ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

2024 பிரதமர் வேட்பாளர் அகிலேஷ் முன்மொழியும் மம்தா சந்திரசேகர ராவ் ஷரத் பவார்?

tamil.oneindia.com - Nantha Kumar R  :  டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த 3 பேரின் பெயர்களை சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் பரிந்துரை செய்துள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பெயர் இல்லாதது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இப்போது இருந்த அரசியல் கட்சியினர் துவங்கி உள்ளன.
குறிப்பாக பாஜக இந்தியா முழுவதும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அடுத்தமாதம் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைப்பயணம் துவங்கப்பட உள்ளது.!



ஹாட்ரிக் முனைப்பில் பாஜக
இதுதவிர பிற மாநில கட்சிகளும் தங்களின் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்த துவங்கி உள்ளன. இதனால் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான விவாதம் தற்போது துவங்கி உள்ளன. குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

தடுக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்
மாறாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. இதனால் 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக வலுவான அணியை உருவாக்க வேண்டும் என சில கட்சி தலைவர்கள் தற்போதே பேச துவங்கி விட்டனர்.
இதற்கிடையே தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்து அதற்கான பணியை துவங்கி உள்ளன.

மம்தா பானர்ஜி-சந்திரசேகரராவ் ஆர்வம்
இது ஒருபுறம் இருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ் உள்ளிட்டோரும் பிரதமர் பதவி மீது கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர தேர்தல் நெருங்கும் வேளையில் வேறு சில தலைவர்களும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் குதிக்க ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தாலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்படும். இதனால் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளுவதில் சிரமம் உள்ளது.

அகிலேஷ் யாதவிடம் கேள்வி
இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றி உத்தரபிரதேச முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் உங்கள் பெயர் உள்ளதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:

3 பேரை பரிந்துரைத்த அகிலேஷ்
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நான் உத்தரபிரதேச அரசியலில் தான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மேற்கு வங்க முதல் அமைச்சரான மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ் ஆகிய 3 தலைவர்களில் ஒருவரை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக களம் இறக்கலாம்'' என கூறியுள்ளார்.

ராகுல் காந்தி பெயர் புறக்கணிப்பு
இதன்மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் பெயரை அகிலேஷ் யாதவ் கூறவில்லை. மேலும் பீகாரில் பாஜகவின் கூட்டணியை முறித்து லாலு பிரசாத் கட்சியின் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரா நிதிஷ் குமாரின் பெயரும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளருக்கு கடந்த சில நாட்களாக அடிபட்டு வந்த நிலையில் அவரது பெயரையும் அகிலேஷ் யாதவ் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Samajwadi Party's Akhilesh Yadav has nominated 3 names of opposition parties as prime ministerial candidate against BJP in 2024 parliamentary elections. Congress Party's Rahul Gandhi's name is not in it.
 

கருத்துகள் இல்லை: