வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் வராது : சீமான்

மின்னம்பலம்  Prakash  : “நான் இருக்கும்வரையில் பரந்தூரில் விமான நிலையம் வர விடமாட்டேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவதற்கு அந்த ஊரைச் சுற்றியுள்ள 12 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அதற்கு அம்மக்கள் போராட்டமும் நடத்திவருகின்றனர்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 26) காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்துக்கு நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்,


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய சீமான், “நான் கட்சிக்கு தலைவனாக வரவில்லை.
இந்தக் கூட்டத்தில் ஒருவனாக வந்திருக்கிறேன். இது கட்சிப் போராட்டம் அல்ல. மக்களின் போராட்டம். இந்த விமான நிலையத்தை கட்டுவதன் மூலம் 100 ரூபாய் முதலீடு செய்தால், 325 ரூபாய் வருமானம் வரும் என தொழில் துறை அமைச்சர் சொல்கிறார்.
அப்படியென்றால், நாடு முழுவதும் விமான நிலையங்களைக் கட்டிவிட்டு, கடனை அடைக்க வேண்டியதுதானே? விமான நிலையத்தைக் கட்டி எல்லோரையும் ஏற்றி வெளிநாட்டிற்கு அனுப்பிவிடலாம் என நினைக்கிறீர்கள். ஆனால், என்னை நீங்கள் அனுப்ப முடியாது. நான் ஒற்றை ஆளாக இருந்து இதையெல்லாம் கத்தி தடுப்பேன். நான் இருக்கும் வரை இதை வரவிடமாட்டேன்.

நீங்கள் நிறையப் பேரைப் பார்த்திருக்கலாம். ஆனால், என்னைப்போன்ற ஒருவரை இப்போதுதான் பார்க்க முடியும். எந்த வீரனும் கண்ணீர் சிந்தமாட்டான். அது கோழைகளின் ஆயுதம். அழாதீர்கள்; துணிந்து இருங்கள். உங்களுக்கு யாரும் இல்லையென்று நீங்கள் நினைக்காதீர்கள். உங்கள் மகன் நான் இருக்கிறேன். விமான நிலையம் வேண்டும் என மக்கள் வீதியில் என்றைக்குப் போராடுகிறார்களோ அன்று, நீங்கள் விமான நிலையத்தை கட்டுங்கள். அன்று நாங்கள் குறுக்கே வந்து நின்றால் வெட்டுங்கள். மக்களின் கோரிக்கை, உணர்வு, குரலுக்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

துருப்பிடித்த இரும்புக்காவது பேரீட்சை பழம் கொடுப்பார்கள். ஆனால் உங்களுடைய திராவிட மாடலுக்கு அதுகூடக் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் வாங்கிவைத்திருக்கும் பல்லாயிரம் ஏக்கரில் விமான நிலையத்தை கட்டலாமே? அதற்கு உங்கள் பெயரையேகூட வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த பரந்தூரில் ஒரு ஏக்கருக்கு பத்து கோடி ரூபாய் தருவதாக இருந்தாலும் நாங்கள் விற்க தயாராக இல்லை. எங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறி வெளியில் நின்று பிச்சையெடுக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு உயிரைவிடவும் தன்மானம் முக்கியம். அப்படி வாழ்ந்த இனம்தான் எங்கள் இனம். ஆக, இதைக் கவனத்தில் வைத்து ஆட்சியாளர்கள் இந்த பரந்தூர் விமான நிலையம் கட்டுவதை கைவிட வேண்டும்” என்றார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சதுப்பு நிலத்தை எந்தப் பாதிப்பும் வராமல் பாதுகாப்போம் என்கிறார்கள். அப்படி எத்தனை இடங்களை அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளார்கள். வளர்ச்சி என்கிறார்கள், ஆனால் வாகனத்தில் இறங்கிவந்தவுடன் விளைநிலங்களை அழித்துவிட்டால் உணவுக்கு எங்கே போவான்? இன்னும் இங்கு இருக்கிற சாலைகளே சரிசெய்யப்படாமல் இருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் விமான நிலையத்தில் பல முறை கண்ணாடிகள் விழுகின்றன. ஆக, விளைநிலங்களைப் பறித்தால் பேராபத்துதான் நிகழும்.

இது பரந்தூர் விமான நிலையம் அவசியமற்றது. ஆகையால் இதை நிறுத்திவைக்க வேண்டுகிறோம். நிலங்களை, அரசு கையகப்படுத்துவதாக சொன்னதையடுத்து நிலத்தின் மதிப்பை குறைக்கும் வகையில் வழிவகை செய்துவிட்டனர். விமான நிலையம் வரப்போகிறது என நினைத்து நிலம் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு இது லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு? பரந்தூர் விமான நிலையத்தை விரைந்து செயல்படுத்த துடிப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. என்றாலும், நான் இருக்கும் வரை பரந்தூர் விமான நிலையம் வரவிட மாட்டேன்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை: