செவ்வாய், 1 மார்ச், 2022

"குயர் படங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் அதிகம் வரும்" - இயக்குநர் மாலினி ஜீவரத்தினம்

 ஆ. லட்சுமி காந்த் பாரதி  -     பிபிசி தமிழ்  :  குயர் (Queer) சமூக மக்கள் சார்ந்த புரிதலும் அவர்களுக்கான பிரச்னைகளும் இங்கு அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார்,
அந்த சமூக மக்களை மையப்படுத்திய ஆவண படங்களை இயக்கி வரும் மாலினி ஜீவரத்தினம்.
இவருடைய 'ஒய் சோ ஸ்ட்ரெய்ட்' (Why So Straight) என்ற இரண்டாவது ஆவண படம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.
இந்தப் படம் சம்பந்தமாகவும் அதன் உருவாக்கத்தில் இருந்த அனுபவங்கள் உள்ளிட்டவை தொடர்பாக மாலினி ஜீவரத்தினத்தை நேர்காணல் கண்டது பிபிசி தமிழ்.
அதன் விவரம்:சமீபத்தில் நீங்கள் இயக்கிய 'ஒய் சோ ஸ்ட்ரெய்ட்' (Why So Straight ) ஆவண படத்தின் பின்னணி என்ன?
இந்த படத்தின் பின்னணி, அதன் பெயரிலேயே இருக்கிறது. ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் ஆக (Gay) இருப்பதால், அவரைப் பார்த்து, நீ ஏன் அப்படி இருக்கிறாய் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதே கேள்வியை நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன். ஏன் ஸ்ட்ரெய்ட் (straight) ஆக இருக்க வேண்டும்? அம்யா என்ற புனேவை சேர்ந்த குயர் (Queer) செயல்பாட்டாளரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த ஆவண படத்தை இயக்கியுள்ளேன்.
என்னுடைய முதல் ஆவண படமான லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமேன் ( Ladies and Gentlewomen ) என்ற லெஸ்பியன் ஆவண படத்தின் திரையிடல் முடிந்த பிறகு, ஒரு பாலின ஈர்ப்பாளரான ஆண் ஒருவர் என்னிடம் வந்து லெஸ்பியன்களுக்கு மட்டும்தான் படம் எடுப்பீர்களா என்று கேட்டார். அப்போதே ஒருபாலின ஆணின் கதையை மையமாக வைத்து ஆவண படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

குறிப்பாக இந்த ஆவணப்படத்தில், அம்யா என்ற நபரின் சந்தோஷமான தருணங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த ஆவண படத்தில் பிரச்னைகளைப் பேசுவதை விட, கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வகையிலேயே இதை நான் உருவாக்கி இருக்கிறேன்.

தற்போது வெளிவந்துள்ள உங்கள் ஆவணப்படம், கிரெளட் ஃபண்டிங் (Crowdfunding) மூலமாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி என்றால் குயர் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களை எடுக்க தயாரிப்பாளர்களுக்கு இங்கு தயக்கம் உள்ளதா?தற்போது எடுத்துள்ள இந்த ஆவண படத்திற்கான கிரெளட் ஃபண்டிங்கில் பெரும்பான்மையாகப் பங்களித்தது என்னுடைய நண்பர்கள்தான். இன்னும் சிலர் யார் என்றே தெரியாமல் இந்த படத்திற்காக நிதி உதவி அளித்தனர். குயர் படங்கள் வெளியே வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். நாம் ஆசைப்பட்ட புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றால் அதை நாமே எழுத வேண்டும் என்று அமெரிக்க நாவலாசிரியர் டோனி மாரிசன் சொன்னது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. நாம் ஆசைப்படுகிற குயர் படங்கள் இங்கு இல்லை. அதை உருவாக்க வேண்டும் என்றுதான் நான் இதை தொடங்கினேன்.

ஒரு ஹெட்ரோ செக்ஷுவல் (Hetrosexual) திரைப்பட தயாரிப்பாளர் இன்னொரு ஹெட்ரோ செக்ஷுல் இயக்குநருக்காக திரைப்படம் எடுக்க முன் வருகிறார் என்பது இயல்பானது. ஆனால் என்னுடைய முதல் ஆவண படத்திற்கான தயாரிப்பிற்கு பா.ரஞ்சித் முன்வந்தார். இதனாலேயே என்னால் முதல் குயர் படத்தை எடுக்க முடிந்தது. பா.ரஞ்சித் போன்று, எங்கோ யாரோ அவர்களுடைய பங்கை இந்த உயர் ஆவண படத்திற்கு அளித்துள்ளனர். அதனால்தான் இந்த படத்தை என்னால் எடுக்க முடிந்தது. இனி வரும் காலங்களில் அனைவரும் அனைவருக்குமான படங்களை எடுக்க முன் வருவார்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் பார்வையில் தற்போது குயர் படத்திற்கான வாய்ப்புகள் இங்கு எப்படி இருக்கின்றன?குயர் படத்திற்கான வாய்ப்புகள் சமீப காலமாகத்தான் வளர்ந்து வருகின்றன. இதற்கு மிக முக்கியமாக குயர் படத்திற்கான கதையை எழுதுவதற்கு, குயர் பின்னணியில் உள்ளவர்கள் முன் வர வேண்டும். குயர் திரைப்படங்களை உருவாக்குவதற்கு அதன் பின்னணியில், குயர் மக்களின் பங்களிப்பு மிக அவசியமானது என்று நான் கருதுகிறேன். என்னுடைய கண்ணோட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில், அதிகமான குயர் படங்கள் வரும் என நம்புகிறேன். குயர் மக்கள் மீதான புரிதல் தற்போது அதிகரித்துள்ளது. இதுதான் அதற்கு காரணமாக இருக்கும். குயர் படங்கள் அனைவருக்குமானது. குயர் மக்களைப் பற்றி புரிந்துகொள்ள, சக மனிதர் யாராக இருந்தாலும் அவர்கள் இப்படியான படங்களைப் பார்க்க முன் வரவேண்டும்.இந்த ஆவணப்படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களைப் பற்றி கூறுங்கள்?இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பு தமிழரசன். இவர்கள் அனைவரும் கமர்சியல் (Commercial) திரைப்படங்களில் வேலை செய்தவர்கள். சமூக கண்ணோட்டத்துடன் உருவாக்கப்படும் குயர் படங்களில் பங்களிப்பது என்பது இங்கு முக்கியமானது. என்னைப் பொறுத்தவரையில் ஆவண படம் என்பது பிரச்னைகளைப் பேசுவதைத் தாண்டி, அது ஒரு கலை. நாம் பார்வையாளர்களுக்குக் கொடுக்கக்கூடிய கலையை பிரதானப்படுத்தி அழகாகக் கொடுக்க வேண்டும். அதனால்தான் இவர்களுடைய ஒத்துழைப்புடன் இந்த ஆவணப்படத்தை வெளிக்கொண்டு வந்துள்ளேன்.அடுத்த கட்ட திட்டம் என்ன?தற்போது நான் எடுத்துள்ள இந்த ஆவண படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான வேலையை தொடங்கி இருக்கிறேன். மேலும் வேட்டிக்காரி என்ற கிரெளட் ஃபண்டிங் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் தான் தற்போது வெளியாகியுள்ள ஒய் சோ ஸ்ட்ரெய்ட் ஆவண படம். இதுபோன்ற அனைவருக்குமான குயர் ஆவணப் படங்களை இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக உருவாக்க உள்ளே

கருத்துகள் இல்லை: