புதன், 27 அக்டோபர், 2021

இல்லம் தேடி கல்வி: கி.வீரமணிக்கு ஸ்டாலின் பதில்.. இதுதான் திராவிடத்தின் கொள்கை மறந்துவிடக் கூடாது!

 மின்னம்பலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” இன்று (அக்டோபர் 27) தொடங்கி வைத்தார்.
கொரோனா காரணமாகப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் கல்வியில் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, 1 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி முதலில் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்வியின் மிக்கதாம்

செல்வமொன்று இல்லையே

கண்மணி கேளடா நீ என்றன்


சொல்லையே!

செல்வம் பிறக்கும் நாம் தந்திடில்

தீர்ந்திடும்

கல்வி தருந்தொறும் மிகச்

சேர்ந்திடும் என்ற பாரதிதாசன் பாடலை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய நண்பர் அன்பில் பொய்யாமொழியை நினைத்து இந்த நிகழ்ச்சியில் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். காரணம் அவருடைய மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, அத்துறையிலிருந்து செய்யக் கூடிய செயல்களை எல்லாம் பார்த்தால், அவரது தந்தை எந்தளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பாரோ அத்தகைய மகிழ்ச்சியை நான் அடைந்துகொண்டிருக்கிறேன்.

அனைத்து திட்டம் போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்லிவிடமுடியாது. இந்த திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்போகிறது. மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 100ஆண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியைத் திண்ணை பள்ளிக் கூடம் வாயிலாகக் கொண்டு சேர்த்தது திராவிட இயக்கம்.

திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகளும், அதைப் பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இதுதான் திராவிடத்தின் கொள்கை மறந்துவிடக் கூடாது. நீதிக் கட்சி தோன்றிய பிறகு, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு எல்லாம் உணவு அளிக்கக் கூடிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து காமராஜர், எம்.ஜி.ஆர். கலைஞர் ஆகியோரால் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இதுபோன்று இல்லம் தேடி கல்வித் திட்டமும் விரிவுபடுத்தப்படும். கோவிட் நெருக்கடியில் உருவானதுதான் இல்லம் தேடி கல்வித் திட்டம். கொரோனா மாணவர்களின் ஆர்வத்தைக் குறைத்துவிட்டது. இதை எப்படிச் சரி செய்வது எனச் சிந்தித்து, பள்ளி நேரம் போலவே மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது தான் இல்லம் தேடி கல்வித் திட்டம். மாணவர்களின் வீடுகளுக்கு அருகே இந்த திட்டம் செயல்படும். பள்ளி நேரம் போலவே இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளியோடு கடமை முடிந்துவிடாமல் வீட்டிற்குச் சென்று பாடம் கற்றுத்தரப்படும்.

நேரடி வகுப்புகள் தரக்கூடிய பயனை ஆன்லைன் வகுப்புகள் தராது. மீண்டும் பள்ளியைத் தேடி வரும் மாணவர்களை ஆசிரியர்கள் இனிமையாக நடத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தைக் காட்ட வேண்டும். கொரோனாவால் இழந்த காலத்தை ஈடுகட்ட மாணவர்கள் அதிக முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

பள்ளி நேரத்தில் மட்டும் மாணவர்களைப் பழைய நிலைக்கு படைமாற்றம் செய்துவிட முடியாது. அதனால் தான் பள்ளி நேரம் முடிந்த பிறகும் மாணவர்களுக்குப் பயிற்சி தர இருக்கிறோம். இதற்காக ஆர்வமாக முன்வந்துள்ள தன்னார்வலர்களை வாழ்த்துகிறேன். இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும்.

வீடுகளில் படிக்க முடியாத குழந்தைகளுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முன் வந்து சொல்லிக் கொடுக்கலாம். யாராலும் அழிக்க முடியாத செல்வம் கல்வி. அத்தகையைக் கல்வி செல்வத்தை அனைத்து குழந்தைகளும் பெற்றாக வேண்டும்.

சுயமரியாதை, சமூக நீதி, மனிதநேயம் கொண்டவர்களாக நம் மாணவர்கள் வளரவேண்டும். அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அந்த அடிப்படை நோக்கங்களை அடைய இந்த இயக்கம் பெரிய புரட்சியைச் செய்திருக்கிறது. இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, இனத்தின் ஆட்சி. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற மகத்தான தத்துவத்தைக் கொண்ட இயக்கம்தான் இந்த இயக்கம். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று கி.வீரமணி பெயர் குறிப்பிடாமல் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

“அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறி அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்திற்கு வளர்ந்து வந்திருக்கிறார்கள். அதற்கு அடிப்படை திராவிட இயக்கத்தை வலுவோடு வழிநடத்தி இந்த இனத்தின் அறிவையும், மானத்தையும் தட்டியெழுப்பிய தலைவர்கள் தான். பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைகள் தான்'' என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக நேற்று (அக்டோபர் 26) இந்த இல்லம் தோறும் கல்வித் திட்டம் என்பது ஆர்,எஸ்.எஸ்.சின் திட்டம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

“ நமது பள்ளிக் கல்வித் துறை தெரிந்தோ, தெரியாமலோ ‘பழைய கள் புதிய மொந்தை' என்பதுபோல் புதிய கல்விக் கொள்கையின் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாய் உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேத னையைத் தருவதாக உள்ளது. அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவே ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்!'

கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ் வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை-2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது” என்று கி.வீரமணி எச்சரித்திருந்தார்.

ஆனால் இன்று முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை மிகவும் புகழ்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷையும் பாராட்டியிருக்கிறார். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று கி.வீரமணியின் பெயர் குறிப்பிடாமல் விழாவில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

கருத்துகள் இல்லை: