வியாழன், 3 பிப்ரவரி, 2022

இரு மீனவர்கள் உயிரிழப்பு – கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் – டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம்



BBC : இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மீனவர்கள் கோரியபடி, அவர்களின் பிரச்னைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதத்தை தர அமைச்சர் மறுத்ததால் அவர் மீது யாழ்ப்பாணம் மீனவர்கள் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கும்போது பிடிபட்டதாகக் கூறி கைதாகி பின்னர் விடுவிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல, சமீபத்திலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதேவேளை, இரண்டு இலங்கை மீனவர்களும் சமீபத்தில் நடுக்கடலில் தாக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளனர்.



இந்த விவகாரத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தடுக்கக் கோரி தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களின் கடல் ஊடுருவலை தடுக்கக் கோரி இலங்கை மீனவர்களும் தங்களுடைய மண்ணில் இருந்தபடி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் சுப்பர்மடம் கடற்பகுதியிலிருந்து கடந்த வாரம் வியாழக்கிழமை ஒரு ஃபைபர் படகில் தணிகைமாறன், பிரேம்குமார் என்ற இரண்டு இலங்கை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

சடலமாக திரும்பிய யாழ். மீனவர்கள்

மறுநாள் வெள்ளிக்கிழமை கரை திரும்ப வேண்டிய இரண்டு மீனவர்களும் வரவில்லை. இதையடுத்து சுப்பர்மடம் கடற்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மாயமான இரண்டு மீனவர்களையும் தேடினர். அப்போது இரண்டு மீனவர்களும் பயன்படுத்திய வலைகள் சேதப்படுத்திய நிலையில் நடுக்கடலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு மீனவர்களின் உடல்கள் திங்கட்கிழமை அடுத்தடுத்து வடமராய்ச்சி கடற்பகுதியில் ஒதுங்கியது.

அந்த மீனவர்கள் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களாலேயே நடுக்கடலில் வைத்து தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டி இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

4வது நாளாக போராட்டம்
வடமராட்சியில் மீனவர்கள் போராட்டம்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களுடைய பிரச்னைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யாழ் மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அனைத்து கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

சுப்பர்மடத்தில் தொடங்கிய மீனவர்களின் தொடர் முழக்கப் போராட்டம், விரிவடைந்து நேற்று பருத்தித்துறை பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டது.

அமைச்சர் முற்றுகை

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

இன்று மாவட்ட செயலகம், ஆளுநர் செயலகம், இந்தியா இல்லம் முற்றுகையிடப்பட்டன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மீனவர்களை சந்தித்து சமாதானம் பேச வந்த இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மீனவர்கள் பலர் முற்றுகையிட்டு தங்களுக்கு நிர்ந்தரத் தீர்வு வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

அவர்களிடம் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் டக்ளஸ் தேவானந்தா பேசினார்.

“இது நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்னை. இதற்கு ஒரு இறுதித் தீர்வு காணும் வகையில்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்.

“இந்திய படகுகள் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கும் பணியை எமது கடற்படை பார்த்துக் கொள்ளும். இந்தியாவில் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கையில் விரும்பிய கடல் தொழிலாளர்களிடம் கொடுத்து அவர்கள் மீன்பிடி தொழிலை செய்வதற்கு நாங்கள் அனுமதிப்போம்,” என்று அவர் கூறினார்.

இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டி உள்ளே நுழைந்தால் நாங்கள் சட்டத்தை கையில் எடுப்போம் என இலங்கை மீனவர்கள் கூறுவது பற்றி உங்களுடைய நிலை என்ன கேட்டதற்கு, “கடற்படை நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அதை எடுக்கலாம் என்பதே பொருள்” என்று அவர் பதிலளித்தார்.

அமைச்சருடன் மீனவர்கள் வாக்குவாதம்

இந்த விவகாரத்தில் எழுத்துபூர்வமாக தர வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கோரியது குறித்தும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எத்தனை எழுத்துபூர்வ உடன்படிக்கையை மேற்கொள்வது? பல உடன்படிக்கைகள் போடப்பட்டும் அவை நடைமுறைக்கு வந்ததா?” என்று அவர் மறுகேள்வி எழுப்பினார்.

“இந்த விஷயத்தில் நான் அரசியல் செய்ய மாட்டேன். பொய் சொல்லப்போவதில்லை. மற்றவர்கள் பொய் அரசியல் செய்வார்கள். எனக்கு அது தேவையில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டி உள்ளே நுழைந்தால் நாங்கள் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என இலங்கை மீனவர்கள் பேசியது பற்றி கேட்டதற்கு, “அது அவர்களை (இந்திய மீனவர்கள்) பொறுத்தது,” என்று டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார்.

அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிரும்போதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள், இந்திய தரப்புதான் கம்பிகளை கொண்டு தங்களை தாக்குவதாகவும் அதனால்தான் தாங்களும் திருப்பித் தாக்குவதாக கூறினர்.

அமைச்சர் மீது மீனவர்கள் அதிருப்தி

இதையடுத்து அவர்களிடம் பேசிய டக்ளஸ் தேவானந்தா, “இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையாதவாறு நாம் பார்த்துக் கொள்வோம். இங்கு அவர்கள் வராமல் நாம் தடுப்போம்,” என்று கூறினார். இருப்பினும் அவருடன் சில மீனவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடி இருந்ததால் செய்தியாளர்களுக்கு வழங்கி வந்த பேட்டியைத் தொடராமல் டக்ளஸ் தேவானந்தா புறப்பட்டுச் சென்றார்.

இதேவேளை சாலை மறியலில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் மீனவர்கள், “எங்களுக்கு முடிவு காணப்படும் என்று கூறி வந்து விட்டு எதுவும் தெரிவிக்காமல் செல்கிறார்கள்,” என்று முறையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இலங்கை கடலிலும் நாங்கள் ஆதரவற்று விடப்படுகிறோம், சொந்த மண்ணிலும் நடுத்தெருவிலேயே விடப்பட்டு இருக்கிறோம். டக்ளஸ் தேவானந்தா எதற்குத்தான் அமைச்சராக இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை,” என்றார்.

மற்றொரு மீனவர், “முன்பு நாங்கள் போராட்டம் செய்தபோது இதே டக்ளஸ் தேவானந்தா வந்து சமாதானம் பேசினார். அப்போது கடற்படை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீங்கள் எடுங்கள் என்று சொன்னார். ஒரு படகில் வந்து மண்ணை எடுத்தால் கடற்படை பிடிக்கிறது. அதுவே அங்கிருந்து (இந்தியா) 300 படகுகளில் மீனவர்கள் வந்தால் ஒரு கடற்படை கூட ரோந்துக்கு வருவதில்லை,” என்றார்.

போராட்டம் தொடரும்: இலங்கை மீனவர்கள்

இதைதத்தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வழிநடத்திய யாழ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மாசனங்களின் சம்மேள தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, “இந்திய இழுவைப்படகுகளால் தொடர்ந்து யாழ் மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி வழங்கக் கோரி இந்த போராட்டம் நடக்கிறது,” என்று கூறினார்.

“இந்த போராட்டத்தைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலக செயலாளர் ஆகியோர் மீனவர்களுக்கு எழுத்துபூர்வ முடிவை தெரிவிக்க வேண்டும் என கோரினோம். ஆனால், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது முடிவாக, இந்திய மீனவர்களின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவதாக வாய்மொழியாக கூறியிருக்கிறாரேயொழிய இலங்கை மீனவர்கள் கோரிய எழுத்துபூர்வ உத்தரவாதத்தை தர முடியாது என்று கூறி விட்டார். அந்த முடிவு கிடைக்கும்வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்,”என்று அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

“கடந்த மூன்று, நான்கு நாட்களாக தங்களுடைய தொழிலை நிறுத்து விட்டு மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியும் எந்தவித எழுத்துபூர்வ முடிவுக்கும் அரசு உடன்படவில்லை. அதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மீனவ அமைப்புகளுடன் பேசி தீர்மானிப்போம். வடமறாட்சி பிரதேச மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். அதுவரை போராட்டத்தை தொடருவோம்,” என்று அவர் கூறினார்.

சட்டத்தை மீறுவோம்: எச்சரிக்கும் மீனவர்கள்

“இலங்கை எல்லைக்குள் எங்களுடைய மீனவர்கள் உயிரிழக்கிறார்கள். அதை தடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்கவில்லை. அத்தகைய சூழலில்தான் எல்லை தாண்டி வரும் வெளிநாட்டு மீனவர்களை வன்முறை மூலம் தாக்க விரக்தியின் அடிப்படையில் இலங்கை மீனவர்கள் முற்பட்டால் அவர்களை தடுக்க இயலாது. இந்த விவகாரத்தில் கடற்றொழிலாளர் அமைச்சரின் நிலைப்பாடு மீது இலங்கை மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். வெளிநாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும் எங்களின் நலன்களை காத்துக் கொள்ள எங்களுக்கு வேறு இருக்கவில்லை,” என்கிறார் அன்னலிங்கம் அன்னராசா.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் கடற்படையை மீறி மீனவர்களே வெளிநாட்டு மீனவர்களை தாக்குவதாக கூறுவது தவறில்லையா என்று கேட்டோம்.
மீனவர்கள்

“பல ஆண்டுகளாக நாங்கள் மிகவும் அமைதியாக போராடி வந்தோம். இலங்கை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது எங்களை சுற்றி இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் நின்று கொண்டு எல்லை கடக்கக் கூடாது என்று எச்சரிக்கின்றன. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இந்திய மீனவர்களின் 30க்கும் அதிகமான ட்ராலர் படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் இருப்பதை கண்டோம். ஆனால், அவற்றை விரட்டியடிக்க இலங்கை கடற்படை படகுகள் வரவில்லை. எங்களுடைய கடற்படை எங்களை பாதுகாக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். கடல் எல்லை தாண்டி வரும் இந்திய படகுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். யாரும் நடவடிக்கை எடுக்காததால் நாங்களே பிரச்னையை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.

“இந்திய படகுகள் மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின்களை பொருத்திக் கொண்டு இலங்கை பகுதிக்குள் நுழைகின்றன. எங்களுடைய படகுகளை தாக்க அவர்கள் முற்படுகிறார்கள். அதனால் உயிர் பிழைக்க நாங்கள் ஓடி வர வேண்டியிருந்தது,” என்றும் இலங்கை மீனவர்கள் கூறினர்.

தமிழக மீனவர்கள் பதில் என்ன?

தமிழக மீனவர்களை கண்டித்து இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் குறித்து ராமேஸ்வரத்தில் உள்ள தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேலுவிடம் பிபிசி பேசியது.

அப்போது அவர், “கடலில் இலங்கை மீனவர்களை இந்திய மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் கொலை செய்ய வேண்டும் என்றோ யாருக்கும் நோக்கம் இருந்ததில்லை,” என்று கூறினார்.”தமிழக விசைப் படகு மோதியதில் இலங்கை மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல்.

அச்சம்பவம் குறித்து இலங்கை மீனவ சங்க தலைவர்களை தமிழக மீனவ சங்க தலைவர்கள் தொடர்பு கொண்டு கேட்கும் போது, இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்,” என்று குமரவேலு கூறினார்.”தமிழக மீனவர்கள் விசைப்படகு முட்டியதில் இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டு இருந்தால் நிச்சயம் அவர்களுடைய ஃபைபர் படகு கரை ஒதுங்கி இருக்க வேண்டும். அதேபோல் படலில் மூழ்கிய மீனவர்கள் உயிருடன் கரை திரும்பி இருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

“இலங்கை மீனவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும். தமிழக மீனவர்களால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை,” என்கிறார் குமரவேலு.

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களில் ஒருவரான செல்வத்தின் மனைவி கோகிலா பிபிசி தமிழிடம் பேசுகையில், தனது கணவரையும், உடன் சென்ற மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தங்களுக்கு சொந்தமான படகை விடுவிக்க உதவிடுமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த படகை சார்ந்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் உள்ளனர். ஒரு கோடி மதிப்பிலான அந்த படகுதான் தங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது என்றும் கோகிலா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: