செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

நிதி நெருக்கடி: இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்படுகிறதா!

மின்னம்பலம்  : +2 மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாதது குறித்து பாமக நிறுவனர் டாக்டர்.எஸ். ராமதாஸ் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் வருடம்தோறும் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2011-12 கல்வியாண்டு முதல் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் கொரோனா காரணமாக 2020 முதல் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுவது தடைபட்டுள்ளது.
இலவச மடிக்கணினி திட்டத்தால் ஏராளமான மாணவ மாணவிகள் பயன் அடைந்துள்ளதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய சூழலில் மடிக்கணினி வழங்கப்படுமா?, அல்லது திட்டம் கைவிடப்படுமா? என்ற கேள்விகளோடு தான் அரசு பள்ளி மாணவர்கள் இருக்கிறார்கள்
டாக்டர். ராமதாஸ் டிவிட்
இதனை குறிப்பிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.எஸ். ராமதாஸ் இன்று (ஆகஸ்டு 15) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,

”தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பிறகும் இன்று வரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

2020-21, 2021-22 ஆம் ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் மேலும், ஐந்தரை லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகள் கூட நடப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய கல்விச் சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மிகவும் அவசியமானவை. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களால் அதை விலை கொடுத்து வாங்க முடியாது. அந்த வகையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது சிறப்பான திட்டம்.

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மடிக்கணினி ரத்து இல்லை: அன்பில் மகேஷ்

கடந்த ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை.

கொரோனா பரவல் காரணமாக மடிக்கணினிகள் வழங்கப்படாமல் இருக்கிறது. இதனால் தற்போது 11 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பணிகள் முடிந்த பிறகு விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சர் சொல்லி ஒரு மாதம் ஆன பிறகும் கூட மடிக்கணினிகள் வழங்குவது பற்றிய அறிகுறிகள் இல்லாததால்தான், டாக்டர் ராமதாஸ் இன்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். 

கருத்துகள் இல்லை: