ஞாயிறு, 30 ஜனவரி, 2022

சாமாஜ்வாடி" உணவகம்! ரூ 10க்கு முழு சாப்பாட்டு.. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் சரவெடி

 சமாஜ்வாடி பக்கம் வரும் பாஜக தலைவர்கள்

Vigneshkumar   -   Oneindia Tamil   :  லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநில மக்களைக் கவரும் வகையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10இல் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் பலரது கவனமும் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தான் உள்ளது. அங்கு வரும் பிப். 10இல் தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் 4 மாநிலங்களிலும் வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இதற்காகத் தேர்தல் பணிகளை அக்கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பாஜக கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

ஏனென்றால் பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாராணசி உத்தரப் பிரதேசத்தில் தான் உள்ளது. மேலும் மொத்தம் 80 எம்பிகளை மக்களவைக்கு அனுப்புவதால் 2024 தேர்தலுக்கும் சேர்த்தே திட்டம் போடுகிறது. இருப்பினும், அங்கு பாஜகவுக்கு வெற்றி உறுதி எனக் கூற முடியாத நிலையே உள்ளது. அங்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி பாஜகவுக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறது.

அதேபோல பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் சமாஜ்வாடி பக்கம் செல்வது அக்கட்சிக்கு பலத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே தேர்தலில் மக்களைக் கவரும் வகையில் அகிலேஷ் யாதவ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அம்மா உணவகம் ஸ்டைலில் சமாஜ்வாடி உணவகம் தொடங்கப்படும் என்று நேற்று அகிலேஷ் யாதவ் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நேற்று பேசிய அகிலேஷ் யாதவ், இந்த முறை சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால், மானிய விலையில் உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை மக்களுக்கு மிகப் பெரியளவில் பயன் கொடுத்து வருகிறது. இதனால் தான் ஆட்சி மாறிய பின்னரும் கூட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே அறிவித்திருந்தார்.

அம்மா உணவகம் ஸ்டைலில் தொடங்கப்படும் இந்த உணவகத்தில் முழு சாப்பாடு சமாஜ்வாடி தாலி என்ற பெயரில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மேலும், ஏழைகள் பயன் பெறும் வகையில் சிறப்பு சமாஜ்வாடி கேன்டீன்கள் மற்றும் உணவுப்பொருள் அங்காடிகள் திறக்கப்படும் என்றும் இதில் குறைந்த விலையில் அவர்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் தனது அறிவிப்பில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைப் போலவே நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்தச் சட்டம் வேலைக்காக நகர்ப்புறங்களுக்கு வரும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும். உ.பி.யில் உள்ள இளைஞர்களுக்கு ஐடி துறையில் 22 லட்சம் வேலைகள் வழங்கப்படும். காலியாக உள்ள 11 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பப்படும்" என்று பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

தொடர்ந்து மேற்கு உபி-இல் உள்ள விவசாயிகள் மற்றும் குறிப்பாகக் கரும்பு விவசாயிகளின் பிரச்சனை குறித்துப் பேசிய அகிலேஷ், "சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்ததும் 15 நாட்களில் அனைத்து கரும்பு நிலுவைத் தொகையும் வழங்கப்படும். அனைத்து விவசாய விளைபொருளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையும் (MSP) அறிவிக்கப்படும். பாஜக அரசு தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்தவொரு நல்ல விஷயத்தையும் செய்யவில்லை. ஊரடங்கு சமயத்தில் தொழிலாளர்களுக்கு உதவாமல் பாஜக அரசு கடும் இன்னலுக்கு ஆளாக்கியது.

சமாஜ்வாடி ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்கு பணியாற்றுவதே எங்கள் நோக்கம். பாஜக அரசு விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களை நசுக்குகிறது. ஆட்சிக்கு வந்தால் விவசாய இயக்கத்தின் போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் கட்டப்படும்" என்று அவர் தெரிவித்தா

கருத்துகள் இல்லை: