புதன், 17 ஆகஸ்ட், 2022

முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி சென்றார்!.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு..

Oneindia Tamil :  சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த வேளையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
தமிழகத்தின் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த இந்த போட்டியானது கடந்த மாதம் 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடந்தது.
170க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 3000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் மூலம் தமிழகத்தின் பெருமை உலகின் பல இடங்களுக்கும் பரவியுள்ளது.
பாராட்டிய மோடி
இந்நிலையில் தான் மாமல்லபுரத்தில் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி இருந்தார். அதோடு தொடர்ந்து பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார்.

டெல்லி புறப்பட்டு சென்ற ஸ்டாலின்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லி சென்று நாளை ஒருநாள் அங்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் உள்பட உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் சென்றனர். டெல்லி புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், தாமோஅன்பரசன், சேகர்பாபு உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் நாளை காலை 10:30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து பேச உள்ளார். அதன்பிறகு காலை 11 மணிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அதன்பிறகு மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.

பிரதமரிடம் மனு
பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான மனுவை ஸ்டாலின் வழங்க உள்ளார். மேலும் தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றிய பல சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என்ரவி ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கும் நிலையில் அதன்மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

கருத்துகள் இல்லை: