![]() |
வீரகேசரி : 2022 பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த இலங்கைக்கு, 2025 நவம்பரில் தாக்கிய ‘தித்வா’ புயல் புதிய சவாலாக அமைந்துள்ளது.
4.1 பில்லியன் டொலர் நேரடிச் சேதங்கள் மற்றும் 3.7 லட்சம் வாழ்வாதார இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
121 சர்வதேச நிபுணர்கள் கடன் மீள்செலுத்துகையை நிறுத்தி, புதிய கடன் மறுசீரமைப்புக்குச் செல்ல வலியுறுத்துகின்றனர்.
இருப்பினும், 2022 போன்ற திட்டமிடல் சீர்குலைவு தற்போது இல்லை எனவும், இந்தியாவின் 450 மில்லியன் டொலர் போன்ற சர்வதேச உதவிகள் கிடைப்பதாலும் மீள முடியும் என உள்நாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.
சுருக்கமாக, சர்வதேச உதவி, முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் டொலர் கையிருப்பு ஸ்திரத்தன்மை ஆகியவையே இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்வதைத் தடுக்கும் தீர்மானிக்கும் காரணிகளாகும்.
இலங்கை வரலாற்றில் 2022 ஆம் ஆண்டு என்பது ஒரு கறுப்புப் பக்கமாகும். நாடு தனது வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாத நிலையை பகிரங்கமாக அறிவித்து,
வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த இருண்ட காலத்திலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் 17-வது கடன் திட்டத்தின் உதவியுடன் நாடு மெல்ல மெல்ல மீண்டு வந்துகொண்டிருந்தது.
பணவீக்கம் குறைந்து, அந்நியச் செலாவணி கையிருப்பு ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டு வந்த வேளையில், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய ‘தித்வா’ புயல், நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு மிகப்பெரிய இடியைத் தூக்கிப் போட்டிருக்கிறது.
இந்த இயற்கை அனர்த்தம் வெறும் மனித உயிர் இழப்புகளைத் தாண்டி, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், “இலங்கை மீண்டும் ஒருமுறை வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுமா?” என்ற அச்சம் தற்போது சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் பேசுபொருளாகியுள்ளது.
தித்வா புயலானது இலங்கையின் 25 மாவட்டங்களையும் ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது.
குறிப்பாகக் கண்டி, புத்தளம், பதுளை ஆகிய மாவட்டங்கள் மிகமோசமான அழிவுகளைச் சந்தித்துள்ளன. உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டின்படி,
இந்தப் பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட நேரடிப் பௌதிகச் சேதங்களின் பெறுமதி மட்டும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதமாகும்.
உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் 1.735 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வீதிகள், பாலங்கள், ரயில் தண்டவாளங்கள், மின்விநியோகக் கட்டமைப்புக்கள் என அனைத்தும் சிதைந்துள்ளன.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகள் காரணமாகப் போக்குவரத்துத் துறை முடங்கியுள்ளது.
இது வெறும் பௌதிகச் சேதம் மட்டுமல்ல, நாட்டின் விநியோகச் சங்கிலியை முற்றாகப் பாதிக்கும் ஒரு விடயமாகும். வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் 985 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான மக்கள் தங்குமிடங்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.
விவசாயத் துறையைப் பொறுத்தவரை 814 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்ச் செய்கை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அடுத்த பருவத்திற்கான அறுவடை கேள்விக்குறியாகியுள்ளது.
இது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகும். விவசாயத் துறையில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பானது வறுமை விகிதத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்யும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அறிக்கை இன்னும் அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தருகிறது.
சுமார் 374,000 தொழிலாளர்கள் இந்தப் புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதில் 130,000 பேர் பெண்கள். இத்தொழிலாளர்களின் மொத்த மாதாந்த வருமான இழப்பு 48 மில்லியன் டொலர்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறையைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாக 29,600 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் முற்றாக முடங்கியுள்ளன.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இச்சிறிய வணிகங்களின் வீழ்ச்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறான நிலையிலேயே இந்த இழப்புக்கள் காரணமாக மீண்டும் பொருளாதார நெருக்கடி அல்லது வங்குரோத்து நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது.
ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றை சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது.
ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும் புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என்றும் அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய இந்த உள்ளக மற்றும் வெளியக காரணிகளினால் எக்காரணத்தைக்கொண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படப்போவதில்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி அவர்கள் இது குறித்துக் குறிப்பிடுகையில், “எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைக்கு மற்றுமொரு பொருளாதார வங்குரோத்து நிலை ஏற்படாது. சவால்கள் இருக்கலாம், ஆனால் அவற்றைச் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு சமாளிக்க முடியும்” என்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டுகிறார்.
அவரது கருத்தின்படி, 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிக்கு முக்கிய காரணம் அப்போதைய அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் பிழையான பொருளாதாரத் தீர்மானங்களாகும்.
ஆனால், தற்போது ஒரு முறையான முகாமைத்துவக் கட்டமைப்பு இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். “2022 இல் ஒழுங்கான திட்டமிடல் இல்லை மற்றும் சரியான முறையில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையின் காரணமாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால் இப்போது அப்படி இல்லை, இப்போது தேவையான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் எடுக்கப்படுகின்றன” என்பது அவரது வாதமாகும்.
இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், அதனை ஒரு அரசாங்கம் எப்படி எதிர்கொள்கிறது என்பதில் தான் வங்குரோத்து நிலையிலிருந்து தப்புவதற்கான வழி உள்ளது.
தித்வா புயலால் பொருளாதாரத்துக்குத் தாக்கம் ஏற்படும் என்பதை ஒப்புக்கொள்ளும் கலாநிதி கணேசமூர்த்தி, அரசாங்கம் அதனைச் சரியான முறையில் நிர்வகித்தால் வெளிநாட்டு ஆதரவுகளுடன் அதிலிருந்து வெளியே வர முடியும் என்று குறிப்பிடுகிறார்.
எனினும் தற்போதைய பேரனர்த்தம் இலங்கையின் கடன் செலுத்தும் திறனை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமானச் செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் போதுமானதாக இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.
எனவே, கடன்களை மீளச் செலுத்துவதை விட, நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இலங்கையினால் தனித்து இந்தப் பாரிய அழிவிலிருந்து மீள முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.
இதற்காகச் சர்வதேச உதவி வழங்கும் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் இறுதி அறிக்கை ஜனவரி நடுப்பதியில் வெளியான பின்னர் இந்த மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்பு நாடான இந்தியா ஏற்கனவே தனது கரங்களை நீட்டியுள்ளது. 450 மில்லியன் டொலர் உதவியை இந்தியா அறிவித்துள்ளது.
அதில் 350 மில்லியன் டொலர் கடனாகவும், 100 மில்லியன் டொலர் நன்கொடையாகவும் வழங்கப்படவுள்ளது.
இது போன்ற வெளிநாட்டு உதவிகள் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்கும், மீள்கட்டுமானப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்கும் உதவும். சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உதவ முன்வந்துள்ளன.
2026 ஆம் ஆண்டு என்பது இலங்கை பொருளாதார ரீதியாக மிகத் தீவிரமான அழுத்தங்களைச் சந்திக்கப் போகும் ஒரு ஆண்டாகும் என்பதனை மறுப்பதற்கில்லை. ஒருபுறம் புயலால் சிதைந்த உள்கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டிய கட்டாயம், மறுபுறம் வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள வேண்டிய சவால். அத்துடன் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் காலக்கெடுவும் நெருங்கி வருகின்றது.
இலங்கை தற்போது நெருக்கடி நிலையின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறது என்று கூறலாம். ஆனால், அங்கிருந்து ஸ்திரமான நிலையை அடைய வேண்டுமானால், அரசாங்கம் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். பணவீக்கம் மீண்டும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதும், ரூபாயின் பெறுமதி தளர்வடையாமல் பாதுகாப்பதும் மிக அவசியமாகும்.
“தித்வா புயல் காரணமாக பொருளாதாரத்துக்கு ஒரு தாக்கம் ஏற்படும். ஆனால் அதனைச் சரியான முறையில் அரசாங்கம் நிர்வகித்தால், முகாமைத்துவம் செய்தால் அதிலிருந்து வெளியே வரமுடியும்.
சீனா, இந்தியா போன்ற நாடுகளும் உதவ முன்வந்திருக்கின்றன. எனவே இந்த வருடத்தில் மற்றுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என்று கலாநிதி கணேசமூர்த்தி குறிப்பிடுகிறார்.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஒரு இக்கட்டான கட்டத்தில் உள்ளது. இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆழமானவை.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட நாடாக, இலங்கை இம்முறை சவால்களை முறியடிக்க வேண்டும். சர்வதேச சமூகம் இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்குத் உதவுவதற்கும் முன்வர வேண்டும்.
இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லுமா என்ற கேள்விக்கான பதில், வரும் மாதங்களில் எடுக்கப்படும் பொருளாதாரத் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.
கடினமான பாதையாக இருந்தாலும், சரியான திட்டமிடலும் சர்வதேச ஒத்துழைப்பும் இருந்தால், இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வங்குரோத்து நிலைக்கு செல்லாது என்று கூறலாம்.
விசேடமாக டொலர் உள்வருகை சீராக இருப்பது முக்கியமாகும். பணவீக்கம் ரூபாவின் பெறுமதி என்பன ஸ்திரமாக இருக்கவேண்டும். எப்படியிருப்பினும் அடுத்தக்கட்டமாக எடுக்கப்படவுள்ள தீர்மானங்களே மற்றுமொரு நெருக்கடியிலிருந்து இலங்கையை காப்பாற்றும்.
ரொபட் அன்டனி
Post Views: 1

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக