சனி, 5 பிப்ரவரி, 2022

வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு! பேரறிஞர் அண்ணாவிடம் இ தி மு க.. (வரலாறு)

கொடியோடு ஏ இளஞ்செழியன்
ராதா மனோகர் :  1951 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக மாநாட்டுக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மூவரை அனுப்புவது என்று கழக தோழர்கள் முடிவு செய்தனர்
அம்மாநாட்டு  நிதியை சேர்க்கும் பணியை தோழர் இளஞ்செழியன் ஏற்று கொண்டார்.
இந்த நிதியை சேர்க்கும் முகமாக  கண்ணீர் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள்
மலையக தோட்டங்களில் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் மலையக மக்களின் கண்ணீர் கதையையே ஒரு நாடகமாக தயாரித்திருந்தார்கள்
இந்நாடகத்தை தோழர் வி செம்பனூர்  தோழர் கே கே இராமசாமி ஆகியோர் எழுதி இயக்கி இருந்தனர்


இந்நாடகம் கொழும்பு பொரளை பௌத்த இளைஞர் மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது
இதன் பிரதான பாத்திரமான தமிழ்மாறன் என்ற பாத்திரத்தை தோழர் இளஞ்செழியன் ஏற்று திறம்பட நடித்திருந்தார்
இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தமிழக திராவிட முன்னேற்ற கழக மாநாட்டிற்கு செல்லும் தோழர்களான  அ.நாச்சியப்பன் , திருப்பூர் கந்தசாமி,  எஸ் கே மாயகிருஷ்ணன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது

இவர்களோடு தோழர் எஸ் மணவைத்தம்பி . இரா அதிமணி ஆகியோர் கொழும்பு மாவட்ட இ தி மு க சார்பில் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்

இம்மாநாட்டில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திமுக மாநாட்டில் வைத்து  பேரறிஞர் அண்ணாவிடம் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது

வெளிநாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான  திராவிடர்களின் நலனை பேணுவதற்கும் கண்காணிப்பதற்கும் தமிழக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒரு வெளி விவகார குழுவை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை  பேரறிஞர் அண்ணாவிடம் முன்வைத்தனர்.

இக்கோரிக்கை அம்மாநாட்டில் பெரிதாக வரவேற்கப்பட்டதோடு ஏகமனதாக ஏற்று கொள்ளபட்டது

தமிழக திமுகவின் நிதிக்காக இலங்கை திமுகவால் மேடையேற்றப்பட்ட கண்ணீர் நாடகத்தின் பிரதியை பார்வையிட்ட சிந்தனை சிற்பி சி பி சிற்றரசு தனது பதிப்பகம் மூலம் அதை அச்சிட்டு வெளியிட்டார் 



கருத்துகள் இல்லை: