வியாழன், 3 மார்ச், 2022

அதிமுகவில் சசிகலா - தினகரன்: தேனியில் தொடங்கிய பன்னீரின் பகிரங்க முயற்சி!

அதிமுகவில் சசிகலா - தினகரன்: தேனியில் தொடங்கிய பன்னீரின் பகிரங்க முயற்சி!
minnambalam.com : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்விக்குப் பிறகு பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் சசிகலா மீண்டும் அதிமுகவில் தலைமை ஏற்க வேண்டும் என்றும் அதிகாரபூர்வமற்ற பல்வேறு கோரிக்கைகளும் போஸ்டர்களும் தமிழகம் முழுவதும் உலவி கொண்டுள்ளன. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக, “சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும்" என்று மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஓ.பன்னீர்செல்வத்திடமே நேரடியாகக் கொடுத்துள்ளனர். இது அதிமுகவில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு சசிகலா பல்வேறு அதிமுக நிர்வாகிகளுடன் போனில் உரையாடி அதன் பதிவுகள் வெளியாகி வந்தன. அப்போது எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடி சசிகலாவுக்கு அதிமுகவில் எந்தப் பங்கும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றினார்கள். மேலும் பல மாவட்டங்களில் இதேபோல தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்தார். ஆனால் பல்வேறு மாவட்டங்களில் அதுபோன்ற தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து வந்த சூழலில்... நேற்று மார்ச் 2ஆம் தேதி தேனி மாவட்டம் கைலாசபட்டியில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார்கள்.

அந்தக் கூட்டத்தில், “அதிமுக எப்போதெல்லாம் பிளவுகளைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் தேர்தலில் படு தோல்வி அடைகிறது. தோல்வி எதிரிகளால் ஏற்படுவதல்ல. நம்மால்தான் ஏற்படுகிறது. எனவே மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைத்து அதிமுகவாக உருவாக்க பன்னீர்செல்வம் முயற்சி எடுக்க வேண்டும். நம்மைவிட்டுப் பிரிந்து போன சசிகலா, தினகரன் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்தக் கூட்டத்தின்போது பன்னீர்செல்வமும் அதே பண்ணை வீட்டில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பாக ஜெயித்த பிரதிநிதிகள் நேற்று மாலை 5 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கூடினார்கள். மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவினரின் நிலைப்பாடு பற்றி முடிவெடுப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. கவுன்சிலர்களோடு மாவட்ட நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர்.

அவர்களிடையே பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நமது அதிமுக கவுன்சிலர்கள் எக்காரணத்தைக் கொண்டும் திமுகவினரோடு உடன்பாடு செய்து கொள்ளாதீர்கள். திமுகவை எதிர்ப்பதுதான் நமது லட்சியம். திமுக அல்லாத வேறு சில உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட முடிந்தால் செயல்படுங்கள். அதையும் மாவட்டச் செயலாளரிடம் முறையாக தெரிவித்து அவரது அனுமதியின்படி செயல்படுங்கள். ஆனால் திமுகவினரை முற்று முழுதாக நாம் எதிர்க்க வேண்டும்" என்று அறிவுரை கூறினார். அதன் பிறகு பன்னீர்செல்வம் தனது வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு தேனி மாவட்ட அதிமுகவின் நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் முடிவை அடிப்படையாக வைத்தே சில கோரிக்கைகளை எழுப்பினார்கள்.

"நாம பல இடங்கள்ல தோற்றதற்கு காரணம் நம்மளோட ஒற்றுமை இல்லாமைதான். சிற்சில ஓட்டுகளில் நாம் தோற்றிருக்கிறோம். இதையெல்லாம் சரி பண்ணணும்னா கட்சி மறுபடியும் ஒரே கட்சியாக மாறணும். சசிகலா, தினகரன் எல்லோரும் கட்சிக்குள் இருக்கணும். இல்லேன்னா நம்ம தொடர்ந்து தோற்றுக்கொண்டேதான் இருப்போம்" என்று பேச இதையே தீர்மானமாக போட்டு ஒருங்கிணைப்பாளரிடம் கொடுப்போம் என்று கூறினார் மாவட்டச் செயலாளர் சையது கான். அதன்படியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான்,

“அதிமுக தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கைலாசபட்டி பண்ணை வீட்டில் நடந்தது. அதில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஏகோபித்தமாக ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதிமுக என்னிக்குமே தோக்கக் கூடிய கட்சி கிடையாது. நம்மளுக்குள்ள இருக்கும் பிரச்சினைகளால் தான் நாம் தோற்கிறோம். அன்னிக்கி ஜெ-ஜா என பிரிஞ்சதால தோற்றோம்.

இதே மாதிரி அம்மாவோட மறைவுக்குப் பின் நடந்த துரதிருஷ்டவசமான சில நிகழ்ச்சிகளால அதிமுக தோக்க வேண்டிய நிலைமை வந்துச்சு. இந்தச் சூழ்நிலையை மாத்தணும்னு சொன்னா மீண்டும் அதிமுக ஒட்டுமொத்தமாக ஒரே கட்சியாக இருக்கணும். அப்படியிருந்தா அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்ற முடிவுக்கு ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் வந்ததால இந்தக் கூட்டத்தை நடத்தினோம். இந்தத் தீர்மானத்தை எங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களிடம் கொடுத்து இருக்கிறோம். அவர் நிச்சயமாக நல்ல முடிவு எடுப்போம் என சொல்லியிருக்கிறார். தேனி மாவட்டத்தில் இது ஆரம்பம் தான். தமிழகம் முழுவதும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடரும்" இன்று அறிவித்திருக்கிறார்.

நேற்று (மார்ச் 2) நடந்த கூட்டத்தில் எல்லா நிர்வாகிகளும் கலந்து கொள்ளவில்லை என்பதால் மார்ச் 5ஆம் தேதி தேனி மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் முதல் கிளைச் செயலாளர்கள் வரை அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொள்ளும் முழுமையான மாவட்ட கூட்டத்தை நடத்தி அதில் இந்தத் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார் சையது கான்.

சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் சேலம் மாவட்டத்தில் இருந்து தொடங்கிய நிலையில்.... சசிகலாவுக்கு ஆதரவான அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ தீர்மானம் பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது.

அடுத்தடுத்து இது பல மாவட்டங்களுக்கும் பரவும்பட்சத்தில் அதிமுகவில் அதிரடியான மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

ஆரா

கருத்துகள் இல்லை: