![]() |
Vimalaadhithan Mani : ஸ்ரீதர் வேம்பு விவகாரத்து வழக்கு.. 15,000 கோடி பிணைத் தொகையை செலுத்த கலிபோர்னிய நீதிமன்றம் உத்தரவு
பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தனது சொத்துக்கள் மற்றும் பங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 15 ஆயிரம் கோடி ரூபாயை பிணைத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தவர் பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு. படிப்பில் படு சுட்டியான இவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.
1996-ஆம் ஆண்டு, கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து AdventNet என்ற நிறுவனத்தை தொடங்கினார்..
இதுவே பின்னாளில் ஜோஹோ-வாக மாறியது..
ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா ஸ்ரீனிவாசனுக்கு 1990-களின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற்றது. பிரமிளா ஸ்ரீனிவாசனும் ஒரு மென் பொறியாளர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்த வழக்கில் சொத்துக்களைப் பிரிப்பது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால், இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை.. ஸ்ரீதர் வேம்பு இந்தியா திரும்பியபோது, ஆட்டிசம் பாதித்த தனது மகனையும் தன்னையும் அமெரிக்காவில் நிதி ரீதியாகப் பாதுகாப்பற்ற நிலையில் விட்டுச் சென்றதாக பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தனக்கு தெரியாமல், ஜோஹோ நிறுவனத்தின் பங்குகளை ஸ்ரீதர் வேம்பு தனது குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கலிபோர்னியா சட்டப்படி திருமணத்திற்கு பின்னர் சேர்க்கப்படும் சொத்துக்களில் கணவன் மனைவி என இருவருக்கும் சரிபாதி உரிமை உள்ளது. பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாமஸ் நிக்ஸன், ஸ்ரீதர் வேம்பு "நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்று கூறினார்.. தனது சொத்துக்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்த முழுமையான மற்றும் உண்மையான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி கண்டித்தார்.
ஸ்ரீதர் வேம்பு தனது சொத்துக்களைத் தனது மனைவிக்குத் தெரியாமல் மறைப்பதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சொத்துக்கள் மேலும் பிரிக்கப்படுவதை தடுக்க இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடி ரூபாயை ஸ்ரீதர் வேம்பு நீதிமன்றத்தில் உத்தரவாதமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் நிதி விவகாரங்களை முழுமையாகக் கண்காணிக்க தற்காலிக அதிகாரியை நீதிபதி நியமித்துள்ளார். இந்த அதிகாரி ரீசிவர் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீதர் வேம்புவின் அமெரிக்க சொத்துக்கள் மற்றும் அங்குள்ள சோஹோ நிறுவனக் கிளைகளின் நிதி விவகாரங்களை நீதிமன்றம் நியமித்த அந்தப் பொதுவான அதிகாரிதான் மேற்பார்வை செய்வார்.
நீதிமன்ற அனுமதி இன்றி ஸ்ரீதர் வேம்பு பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாது. இந்த வழக்கின் தீர்ப்பு அல்லது சொத்துப் பகிர்வு குறித்த அடுத்தகட்ட நகர்வுகளில் இந்த 'ரிசீவர்' சமர்ப்பிக்கும் அறிக்கைகள் மிக முக்கியமானதாக இருக்கும். பொதுவாக அமெரிக்க நீதிமன்றங்கள் இவ்வளவு பெரிய அபராதத் தொகையையோ அல்லது பிணைத் தொகையையோ விதிப்பது அரிதிலும் அரிது.
Forbes இதழின் தரவுகளின்படி, 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்ரீதர் வேம்புவின் சொத்து மதிப்பு சுமார் ₹50,000 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
News18 தமிழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக