வெள்ளி, 4 மார்ச், 2022

3000 இந்தியர்களை சிறைபிடித்த உக்ரைன்? பணயக்கைதிகளாகத் தவிப்பு - ரஷ்ய அதிபர் புடின் தகவல்

 Shyamsundar  -   Oneindia Tamil :   மாஸ்கோ: உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள், பொதுமக்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ உதவியுடன் எல்லைக்கு வரும் மக்களை ரோமானியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா மீட்டு வருகிறது.
இந்த ஆபரேஷனுக்கு கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 15 விமானங்கள் இயக்கப்பட்டு 3000 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். ஆனால் அதே சமயம் இந்திய அரசு விமானம் மட்டுமே அனுப்பியது,


உக்ரைனில் இருந்து வெளியேற எங்களுக்கு உதவி செய்யவில்லை என்று இந்தியா திரும்பிய மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
உக்ரைனில் இன்னும் 18 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் வரும் நாட்களில் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 4000க்கும் அதிகமான இந்தியர்கள் போர் தீவிரமாக் நடக்கும் கார்கிவ் பகுதியில் உள்ளனர். இந்தியாவின் தூதரகம் கீவ் நகரத்தில் இருந்து தற்காலிகமாக லேவிவ் நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு 280 தமிழ்நாடு மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்ட நிலையில் 2223 தமிழ்நாடு மாணவர்கள் இன்னும் சிக்கி உள்ளனர்.

முன்னதாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது. உக்ரைன் ராணுவம் மீது ரஷ்யா இந்த குற்றச்சாட்டை வைத்தது. கார்கிவ் பகுதியில் இந்தியர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்துள்ளது. அவர்களை வலுக்கட்டாயமாக உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வெளியே செல்ல விடாமல் தடுத்து உள்ளது, குழுவாக மாணவர்கள் பலர் இங்கே சிறை பிடிதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ரஷ்யா இவர்களை முடிந்த அளவு வெளியேற்ற முயன்று கொண்டு இருக்கிறது . ரஷ்ய படைகளின் உதவியுடன் இந்தியர்கள் பலர் இந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மறுப்பு ஆனால் இந்த தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்கள் உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. உக்ரைன் அரசு அதிகாரிகளின் உதவியுடன் இந்தியர்களை மீட்டு வருகிறோம். இந்தியர்களை தொடர்ந்து போர் நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியே கொண்டு வந்து கொண்டு இருக்கிறோம். இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் வரவில்லை. இதற்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய உக்ரைன் அரசிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியர்கள் 3000 பேர் வரை கார்கிவ் ரயில் நிலையத்தில் இவர்களை உக்ரைன் ராணுவம் அடைத்து வைத்துள்ளது. அவர்களை வெளியே விட மறுத்து வருகிறது. 576 பேர் சுமி என்ற நகரத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

உக்ரைன் படை நாசிகள் போல செயல்படுகிறது. அவர்கள் சீனா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்துவிட்டனர். மாணவர்களை வெளியேற விடாமல் உக்ரைன் ராணுவம் தடுத்து வருகிறது. அவர்களை சிறை கைதிகள் போல நடத்தி வருகிறது. இது போர் கால அத்துமீறல். உக்ரைன் ராணுவம் எல்லை மீறுகிறது.

நாங்கள் இதற்காக கிரீன் சோன் உருவாக்கி உள்ளோம். போர் நடக்காத சில வழிகளை ஏற்படுத்தி உள்ளோம். இது வழியாக மாணவர்கள், பொதுமக்களை அமைதியாக வெளியேற அனுமதித்து உள்ளோம். ஆனால் உக்ரைன் அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மாணவர்களை துப்பாக்கி முனையில் வைத்து உக்ரைன் அரசு மிரட்டி வருகிறது என்று புடின் குறிப்பிட்டுள்ளார். இந்தியா திரும்பிய மாணவர்கள் பலர் உக்ரைன் ராணுவம் தங்களை தாக்கியதாக கூறிய நிலையில்தான் உக்ரைன் மீது புடின் இந்த புகாரை வைத்துள்ளார்.


கருத்துகள் இல்லை: