்தா தங்கியிருநத வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் அனுசரணையுடனான ஈழமக்கள் தகவல் நிலையத்தை தாக்குவதற்கு சில சக்திகள் கும்பல் ஒன்றைத் தூண்டி விட்டன. ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் அந்த கும்பல் மீது செய்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய தமிழ் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். நேரடியாக அதில் சம்பந்தப்படாவிட்டாலும், தேவானந்தா கைது செய்ப்பபட்டார். இந்த சூழ்நிலைகளின் கீழ் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் பிளவு நிரந்தரமாகியது.

ஈ.என்.டி.எல்.எவ்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பிறகு தேவானந்தா அணியும் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தில் ( புளொட்) இருந்து பரந்தன் ராஜன் என்ற தங்கராஜா தலைமையில் பிரிந்த அணியும் சேர்ந்து ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை (ஈ.என்.டி.எல்.எவ்.) அமைத்தன. இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையும் அதையடுத்த நிகழ்வுப் போக்குகளும் இந்த முன்னணி சீர்குலைய வழிவகுத்தன. தேவானந்தா உறுதியான ஒரு தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டை எடுத்து புதுடில்லியைக் கண்டனம் செய்தார். சமாதான உடன்படிக்கை தொடர்பில் தேவானந்தாவின் நிலைப்பாடு அன்று விடுதலை புலிகள் எடுத்த நிலைப்பாட்டை பெருமளவுக்கு ஒத்திருந்தது. சுதந்திரமான இந்த நிலைப்பாடு தேவானந்தாவுக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. இந்திய சார்பான பரந்தன் ராஜன் தேவானந்தாவைக் கைவிட்டு புதுடில்லிக்கு சாதகமானவராகிக் கொண்டார். நேசக்திகள் இல்லாத நிலையில் தேவானந்தாவும் அவரது போராளிகளும் தனியாக இயங்கி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது.

ஈ.பிடி.பி.

தேவானந்தாவின் அரசியல் — இராணுவ வாய்ப்புக்களைப் பொறுத்தவரை, இந்தக் கட்டம் மிகவும் தாழ்நிலையாக அமைந்தது. சென்னையில் அவர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பிடி.பி.) ஆரம்பித்தார். ஆனால் பணம் இல்லாமல் பரிதாபநிலைக்கு உள்ளானார். புதிய கட்சியின் நிலை அன்று கவலைக்குரியதாக இருந்தது. பணத்தைப் பெறுவதற்காக சென்னையில் இருந்த இலங்கைத் தமிழர்களைக் கடத்திச் சென்று பணயம் வைத்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஈ.பி.டி.பி. நிர்ப்பந்திக்கப்பட்டது. கடத்தல் குற்றச்சாடடில் கைதுசெய்யப்பட்ட தேவானந்தா மீண்டும் சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது. அந்த கட்டம் தமிழர்கள் மத்தியில் அவருக்கு ‘பிள்ளைபிடிக்காரன்’ என்ற எதிர்மறையான பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. தற்காலிகமாக சிறையில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்ட தேவானந்தா இலங்கைக்கு தப்பி வந்தார். இலங்கையில் அவர் புலனாய்வு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி ரஞ்சன் விஜேரத்னவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்.

அன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் பிரதி பாதூகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்னவை அந்தரங்கமான பேச்சுவார்த்தை ஒன்றுக்காக தேவானந்தா சந்தித்தார். அசாதாரணமான ஆற்றல் கொண்டவரான விஜேரத்னவினால் தேவானந்தா கூறியதை மறுக்கமுடியவில்லை. தனது புதிய கட்சிக்கு பாதுகாப்பையும் ஆதரவையும் தந்தால் அரசாங்கம் கூறுவதைச் செய்து முழுமையான ஒத்துழைப்பையும் தாராளமான ஆதரவையும் தருவதற்கு தேவானந்தா தயாராக இருந்தார்.

தேவானந்தா அரசாங்கத்துக்கு வழங்க முன்வந்த ஆதரவு அந்த நேரத்தில் ஒரு புதிய திருப்பமாக இருந்தது. ஏனென்றால், பிரதான ‘ எதிரிக்கு’ நேரடியாக உதவவதற்கு முன்வருவதற்கு அதுவரையில் எந்த தமிழ்த் தீவிரவாத இயக்கமும் இருக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் சஞ்சலமான ஒரு போர்நிறுத்தம் அந்த வேளையில் நடைமுறையில் இருந்தது. ஆனால், போர் மீண்டும் மூண்டால் அரசாங்கத்துக்கு பயனுடையவராக தன்னை நிரூபிக்க தேவானந்தாவினால் முடியும். தேவானந்தாவின் சேவைகளைப் பெற்றுக்கொள்வது கொழும்புக்கு அனுகூலமானதாக அமையும் என்று நம்பப்பட்டது.

பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசாங்கத்துடன் காணப்பட்ட உடன்பாடு அன்று தேவானந்தாவுக்கு வானத்தில் இருந்து விழுந்த அமிர்தமாக இருந்தது. சென்னையில் இருந்து இரு தோழர்களுடன் அவர் சில வாரங்களுக்கு முன்னர் மாத்திரமே கொழும்பு வந்திருந்தார். அவரது அரசியல் வாய்ப்புக்கள் தாழ்ந்த நிலையில் இருநதன. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஒரு இக்கட்டான நிலையிலேயே அவர் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு தீர்மானித்தார். அந்த துணிச்சலான சூதாட்டம் பயனளித்தது. அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் மூண்டது தேவானந்தாவுக்கு வெற்றியாகப் போய்விட்டது.

300க்கும் அதிகமான உறுப்பினர்கள்

அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் 1990 ஜூனில் போர் மூண்ட நிலையில் தேவானந்தா செயலில் இறங்கினார். இந்தியாவின் பல பாகங்களிலும் இலங்கையிலும் ஆங்காங்கே சிதறியிருந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் கொழும்பில் ஒன்றுகூடத் தொடக்கினர். தனது இயக்கத்துக்கு தேவானந்தா புதிதாக ஆட்களைச் சேர்த்ததுடன் ஏனைய குழுக்களைச் சேர்ந்த அதிருப்தியாளர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். விரைவாகவே 300 க்கும் அதிகமானவர்களை அவரால் திரட்டக் கூடியதாக இருந்தது. அரசினால் மொத்தமாக ஈ.பி.டி.பி.க்கு வழங்கப்பட்ட பணத்துக்கு புறம்பாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதாந்தக் கொடுப்பனவைச் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஈ.பி.டி.பி. அரசுக்கு ஆதரவாக பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது.

தமிழர்களின் இலட்சியத்துக்கு துரோகம் செய்து எதிரியுடன் பகிரங்கமாக ஒத்துழைத்தமைக்காக தேவானந்தா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவர் தொடக்கத்தில் இருந்தே ஒரு வகையான சுதந்திரத்தை பேணச் செயற்பட்டார். அரசியல் உள்ளடக்கம் எதுவும் இல்லாத — வெறுமனே ஒரு கூலிப்படை போன்று ஈ.பி.டி.பி. சீரழிவதற்கு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர் தீவிரமடையவே யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் உள்ள தீவுகளில் இருந்து விடுதலை புலிகள் விலகிக் கொண்டனர். அது தேவானந்தாவுக்கு வாய்ப்பாகிப் போனது. அவரும் அவரது பொடியன்களும் கடல் வழியாக உணவையும் ஏனைய பொருட்களையும் கொண்டுவந்து வடக்கில் பல வருடங்களுக்கு பிறகு கால் பதித்தனர். தீவுப்பகுதிகளை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஈ.பி.டி.பி.யின் கண்காணிப்பில் ஒப்படைத்தது. இதனால் ஊர்காவற்துறை தொகுதியின் கீழ் வருகின்ற பகுதிகளில் ஈ.பி.டி.பி.யினால் வலிமையான பிரசன்னத்தை நிறுவக்கூடியதாக இருந்தது.

அதற்கு பிறகு தேவானந்தாவின் நிலை மேம்படத் தொடங்கியது. தீவுப்பகுதிகள் மீது தனது இயக்கம் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி அவர் கொழும்புக்கு கடலுணவுகளை அனுப்பத் தொடங்கினார். பெரும் வருவாயைத் தரக்கூடியதாக கருவாடு வர்த்தகத்தில் ஈ.பி.டி.பி. ஈடுபட்டது. தீவுப்பகுதிகளில் இருந்து வெளிப்பகுதிகளுக்கு பொருட்களை ஏற்றி அனுப்புவதன் மூலமும் வெளியில் இருந்து தீவுப்பகுதிகளுக்கு பொருட்களை கொண்டுவருவதன் மூலமும் பெரும் வருவாய் பெறப்பட்டது.

பாராளுமன்றப் பிரவேசம்

1994 பாராளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி. மற்றும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேச்சைக் குழுவின் பட்டியலை சமர்ப்பித்து தேவானந்தா பாராளுமன்ற அரசியலில் இறங்கினார். தீவுப்பகுதிகளில் ‘ கைதிகள் ‘ போன்று இருந்த வாக்காளர்கள் தேவானந்தாவுக்கு அமோகமாக வாக்களித்தனர். பெரும்பான்மையான யாழ்ப்பாண வாக்காளர்கள் விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் இருந்தமையினால் வாக்களிக்க முடியவில்லை. சுமார் 10,000 வாக்குகளுடன் ஈ.பி.டி.பி. ஒன்பது ஆசனங்களைக் கைப்பற்றியது. தேவானந்தா பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். 2024 ஆண்டு வரை ஒவ்வொரு தேர்தலிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் பாராளூமன்றத்துக்கு தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பக்கம் மாறிய அவர் பிறகு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்தார்.


மீறல்கள்

போர்க்காலத்தில் பெருவாரியான மனித உரிமை மீறல்களில் ஈ.பி.டி.பி. ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஈ.பி.டி.பி. யினால் பல தமிழர்கள் கொல்லப்பட்டதாக அல்லது காணாமலாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவங்கள் எல்லாம் பொறுப்புவாய்ந்த மனித உரிமைகள் அமைப்புக்களினால் ஆவணமாக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கூட ஈ.பி.டி.பி.யினால் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்செயல்கள் குறித்து அதன் அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறது.

சேவைகள்

மறுபுறத்தில், டக்ளஸ் தேவானந்தா பொதுவில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக, யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் சேவைகளைச் செய்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. இலங்கையின் அதிகார பீடங்களூடன் அதற்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி தேவானந்தா கபினெட் அமைச்சர் என்ற வகையில் பல துறைகளில் பல காரியங்களைச் செய்வித்திருக்கிறார். பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு வேவைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பெருமளவு நல்ல காரியங்களை அவர் செம்திருக்கின்ற போதிலும், விடுதலை புலிகளினாலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள விடுதலை புலிகளுக்கு ஆதரவான சக்திகளினாலும் அவர் துரோகியென்று தொடர்ச்சியாக இழிவுபடுத்தப்பட்டு வந்தார்.

1994 தொடக்கம் 2024 வரை 30 வருடங்களாக தேவானந்தா தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். 2000 — 2002, 2004 — 2010, 2010 — 2015, 2019 — 2024 என்று 18 வருடங்களாக தேவானந்தா கபினெட் அமைச்சராக பதவி வகித்தார். அத்தகைய ஒரு சாதனையை வேறு எந்தவொரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் சாதித்ததில்லை. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிர்பாராத வகையில் 2024 ஆம் ஆண்டில் வடக்கில் பெற்ற வெற்றி தேவானந்தாவுக்கு பெரும் அரசியல் பாதகமாகிப் போனது. அவரால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. இப்போது அவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.மஹர சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேவானந்தாவுக்கு அடுத்து என்ன நேரப்போகிறது?

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி

கருத்துகள் இல்லை: