வியாழன், 18 ஆகஸ்ட், 2022

மலையக கூட்டணிக்குள் தள்ளுமுள்ளு ! மலையக மக்கள் முன்னணி தனிவழி?

தமிழ் இல்லை ஒருமித்த முற்போக்கு கூட்டணி அமைச்சர் மனோ கணேசன் அறிவிப்பு |  www.theevakam.com

மலையக குருவி  : தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து மலையக மக்கள் முன்னணி வெளியேற வேண்டுமென கட்சி செயற்பாட்டாளர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட யோசனையை கட்சி உயர்பீடம் நிராகரித்துள்ளதென தெரியவருகின்றது.
எனினும், மலையக மக்கள் முன்னணியால் முற்போக்கு கூட்டணிக்கு சில யோசனைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன எனவும் அறியமுடிகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் மலையக மக்கள் முன்னணி பங்காளியாக அங்கம் வகித்தாலும், அக்கட்சிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனம் மேலோங்கியுள்ளது.


கடந்த பொதுத்தேர்தலின்போதுகூட நீண்ட இழுபறிக்கு மத்தியிலேயே நுவரெலியா மாவட்டத்தில் ராதாகிருஷ்ணனுக்கு இடமளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மலையக மக்கள் முன்னணிக்கு நுவரெலியாவில் ஒரு இடமும், பதுளையில் மற்றுமொரு இடமும் வழங்கப்பட்டது.

அதேவேளை, சர்வக்கட்சி அரசில் இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைப்பதற்கு கூட்டணிக்குள்ளேயே சிலர் முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றனர் எனவும், சில விடயங்களின்போது மலையக மக்கள் முன்னணி புறக்கணிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த யோசனை கட்சி மேல் மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 

கருத்துகள் இல்லை: