வியாழன், 25 ஆகஸ்ட், 2022

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு

 மாலை மலர்  :   சென்னை:   அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.
அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடும்போது, யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார் என்றும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும் குறிப்பிட்டார். தனி நீதிபதி ஜெயச்சந்திரன்,

ஓ.பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பயன் அடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயன் அடையும் வகையில் அல்ல என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலை ஏற்படும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட முன் வரமாட்டார்கள் என்பதால் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும். அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு.

கூட்டம் நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதால், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டி வரும். எனவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.

பிற்பகலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் வாதாடினர். "மாவட்ட செயலாளர்கள் தான் ஒற்றை தலைமை கோரியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது, அதனால் தான் எந்த புள்ளி விவரமும் இல்லை என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார் கட்சி துவங்கிய போது 1972-ல் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாது என விதி உள்ளது. 2017ல் இரு பதவிகள் உருவாக்கப்பட்ட போது, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது' என ஓபிஎஸ் வக்கீல்கள் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும், எழுத்துப் பூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்யும்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: