திங்கள், 28 பிப்ரவரி, 2022

உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்! 'டார்ச்சர்' செய்வதாக மாணவிகள் புகார் வீடியோ

 Vigneshkumar  -   Oneindia Tamil :   டெல்லி: உக்ரைன் நாட்டில் இருந்து அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் சில அதிர்ச்சி கரமான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான போர் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.
இருப்பினும், இதற்கெல்லாம் புதின் அஞ்சுவதாகத் தெரியவில்லை.
கீவ்வை கைப்பற்ற நினைக்கும் கனவு பலிக்காது.. உக்ரைன் மக்கள் ஆவேசம்


உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்தப் போர் காரணமாக ஒட்டுமொத்த உக்ரைன் வான்வழியும் மூடப்பட்டுள்ளது.
அங்கு மாணவர்கள் உட்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர்களை உக்ரைன் அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே, ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் படிக்கும் மாணவர்கள் இந்த நாடுகளின் எல்லைகளைத் தரைவழியாகக் கடப்பார்கள். அதன் பின்னர் இந்த நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் மூலம் அவர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர், இந்தச் சூழலில் இந்திய மாணவர்களை போலந்து எல்லையில் உள்ள உக்ரைன் காவலர்களால் தாக்குவதாகவும், எல்லையைக் கடக்கவும் அனுமதிக்க மறுப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் தனது சூட்கேஸை தள்ளிச் செல்கிறார். அப்போது காவலர் ஒருவர் பின்னால் இருந்து அந்த மாணவரை உதைக்கிறார்.
உக்ரைன் எல்லையைக் கடந்து போலாந்து நாட்டிற்குள் வர பல இந்திய மாணவர்கள் எல்லையில் பல இந்திய மாணவர்கள் முகாமிட்டுள்ள நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அங்குள்ள பல இந்திய மாணவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக்கச் சாடியுள்ளனர்.

முடியைப் பிடித்து இழுத்துத் தாக்குதல் இது தொடர்பாக உக்ரைன் நாட்டில் படித்து இந்திய மாணவி ஒருவர் கூறுகையில், "இங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிறது. அவர்கள் எங்களைச் சித்திரவதை செய்கிறார்கள்.
இந்திய மாணவர்கள் சித்திரவதை செய்கிறார்கள். எங்களை போலந்துக்கு கடக்க அனுமதிக்க மறுக்கிறார்கள். பெண் மாணவிகளைக் கூட தாக்குகின்றர்.. முடியைப் பிடித்து இழுத்து, கட்டைகளைக் கொண்டு தாக்குகின்றனர்.
சில பெண்களுக்கு எலும்பு முறிவு கூட ஏற்பட்டுள்ளன.
இந்தியத் தூதரக தூதரக அதிகாரிகள் தான் எங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளித்து உதவுகின்றனர். சித்திரவதை போலாந்து எல்லையில் இருக்கும் காவலர்கள் எங்களைக் கடக்க விடுவதில்லை. யாரேனும் எல்லையைக் கடக்க முயன்றால், அவர்களைக் கம்பிகளைக் கொண்டு தாக்குகிறார்கள்.

நேற்றும் கூட துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாங்கள் கடந்த 3 நாட்களாக எல்லையைக் கடக்கக் காத்திருக்கிறோம், ஆனால் எங்களைக் கடக்க அனுமதிக்கவில்லை. விலக்குகளைப் போல எங்களைச் சித்திரவதை செய்கிறார்கள். உக்ரைன் மக்களை எல்லையைக் கடக்க அனுமதிக்கும் அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை" என்று அச்சத்துடன் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டில் உள்ள வேறு சில மாணவிகளும் இதைக் குற்றச்சாட்டை முன் வைத்தனர். உக்ரைன் ராணுவம் தங்களைத் தாக்குவதாகவும் ஏன் திடீரென அவர்கள் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார்கள் எனப் புரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் ரயில் மூலம் நாட்டை விட்டு வெளியே சொன்னாலும், இங்குப் பயணிக்கக் கூடிய சூழல் இல்லை என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அங்குள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் தனியாக டவிட்டர் கணக்கு ஒன்றையும் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட இன்னும் சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்கள் வரும் நாட்களில் உக்ரைனில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: