புதன், 2 மார்ச், 2022

ராகுல் காந்தி : என் பேச்சைக்கூட கொண்டு செல்ல முடியாவிட்டால் காங்கிரசை எப்படி ... தமிழக காங்கிரஸ் மீது..

 மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: தமிழக விசிட்: ராகுல் கோபம்!
வைஃபை ஆன் செய்ததும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக விசிட் பற்றிய பல்வேறு படங்கள் இன்ஸ்டாகிராமில் பேஸ்புக்கில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்து விட்டு தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ்அப்.
"காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தென்னிந்தியா மீது குறிப்பாக தமிழ்நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பற்றி அண்மையில் பெருமிதமாக பேசிய ராகுல் காந்தி வெளியே வரும்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, 'நான் தமிழன்' என்று பதிலளித்தார்.


பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின், 'உங்களில் ஒருவன்'தன் வரலாற்று நூலை வெளியிட்ட ராகுல் காந்தி அந்த மேடையில் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாடு பற்றியும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் பற்றியும் இந்தியாவில் மாநிலங்களின் முக்கியத்துவம் பற்றியும் ராகுல் காந்தி பேசிய பேச்சு தேசிய கட்சி தலைவருக்கு மாநிலங்கள் பற்றிய இதுவரை இருந்த பார்வையை புரட்டிப்போட்டதாக அமைந்தது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழா முடித்துவிட்டு சத்தியமூர்த்தி பவனில் ராகுல்காந்திக்கு நிகழ்ச்சி இருந்தது.

தமிழகம் வரும் ராகுல் காந்தி இன்னொரு கட்சியின் விழாவில் கலந்து கொள்வதோடு மட்டும் சென்றுவிடக்கூடாது.... காங்கிரஸ் கட்சிக்கு என ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் திட்டமிட்டு, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளை சந்திக்க வைத்து நிகழ்ச்சியை செய்யலாமென அழகிரியோடு ஆலோசித்து திட்டமிட்டார்.

டெல்லிக்கு இரவே செல்ல வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி ராகுல்காந்தி மிகக் குறுகிய நேர அவகாசமே இந்த நிகழ்ச்சிக்கு கொடுத்திருந்தார்.

28ஆம் தேதி மாலை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுல் காந்தி, காரைவிட்டு இறங்கி நேராக பவனுக்குள் நுழைய முற்பட்டார். ஆனால் தலைவர்களெல்லாம் வாசலில் அமைக்கப்பட்ட மேடையில் இருப்பதாகக் கூறி அவரை நேராக மேடைக்கே அழைத்து வந்தனர்.

மேடையில் வழக்கத்துக்கு மாறாக சற்று இறுகிய முகத்தோடு இருந்தார் ராகுல். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசிக்கொண்டிருக்கும்போது எதிரே கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தையை அழைத்து தன் பக்கத்தில் அதாவது அழகிரி இருக்கையில் குழந்தையை அமர வைத்தார். அழகிரி பேசிக்கொண்டிருக்கும்போதே ராகுல்காந்தி அந்த குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது செல்வப்பெருந்தகையோடு சில வார்த்தைகளைப் பேசினார்.

அழகிரி பேசி முடித்த பிறகு ராகுல்காந்தி பேச அழைக்கப்பட்டார். ஒவ்வொரு தலைவராக பெயர் குறிப்பிட்டுக் கொண்டே வந்தவர் திடீரென மேடையில் இருக்கும் தலைவர்களை நோக்கி திரும்பி,

'என் உரையை தமிழில் மொழிபெயர்க்க வில்லையா?' என்று கேட்டார். உடனடியாக மேடையில் இருந்த அழகிரி உள்ளிட்ட தலைவர்கள், வேண்டாம் தேவையில்லை என்றனர். அவர்களைப் பார்த்து, 'ஷ்யூர்? நான் பேசுவது புரியுமா?' என்று மீண்டும் கேட்கிறார் ராகுல் காந்தி. அப்போதும் மேடையில் இருந்த தலைவர்கள், 'எஸ் புரியும்' என்று கூறினார்கள்.

ஆனால் கூட்டத்தில் இருந்தவர்கள் தமிழ் ட்ரான்ஸ்லேஷன் வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். அதைக்கேட்டு மேடையில் இருக்கும் தலைவர்களை நோக்கி ஒரு சைகை காட்டினார் ராகுல் காந்தி. அதன்பிறகு அவசரமாக ஜெயக்குமார் எம்பி ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்தார்.

அந்தக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக மேலிட பொறுப்பாளர் குண்டுராவ், தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக இருக்கும் செல்லகுமார் எம் பி உள்ளிட்ட சிலரிடம் தமிழக காங்கிரஸ் பற்றி தனது வருத்தத்தை ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

'சற்று முன்னர் தான் தமிழ்நாடு பற்றியும் தமிழக கலாச்சாரம் பற்றியும் தமிழ்நாட்டின் தொன்மை பற்றியும் ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்தினேன். அந்த உரையைப் பாராட்டி இந்திய அளவில் எனக்கு பலரும் மெசேஜ் செய்திருக்கிறார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் நண்பர்களிடம் பேச வந்துள்ளேன். அதிக அளவில் மக்கள் திரண்டு இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

எனது பேச்சை தமிழில் மொழி பெயர்க்க வேண்டாமா என்று நான் கேட்கிறேன். மேடையில் இருப்பவர்கள் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் இருப்பவர்கள் தமிழ் மொழிபெயர்ப்பு வேண்டும் என்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸில் இதுதான் நடக்கிறது. 

தமிழக மக்கள் நமது பேச்சை அவர்கள் மொழியில் கேட்க விரும்புகிறார்கள். அந்த மேடையில் மொழிபெயர்ப்பு இல்லாமலிருந்தால்.... நான் அதற்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் பேசியதற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி எழுந்திருக்காதா? 

தமிழக மக்களோடு உரையாட நான் தயாராக இருக்கும்போது சில தலைவர்கள் ஏன் தடையாக இருக்கிறார்கள்? இதை ஒரு சின்ன விஷயமாக நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் முக்கியமான விஷயம். அதனால் தான் அந்த விழாவில், தமிழ்நாட்டில் காங்கிரசை வலுப்படுத்தினால் தான் இந்தியாவில் காங்கிரசை வலுப்படுத்த முடியும் என்று நான் பேசினேன். என் பேச்சைக் கூட தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல முடியாவிட்டால் காங்கிரசை எப்படி கொண்டு செல்வீர்கள்?' என்று குண்டுராவ் இடம் ராகுல் காந்தி கோபத்தோடு வேதனைப் பட்டதாக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சிலரே அந்த நிகழ்ச்சி முடிந்த மறுநாள் தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் ஆதங்கப் பட்டனர்"என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: