திங்கள், 28 பிப்ரவரி, 2022

ஸ்டாலின்-சிதம்பரம் சந்திப்பு: திமுகவில் கொதிப்பு!

ஸ்டாலின்-சிதம்பரம் சந்திப்பு: திமுகவில் கொதிப்பு!

மின்னம்பலம் : நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக 49 இடங்களை கைப்பற்றி விட்டது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சி இந்த முறை பொது ஒதுக்கீட்டில் வருவதால் அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே. என். நேருவின் நீண்டகால ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் அன்பழகன் மேயர் ஆவார் என்பதே திருச்சி அரசியல் வட்டாரத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும்.
தேர்தலுக்கு முன்பே திருச்சி மாவட்ட செயலாளர்களில் ஒருவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் இந்த முறை மேயர் பதவியை தனது ஆதரவாளரான மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணனுக்கு பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் ஸ்டாலின் அன்பில் மகேஷை அழைத்து, ' நேரு என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்துகொள்' என்று அட்வைஸ் பண்ணி அனுப்பி விட்டார்.



அதையடுத்து மேயர் நாற்காலியில் மூக்கை நுழைக்காத அன்பில் மகேஷ் தனது ஆதரவாளருக்கு துணை மேயர் நாற்காலியை குறி வைத்தார்.

நேருவின் தீவிர ஆதரவாளரான அன்பழகன் மேயராக பதவியேற்கும் நிலையில், தனது ஆதரவாளரான மதிவாணன் துணை மேயராக பொறுப்பேற்றால்... திருச்சி மாநகராட்சியில் நேருவுக்கு போட்டியாக வலிமையாக அரசியல் செய்யலாம் என்பது அன்பில் மகேஷின் கணக்கு.

இந்த நிலையில்தான் கடந்த 26ஆம் தேதி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அவரது வீடு தேடி சென்று சந்தித்தார் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம்.

சென்னையில் சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்த விவகாரம் திருச்சி வரைக்கும் திகுதிகுவென எரிகிறது. சிதம்பரம் இன்னும் சில மாதங்களில் முடிய இருக்கும் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை தமிழ்நாட்டிலிருந்து நீட்டித்துக் கொள்ளலாம் என்ற கணக்கில் முதல்வரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு திருச்சியில் என்ன எதிரொலி?

திருச்சியில் திமுக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.

"சிதம்பரத்தின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வரும் ஜூலை 4 ஆம் தேதியுடன் முடிகிறது. அதேநேரம் பிப்ரவரி 26-ஆம் தேதி ஸ்டாலினை அவரது வீடு தேடிப் போய் சிதம்பரம் சந்திப்பதற்கு ராஜ்யசபா உறுப்பினர் விவகாரத்தோடு இன்னொரு முக்கியமான விஷயம் காரணமாக இருக்கிறது.

திருச்சியில் 5 வார்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்திலும் ஜெயித்து விட்டது. இதில் சிதம்பரத்தின் ஆதரவாளரான சுஜாதாவும் ஒருவர். சிதம்பரம் தனக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ஸ்டாலினிடம் வலியுறுத்தியதோடு, சுஜாதாவுக்கு திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் பதவியையும் ஸ்டாலினிடம் நேருக்கு நேர் கேட்டிருக்கிறார்.

இதுதான் திருச்சி லோக்கல் அரசியலில் வெடியை கொளுத்தி போட்டது மாதிரி ஆகிவிட்டது.

சிதம்பரம்-ஸ்டாலின் சந்திப்பு பற்றி தனக்கு நெருக்கமான காங்கிரஸ் நண்பர்களிடம் பேசிய நேரு...'என்னய்யா உங்க ஆளு இப்படி பண்ணிட்டாரே. மேயரும் துணை மேயரும் திமுகவுக்கு தான் அப்படின்னு முடிவு பண்ணி இருந்த நேரத்தில் திடீர்னு தலைவரைப் பார்த்து துணை மேயருக்கு துண்டு போட்டுட்டாரே... ஏற்கனவே திருச்சியில் கோஷ்டி அரசியல்ல என் தலைய உருட்டுறாங்க. இப்ப துணை மேயர் பதவி காங்கிரசுக்கு போயிடுச்சுன்னா அதுக்கும் என்னைதான் காரணம் சொல்லுவாங்க' என்று காங்கிரசாரிடம் கமெண்ட் அடித்திருக்கிறார் நேரு.

ஆனால் அன்பில் மகேஷ் தரப்பினரோ....'ஆரம்பத்தில் திருச்சி மேயர் பதவியை அன்பில் மகேஷ் தனது ஆதரவாளரான மதிவாணனுக்குப் பெறுவதில் தீவிரமாக இருந்தார். ஆனால் நேருவின் சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ள வேண்டுமென ஸ்டாலின் கூறியதை அடுத்து அதை அப்படியே விட்டுவிட்டார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு தான் மதிவாணன் துணைமேயர் பதவியை பெறுவதில் தீவிரம் காட்டினார் அன்பில் மகேஷ்.

ஆனால் இப்பொழுது திருச்சி துணை மேயர் பதவியை காங்கிரஸிற்கு வழங்குமாறு சிதம்பரம் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிகிறது. இதை காங்கிரசே கேட்கிறதா... அல்லது திருச்சி மாநகராட்சிக்குள் அன்பில் மகேஷ் தரப்பினரின் செல்வாக்கை அனுமதிக்கக்கூடாது என நேருவே திட்டமிட்டு காங்கிரசை தூண்டிவிட்டு தலைவர் வரை காய் நகர்த்தி இருக்கிறாரா என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுகிறது' என்கிறார்கள்.

ஆக சென்னையில் ஸ்டாலினை சிதம்பரம் சந்தித்த சம்பவம் திருச்சி திமுகவுக்குள் தீப்பிடித்து எரிகிறது.

திருச்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் சுஜாதாவுக்கு கொடுக்க வேண்டுமென திமுக தலைமை உத்தரவிடாமல் தடுப்பதற்காக அன்பில் மகேஷ் உதயநிதி மூலம் தனது உச்சகட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதே லேட்டஸ்ட் நிலவரம்.

ஆரா


கருத்துகள் இல்லை: