வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

கோபாலபுரத்துக்குச் சென்ற தமிழிசை: தவிக்கும் அண்ணாமலை

tamilisai soundararajan meets kalaignar family

 மின்னம்பலம் : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு நேற்று (ஆகஸ்டு 18) சென்று கலைஞரின் மனைவி தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ல், கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.


அதுவரை தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழிசை ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குத் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று கோபாலபுரம் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார் தமிழிசை. கோயிலுக்கு கலைஞரின் மகள் செல்வியும் வந்திருந்தார். அப்போது தமிழிசையும் செல்வியும் சந்தித்துக் கொண்டனர். உடனே தமிழிசையை அருகிலுள்ள தங்கள் இல்லத்துக்கு வருமாறு செல்வி அழைக்க, கோபாலபுரத்திலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் இல்லத்திற்குச் சென்று, கலைஞரின் மனைவி தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்திருக்கிறார் தமிழிசை.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த இல்லத்திற்கு வந்து கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

தெலங்கானா ஆளுநர் பதவியேற்றுக் கொண்டுவிட்டபோதும் தமிழகத்தில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார் தமிழிசை. இது தொடர்பாக தன்னை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதேநேரம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள், “தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரஸ்மீட்டுகள் முதல் பொதுக்கூட்டங்கள் வரை கோபாலபுரம் கோபாலபுரம் என்று மூச்சுக்கு மூன்று முறை பேசி திமுகவை கடுமையாக தாக்கி வருகிறார். இந்த நிலையில் தமிழிசை கோபாலபுரத்தில் கலைஞரின் வீட்டுக்குச் சென்று கலைஞரின் மனைவி, மகள் ஆகியோருடன் சிரித்துப் பேசி புகைப்படம் எடுத்துப் போடுவதை அண்ணாமலை ரசிக்கவில்லை. அதற்காக தமிழிசை தனது பாணி சந்திப்புகளை நிகழ்த்துவதையும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழிசையின் நடவடிக்கைகளால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அண்ணாமலை தவிக்கிறார்” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: