வியாழன், 8 ஜனவரி, 2026

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ! பராசக்தி முன்பதிவும் நிறுத்திவைப்பு!

 மின்னம்பலம்- Kavi : தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் சிக்கலை எதிர்கொண்டுள்ள ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் அறிவித்தது.
ஆனால் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.
இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஜனவரி 9ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ஆஷா கூறியிருக்கிறார்.



எனவே, ஐரோப்பிய நாடுகளில் ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் வெளியாகாது என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நார்வே, போலந்து உள்பட 39க்கும் அதிகமான நாடுகளில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தது.

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்சை நடத்திய மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷனும் ஜனநாயகன் படம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது.

அதில், “எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, ஜனவரி 9, 2026 அன்று திட்டமிடப்பட்டிருந்த ‘ஜன நாயகன்’ படத்தின் முதற்கட்ட வெளியீடு பின்னர் ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு குழுவிடமிருந்து தகவலுக்காக காத்திருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி உறுதிசெய்யப்பட்டவுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் பகிரப்படும்.

இதற்கிடையில், அனைத்து ரசிகர்களும் ஆதரவாளர்களும் பொறுமையாகவும் நேர்மறையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனமும் ஜனநாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“இந்த அறிவிப்பை எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் மனவேதனையோடு பகிர்ந்துகொள்கிறோம். ஜனவரி 9 ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கேவிஎன் புரொடக்சன்ஸ் கூறியுள்ளது.

பராசக்தி முன்பதிவு நிறுத்தம்

தமிழகத்தில் தியேட்டர்கள் முன்பாகவும் புக்கிங் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

திருச்சியில் la cinema நிர்வாக தியேட்டர் முன்பு, ஜனநாயகன் மற்றும் பராசக்தி திரைப்படங்களுக்கான முன்பதிவுகள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தலுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ன. விரைவில் முன்பதிவுகள் தொடங்கப்படும். இந்தத் தற்காலிக சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

கருத்துகள் இல்லை: