சனி, 20 ஆகஸ்ட், 2022

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க பிடிவாதமாக மறுக்கிறார் ...

Vigneshkumar - tamil.oneindia.com  :  பிடிவாதமாக மறுக்கும் ராகுல் காந்தி.. கையை பிசையும் மூத்த தலைகள்.. காங்கிரஸில் என்ன தான் நடக்கிறது!
டெல்லி: மக்களவை தேர்தலுக்கான வேலைகளை பாஜக ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் என்ன செய்கிறது என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
நாட்டில் அடுத்து 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை பாஜக ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இந்த முறையும் தனிப்பெரும்பான்மை உடன் வெல்ல வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு.
பாஜகவை வலுவாக எதிர்க்க வேண்டிய காங்கிரஸ் கட்சியோ இன்னும் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகிறது. பல மாதங்கள் நீட்டிக்கும் இந்த குழப்பம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை.


காங்கிரஸ் தலைவர் பதவி
இன்னும் கூட, அடுத்த காங்கிரஸ் தலைவராக யார் வரக் கூடும் என்பது குறித்து அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. 2019இல் ராகுல் காந்தி தலைமையில் மக்களவை தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அப்போது தனது தலைமை பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அடுத்து யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவராகத் தேர்வானார். இதே நிலைத்தான் காங்கிரஸ் கட்சியில் இப்போது வரை தொடர்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதை அவர் இப்போது வரை ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் கூட இது தொடர்பாக ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேசியதாகவும் இருப்பினும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. சோனியா காந்தியும் தனது உடல்நிலை காரணமாகத் தலைவர் பதவிக்குத் திரும்ப முடியாது என்று கூறிவிட்டார்.

பிரியங்கா காந்தி
இருவரும் நோ சொல்லி நிலையில், காங்கிரஸில் பெரும்பாலான நிர்வாகிகளின் அடுத்த தேர்வாகப் பிரியங்கா காந்தி உள்ளார். இருப்பினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரியங்காவை முன்னிறுத்தி உத்தரப்பிரதேச தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால் அவரை தேர்வு செய்வதிலும் தயக்கம் நிலவுகிறது. இதனால் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் நிர்வாகிகள் மத்தியில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

முயற்சி
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த பக்த சரண் தாஸ் கூறுகையில், "ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பொறுப்பிற்கு வர விருப்பமில்லை என்று கூறிவிட்டாலும், அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயன்று வருகிறோம். அவர் பொறுப்பேற்கவில்லை என்றால் இந்த பதவியை எப்படி நிரப்புவது என்பதை அவரே எங்களிடம் கூற வேண்டும்" என்றார்.

உறுதி இல்லை
தலைவர் பதவியில் இல்லை என்றாலும் கூட மத்திய பாஜக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகுல் காந்தி தான் முன்னெடுத்து வருகிறார். அடுத்த மாத தொடக்கத்தில் அவர் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி மெகா பாத யாத்திரையையும் மேற்கொள்ள உள்ளார். பாத யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்தாலும், தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றே அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ்
கடந்த 2014இல் மத்தியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் முக்கிய தலைவர்கள் வரிசையாகக் காங்கிரஸில் இருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என்ற குரல் கட்சிக்குள்ளேயே அதிகரித்துக் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் கடைசியாக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக இருந்தது 1998இல் தான். அப்போது சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
 

கருத்துகள் இல்லை: